a K Vijay Anandh review
உண்மையிலேயே நீங்க மன்னர் குடும்பம், ஆனால் தலைமுறை தலைமுறையா பொம்பளை விஷயத்தில் வீக்… ஆமா, நீ எப்படி இந்த சிலையை அவகிட்ட கொடுத்த… என்று கேட்கும் அந்த நொடி… சுதாரித்துக் கொண்டு.. இப்ப அது எதுக்கு..? என்கிறவாறு ரியாக்ஷன் காட்டும் ஜெயம் ரவி, அழகு. ஒரு நிமிடத்திற்குள் வந்துபோகும் பிளாஷ்பேக் காட்சிகள் என்றாலும், படத்தின் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் சிலை சம்பந்தப்பட்ட அந்த காட்சியை சுவராஸ்யமாக விவரித்திருக்கிறார் இயக்கு நர் பிரதீப் ரங்க நாதன்.
லாஜிக் மீறல்களிலும் பெர்பெக்ஷன் குறைபாடுகளிலும் கவனம் செலுத்தினால், வணிக ரீதியிலான வெற்றிக்கு தாமே வேகத்தடை போட்டுவிட்டதாகிவிடும். ஆனாலும், மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக்கை ரசிகர்கள் உணர்ந்துவிட இடம்கொடுத்துவிடாதபடி இயக்கி வெற்றியும் பெற்றுவிட்டார். மாணவப்பருவத்திற்காக உடல் எடையை குறைத்தார் ஜெயம் ரவி என்பது படவெளியீட்டிற்கு முந்தைய செய்தி, எந்தவிதமான திட ஆகாரங்கள் எடுத்துகொள்ள முடியாமல் 16 வருடம் படுக்கையில் இருந்து எழும் ஜெயம் ரவி தான் நியாயமாக எடையைக் குறைத்திருக்க வேண்டும். இது ஏன் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லையென்றால், கோமாவில் இருப்பது அவரல்ல, நாம தான் என்று ரசிகர்களை நினைக்க வைத்துவிடுவதால்.
ஆமா, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தாமல் மொபைல் போனே கதி என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோமாவில் இருப்பதால் தானே,
ஒரு முன்னாள் ரவுடி/ கொலைகாரன் , கே எஸ் ரவிக்குமார், இந்நாள் எம் எல் ஏ ஆக முடிகிறது.!
முன்னாள் ஏரி, இந்நாள் அடுக்ககமாக முடிகிறது..! அதனால் தானே பெருமழை பெய்தால், ஊருக்குள் வெள்ளம் வருகிறது..!
யாருடைய சிலையோ இன்று யாருக்கோ உரித்தாகிறது..!
அட, கூடப்படித்த பெண்ணிற்குத் திருமணமாகி 2 குழந்தைகளும் பிறந்துவிட்ட நிலையிலும், அவரை விட அழகான காஜல் அகர்வாலுக்கு இன்னும் திருமணமே ஆகாமல் இருக்கிறது..!
இன்னமும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்சினைக்கு ஒரு முடிவுகாண்போம் என்று அரசியல்வாதிகள் 40 வருடங்களாகவே சொல்லிக் கொண்டிருக்கமுடிகிறது..! ( படம் 2016 வரை நடப்பதாகக் காட்டியிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் )
உலகமே கைக்குள் அடங்கிவிட்ட பிறகு, நாமும் அந்த உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிறோம், குறிப்பாகக் குழந்தைகள் ,அவர்களின் இயல்பான துறுதுறுப்புகள் காணால் போய்விடுகின்றன. அவற்றை மீட்டெடுக்க, இந்த யுகத்தின் தொழி நுட்ப வளர்ச்சி தன்னை இன்புளுயன்ஸ் ஆக்கிவிடாமல் பார்த்துக் கொண்டால் தான் முடியும் என்பது போல ஜெயம் ரவி நடந்துகொண்டு, தனது பேசா மருமகனைப் பேசவைக்கிறார்.
ஜெயம் ரவி, ஒரு நட்சத்திரமாக, அதாவது ரசிகர்கள் வேறு அவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத இயல்பான திரைமொழியைக் கொண்டிருப்பது அவரது பெரியபலம். மிகவும் இயல்பான, பக்கத்துவீட்டுப்பையன் என்று கூட சொல்லமுடியாது, நம் வீட்டில் ஒருவராகவே தெரிகிறார்.
