a K Vijay Anandh review
இது போன்ற சர்வதேசத்தரம் மற்றும் சர்வதேச அளவில் எந்த ஒரு நாட்டிற்கும் மொழிக்கும் பொருத்தமான அற்புதமான கதைக்களம், 100% சிறப்பான பட ஆக்கம் , இப்படிப்பட்ட ஒரு படைப்பிற்கு மதிப்பெண்களோ ஸ்டார்களோ கொடுத்து அடக்கிவிட முடியாது. ஆகவே, இதற்கு அதிகப்பட்ச ஸ்டார்களை அள்ளி வழங்கி விடுவதுதான் முறை.
நேர்மையான முஃபாசா அரசன், சேட்டைக்கார இளவரசன் சிம்பா அமைதியும் மகிழ்ச்சியும் செழுமையுமாக நாடு, இல்லை இல்லை காடு.
நரித்தனத்துடனான ஒரு சித்தப்பா சிங்கம் ஸ்கார், கழுதைப் புலிகளோடு சேர்ந்து அரசனை வீழ்த்தி, இளவரசனை விரட்டி நாட்டை, அதாவது காட்டைக் கைப்பற்றுகிறது.
இளவரசனுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் அரசி மற்றும் இளவரசி.
கழுகுக்கு இரையாகவிருந்த இளவரசன் சம்பாவைக் காப்பாற்றும் பன்றி மற்றும் மங்கூஸ் ( டிமான் & பும்பா )
இளவரசனைத் தேடிவரும் இளவரசி நலா.
தன் நிலை மறந்து வேட்டையாடும் குணம் மறந்து சாதுவாக மாறிவிட்ட சிம்பா வீறுகொண்டு எழுந்து தன் சித்தப்பாவைக் கொன்று, நாட்டை மீட்டு நல்லாட்சி வழங்குவது தான் லயன் கிங் படத்தின் கதை.
சிங்கம் உள்ளிட்ட நிஜமான விலங்குகளைப் பல நாள் பழக்கப்படுத்தி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் களோ என்று பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம்.
"வளங்களை அனைவருக்கும் பொதுவானவைகளாக்குப்பவன் தான் நல்ல அரசன், கிடைக்கும் அனைத்தையும் தனக்காக எடுத்துக் கொள்பவனல்ல அரசன்.." இந்த ஒரு வசனம் போதும், உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் ஊழல் அரசியல்வாதிகள் வெட்கித்தலைகுனிய.
முஃபாசா மற்றும் வளர்ந்த சிம்பாவின் கம்பீரம் மற்றும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
சிறுவயதில் சிம்பா, நலா வைச் சேர்த்துக் கொண்டு செய்யும் சேட்டை ஆபத்தில் போய் முடிகிறது. அவர்களை முஃபாசா காப்பாற்றிய நொடியிலிருந்து ஒரு அமைதி ஆட்கொள்கிறது. முஃபாசாவின் கால் தடத்திற்குள் காணாமல் போகும் தன் கால் தடத்தைப் பார்த்து, நாம இன்னும் வளரவில்லை என்று சிம்பா கற்றுக் கொள்ளும் அந்த ஒரு ஷாட் அற்புதம்.
மன்னர் குடும்பத்தின் விசுவாசமான சேவகனாக சாசு , ஒரு பறவை அதற்கு மனோபாலா குரல் கொடுத்திருக்கிறார், பொறுப்பும் நகைச்சுவையும் கலந்த அட்டகாசமான கதாபாத்திரம், அதற்கு மிகவும் பொருத்தமான குரல்.
டிமாம் & பும்பாவின் அறிமுகக் காட்சியே அட்டகாசம், ரோபோ ஷங்கர் மற்றும் சிங்கம் புலி இருவருக்கும் குரல் கொடுத்திருக்கிறார் கள், படம் முழுவதும் நகைச்சுவைச் சரவெடி.
வில்லன் ஸ்காருக்கு தன் கம்பீரக்குரலால் வலுசேர்த்திருக்கிறார் அரவிந்த்சாமி.
சித்தார்த்தின் குரலில் சிம்பா , அனைவரையும் கவர்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷா நலாவா அந்த அளவுக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.
உலகில் அத்தனை நாடுகளிலும் அத்தனை மொழிகளிலும் வெளியாகி அனைவராலும் குறிப்பாக குழந்தைகள் அத்தனை பேரும் கொண்டாடும் அளவிற்கான கதைக்களம்.
ஹக்கூனா மடட்டா ( கவலையை விடு..) உட்பட வரும் பாடல்களும் அருமை, ஹன்ஸ் சிம்மரின் இசைக்கு இதயங்களைப் பறிகொடுக்கப் போகிறோம்.
வால்ட் டிஸ்னியின் தயாரிப்பில், ஜான் ஃபேவ்ரு வின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தி லயன் கிங், வெறும் பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகிப் போகியிருக்கிறது.