a K.Vijay Anandh review
சமீபத்தில் ஒரு கேஜெட் Gadget விளம்பரம் மனதைக் கவர்ந்திருக்கும் என்றால் அது மிகையல்ல. அதாவது, கணவன் கேட்பான், சூப்பரான வடை எங்கே கிடைக்கும் என்று, அட அது உங்க சமையலறையில் தான் என்று அந்த கேஜெட் பதில் செல்லும்.
அதைப் போலத்தான் 100% காதல் படமும், உறவுகளும், அன்பும், காதலும், கலாட்டாக்களும், பஞ்சாயத்துகளும், தொழில் சார்ந்த விஷயங்களில் உதவிகளும் ஒரு குடும்பத்திற்குள்ளாகவே நடப்பதாக, மிகவும் அருமையான படமாக வெளிவந்திருக்கிறது.
ஜீவி பிரகாஷ் குமார் வீட்டிற்கு அதிரடியாக ஒரு ரெய்டு Raid வேண்டும். வணிகவரித்துறை ரெய்டோ சிபிஐ ரெய்டோ அல்ல, சினிமா ரெய்டு. சினிமா விழாக்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் மற்றும் பொதுவெளியில் ஒரு மாதிரி வரும் ஜீவி பிரகாஷ், நடிப்பதற்கு இன்னொருத்தரை அனுப்புகிறாரோ என்கிற அளவிற்குப் படத்திற்குப் படம் பெரிய ஒப்பனை வேறுபாடுகள் இல்லாவிட்டாலும், அந்தந்தக் கதாபாத்திரங்களுக்குள் அப்படிப் பொருந்திப் போகிறார். இந்தப்படத்தில் கூட முதல் பாதியில் கல்லூரி மாணவராகவும் அடுத்த பாதியில் இளம் தொழிலதிபராகவும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
படிப்பின் முக்கியத்துவம், இளம் தொழிலதிபர்கள் என்று மிகவும் நேர்மையான விஷயங்களை இளைஞர்கள் மத்தியில் விதைக்கும் படமாக 100% காதல் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஷாலினி பாண்டே நாயகனுக்குச் சமமான ஒரு கதாபாத்திரம், ஏன் பல இடங்களில் நாயகனைத் தூக்கிச் சாப்பிடும் கதாபாத்திரம். இப்படி ஒரு அத்தை மகள் இருந்தால், இந்தியாவின் இளைஞர் சக்தி வேற லெவலில் முன்னேறிவிடும். கிராமத்திலிருந்து வருகிறார் என்பதற்குப் பதிலாக, அமெரிக்காவிலிருந்தோ கொரியாவிலிருந்தோ இந்தியாவிற்கு வருகிறார் என்று வைத்திருக்கலாம், அப்படிப்பட்ட உடல்மொழி. மகாலட்சுமி மகாலட்சுமி என்று ஜீவி பிரகாஷ் இவரை அழைக்கும் அழகே அழகு. பதிலுக்கு இவரும் பாலு மாமா என்று உருகியிருக்கிறார்.
ஆறு வாண்டுகளும் அட்டகாசப்படுத்துகிறார்கள்.
ஒரு பணக்கார குடும்பத்தலைவனாக அதே நேரம் உறவுகளை மதிக்கும் பண்பாடு மிக்கவர்களாக தலைவாசல் விஜய், அவரது மனைவியாக ரேகா இருவரும் ஜொலிக்கிறார்கள். ரேகா, மாமியார் ஜெயச்சித்ராவிற்குக் காலில் எண்ணெய் போட்டுவிடும் காட்சி இது சினிமாதான என்கிற சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது. கிராமத்துப் படங்கள் மட்டும் தான் நேட்டிவிட்டி படங்கள் என்றல்ல, இந்தப்படத்தை அர்பன் நேட்டிவிட்டி Urban Nativity என்று வகைப்படுத்தலாம்.
மகாலட்சுமியின் அப்பாவாக வரும் ஆர் வி உதயகுமார். ஆட்டோவில் ஒரு கூடை நிறைய பண்டங்களுடன் வந்து இறங்கும் அவரது அறிமுகக் காட்சி, அவரது இயக்கத்தில் 27 வருடங்களுக்கு முன் வெளிவந்த சிங்காரவேலன் படத்தில் படத்தில் மனோ வீட்டிற்கு ஆட்டோவில் வந்திறங்கும் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சியை நினைவு படுத்துவது சுவராஸ்யம்.