காஜல் அகர்வால், இன்னொரு ஒவ்வொரு காட்சியிலும் தான் இருக்கவேண்டும் என்று நினைக்காமல், கதை தேவைப்படும் போது இருந்தால் போதும் என்று நினைத்து நடித்திருப்பது, ஆக்கப்பூர்வமான விஷயம்.
கே எஸ் ரவிக்குமார், அட அன்றைய வடிவேலுவுடனும் ஜோடி போட முடியும், இன்றைய ராமருடனும் ஜோடி போட முடியும் கூடவே வினோதினி வைத்திய நாதனுடனும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் ஆளுமை.
ஜெயம் ரவியின் தங்கையாக, யோகிபாபுவின் மனைவியாக நடித்திருக்கும் ஆர் ஜே ஆனந்தியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த ஒரு காட்சியில் அண்ணனிடம் அந்தளவிற்குப் பொங்கியிருக்கவேண்டாமோ என்று நினைப்பதைத் தவிர.
யோகி பாபு, இரண்டு மூன்று படங்களில் நாயகனாக நடித்திருப்பதை விடச் சிறந்த திரைமொழியுடன் கூடிய நடிப்பை இதில் வழங்கியிருக்கிறார். இவர் மாணவப்பருவத்திற்காக உடலைக் குறைக்கவெல்லாம் இல்லை, ஆனாலும், இப்போ நான் ஸ்கூல் பையன், இப்போ நான் குடும்பஸ்தன், இரண்டு குழந்தைகளுக்கு அப்பா, ஒரு கார்பரேட் எம்ளாயி என்று நினைக்க வைத்துவிடுகிறார் பாருங்கள், அற்புதம்.
டாக்டர் சாராவைப் பற்றியும், அவரது மனைவி சம்யுக்தா ஹெக்டேவைப் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். ஜெயம் ரவியைக் கீழே தடவோ தடவோ என்று தடவ விட்டுவிட்டு ( எதை என்பதை படம் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் ) பரண்ல போய் தேடோ தேடு என்று தேடுவது கொஞ்சம் நகைப்புரியதாக இருந்தாலும், எதிகாலத்தில் அதிகம் தேடப்படும் நடிகராக வலம் வருவார்.
யோகிபாபுவுக்குச் சொன்னது இவருக்கும் பொருந்தும், பள்ளி மாணவியாக இருப்பதை விட அம்மாவாகிவிட்ட பிறகும் அப்படி ஒரு அழகு மனைவியாக – முன்னாள் காதலியாக சம்யுக்தா ஹெக்டே அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
வருண், ஒரு சிறு ஆப்ரஷேனில் வந்து, ஜெயம் ரவி வில்லன்களையும் ரசிகர்களயும் கிச்சுகிச்சு மூட்ட உதவுகிறார்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர் எம் நாதனும், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியும் கதை நகர்த்தலுக்கு உதவியிருக்கிறார்கள், கச்சிதமாகவே. வெள்ளச் சேத அரங்கு மட்டுமல்ல, காஜல் அகர்வாலுக்குக் கோயில் கட்டிப் புண்ணியம் தேடிக் கொண்ட கலை இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும்.
ஒவ்வொரு மாமங்கத்திற்கும் ஒரு சில சிறந்த இயக்குநர்கள் ( வணிக சினிமாவுக்காக என்றாலும் ) தோன்றுவது காலத்தின் கட்டாயம். பிரதீப் ரங்க நாதனின் வயதும் திறமையும் அவரை நீண்ட பயணத்திற்கு இட்டுச் செல்லும்.
தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், விநியோகஸ்தர் சக்திவேலனுக்கு நிறைவான படமாக கோமாளி இருக்கும்.
பேரிடர் காலங்களில் ஒன்றுகூடுகிறீர்களே , அன்னைக்கு நடு ரோட்டுல ரெளடிங்க என்னை அடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பேராச்சும் வந்திருந்தீங்கன்னா நான் இத்தனை நாள் கோமால கிடந்திருக்கமாட்டேனேடா என்று ஒரு வசனம் வைத்திருந்தால் படம் முழுமை பெற்றிருக்கலாமோ என்று தோன்றாமல் இல்லை!