ராபர்ட் ராமையாவாக வரும் தம்பி ராமையா, நகைச்சுவைக் காட்சிகளில் அட்டகாசப்படுத்துகிறார். அவருக்கும் அப்புக்குட்டிக்கும் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி அமைந்திருக்கிறது.
தம்மு, தண்ணி, மாணவிகளையும், ஆசிரியர்களையும் கலாய்த்தல், இரட்டை அர்த்த வசனங்கள், ரூட்டுத்தலை என்றிருந்த தமிழ் சினிமா கல்லூரிக்காட்சிகளில், முதல் ரேங்க், இரண்டாவது ரேங்க் என்று மாணவர்களுக்குள் போட்ட என்று இருப்பதாகக் காட்டுவது, முதல் ரேங்க் வாங்கும் மாணவரின் பெயரைக் கட்டிடத்திற்கு வைப்பதாக பேராசிரியர் மனோபாலா ஊக்கப்படுத்துவது எல்லாமே கிளாசிக் Classic .
அடடா நம்ம குணம் தான் நம்ம பேரனுக்கும் இருக்கு, அவன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னா நம்ம பிடிவாதத்தை விட்டுக் கொடுத்து மனைவி ஜெயச்சித்ராவுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நாசர் முடிவெடுக்கும் காட்சி, மிகவும் உணர்ச்சிபூர்வமான காட்சியாக இருந்தாலும் காமெடியாக Comedy வொர்க் அவுட் workout ஆகிவிடுகிறது, அது படத்திற்குப் பலம் தான். வித்தியாசமான / அழுத்தமான கதாபாத்திரங்களில் தான் ஒரு நடிகனுக்குத் தனது திறமையை வெளிக்காட்ட வாய்ப்பிருக்கும் என்றில்லாமல், இயல்பான பாத்திரங்களிலேயே தனி முத்திரை பதிக்கலாம் என்கிற நம்பிக்கையை சக நடிகர்களுக்குள் விதைத்திருக்கிறார், நாசர்.
அஜய் இஸ் ஸ்டில் கிரேட் என்று ஒரு வசனம் வைத்திருக்கலாம், இறுதிக் காட்சியில் நாயகிக்கு, அந்த சூழ் நிலையிலும் , அவரைப் புரிந்துகொள்ளாமல் ஜீவி பிரகாஷ் அபத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது. அந்தளவிற்கு அமைதியாகவும் கண்ணியத்துடன் விடைபெற்றுவிடுகிறார் யுவன் மயில்சாமி, தமிழ் சினிமாவில் நாளைய நம்பிக்கை நட்சித்திரம்.
இணை இயக்குநராகப் பணியாற்றியிருப்பதுடன் கோடிட்ட இடங்களை நிரப்ப வழக்கமாகப் பயன்படும் உதவி இயக்கு நர்கள் போல, ஜீவி பிரகாஷ் குமார் தனது கதையைச் சொல்லும் காட்சியில் ஒரு நடிகராகவும் அசத்தியிருக்கும் ராம சேஷன், இந்தப்படத்தின் வசனகர்த்தாவும் கூட. ஒரு வார்த்தையைக் கூட அநாவசியமாகப் பயன்படுத்தவில்லை.
ஆம், அந்த கிளைமாக்ஸுக்கு முந்தைய, நாயகன் – நாயகி சம்பந்தப்பட்ட, ஜீவி பிரகாஷ் குமார் நீண்ட வசனங்களைப் பேசும் காட்சியை இன்னும் கொஞ்சம் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம், ஜீவி அதற்கு இன்னும் நிறைய மெனக்கெட்டிருக்கலாம்.
இசையும் பாடல்களும் இருந்தாலும், ஆர் கணேஷின் ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ், ஷாலினி பாண்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே போதுமானதாக இருந்துவிடுகிறது.
மற்றபடி, ஒரு அழகான, மென்மையான, நேர்மறையான படமாக 100% காதலைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் எம் எம் சந்திரமெளலி.