a K.Vijay Anandh review
உலகின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 750 கோடி என்றால், மிக மிக அவசரம் அதில் சரிபாதி 375 கோடி பெண்களின் தவிர்க்க இயலாத பிரச்சினையைப் பற்றி பேசுகிற படமாக அமைந்திருக்கிறது.
தழையத்தழைய புடவை கட்டிக் கொள்ளும் தமிழ் நாட்டுப் பெண் ஆனாலும் சரி, அரைகுறை ஆடைகளில் ஆடை சுதந்திரத்தோடு அலையும் மேற்கத்திய பெண்ணாக இருந்தாலும் சரி, இயற்கை உபாதையான சிறு நீர் கழிப்பதை பொது இடத்தில் தீர்த்துக் கொள்வதில்லை. ஆண்கள், இதில் விதிவிலக்கு, குறிப்பாக இந்திய அதிலும் குறிப்பாக கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய என்று பெருமை பீத்திக் கொள்ளும் தமிழ்க்குடியில் உள்ள ஆண்கள், அதிலும் குறிப்பாக நகரத்தில் வசிக்கும் ஆண்கள். அவர்கள் கண்களுக்குக் காணுமிடமெல்லாம் கழிப்பறைகள் தாம், காம்பவுண்ட் சுவர்கள் முதல் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகள் வரை.
அப்படி, ஒரு வக்கிரம் பிடித்த ஆண்பாலினமும் அவனால் பாதிக்கப்பட்ட பெண்பாலினத்தையுமாக அலசுகிறது மிக மிக அவசரம்.
வெளி நாட்டு முக்கிய பிரதி நிதியின் பாதுகாப்புக்காக, ஆற்றுப்பாலத்தின் நடுவில் இறக்கிவிடப்படும், பிரியங்கா தான் நாயகி. தன் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் முன்னே, முக்கிய பிரமுகர் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டு விடுகிறார்.
கூடவே ராமதாஸ் மற்றும் இன்னொரு பெண் காவலர் உள்ளிட்ட காவலர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட, காலையில் பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்பும் வரையில் அவர்களின் வீதி தவம், கடுந்தவம் தான்.
நடுவே , பிரியங்கா வை வெறுபேத்தவே வருவது போல பிரேக் டவுன் ஆகும் தண்ணீர் டிராக்டர் ஓட்டுநர் குணா, முதலாளி வெற்றிவேல் இன்னொரு பக்கம் சங்கேஸ்வரர் திருவிழாவில் திகில் ஏற்றுவது போல் திரிந்து கொண்டிருக்கும் காவேரி மாணிக்கமும் உம் கூட்டாளிகளும்.
இன்னொரு பக்கம் காண்பதையெல்லாம் காணொளியாக்கி யூடியுப்பில் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கும் குறும்புக்கார சேனல் முதலாளிகள் சாமுண்டியும் அவனது நண்பனும். இவர்களது யூடியுப் சேனல் நிகழ்ச்சியின் பெயர் தான் படத்தின் தலைப்பு.
அந்தப்பாலமானது பவானி ஆற்றின் தடுப்பணை யாக இருப்பதால், ஒரு பக்கம் தேங்கி நிற்கும் பெருநீர், இன்னொரு பக்கம் அதிலிருந்து பெருக்கெடுக்கும் வடி நீர், இன்னொரு பக்கம் பிரியங்காவை அவஸ்தைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் சிறுநீர் என்று இரண்டு நீர்களை நீர்களாகவும் மூன்றாவதை உணர்ச்சிகளாகவும் காட்டி பிரமிப்பூட்டுகிறார்கள் இயக்குநர் சுரேஷ் காமாட்சியும் ஒளிப்பதிவாளர் பால பரணியும்.
பிரியங்கா கச்சிதமான தேர்வு, அவர் வளர்க்கும் குழந்தை அக்காவுடையது என்று அறியப்படு காட்சி அருமை. அவருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக குடித்துவிட்டு ரோட்டில் படுப்பதாய் அவரது அக்கா கணவர் சொல்லுமிடமும் அருமை.
பெட்பேனுடன் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு பிரியங்கா வுக்கு உதவ முற்படும் ஹரிஷ், அவரது முயற்சிகள் ஏதேச்சையாக தோற்றுப்போவதில் , உடைந்துவிடுகிறார், யதார்த்தம்.
இந்த மனுஷனுக்கு ஒப்பனையோ எதுவுமே தேவையில்லை, வந்து நின்று ஒரு முழி முழித்தாலே எதிராளி ஒன்னுக்குப் போய்விடுவான், அப்படி ஒரு வரம் வாங்கி வந்திருக்கிறார் நடிகர் முத்துராமன். வெறும் பார்வையாலும் சாதாரண வார்த்தைகளாலுமே வக்கிரத்தை உக்கிரமாக வெளிப்படுத்துகிறார். உயரதிகாரியின் பின்னால் சர்வ நாடிகளையும் அடக்கிக் கொண்டு சுற்றும் ஜந்துக்கள் போன்ற காவலர்களின் பிரதி நிதியாய் விகே சுந்தர். தல என்று அழைக்கப்படும் அஜித்குமாரை உருவாக்கியதில் இவருக்கும் பங்கு உண்டு, ஆனாலும், இவருக்குத் திரையில் தலையைக் காட்டுவதற்கே இவ்வளவு தாமதம்.
கட்டளைகளை செம்மொழித்தமிழில் பிறப்பிக்கும் காவல்துறை உயரதிகாரியாக சீமான், அனைத்தையும் அறிந்துகொண்டு ஆவண செய்வதற்குள், மழை முந்திக்கொள்கிறது.
மிக மிக அவசரம், திரை இலக்கணங்களை மீறிய புது இலக்கணம்.
கதையாசியர் ஜெகனும், இயக்குநர் சுரேஷ் காமாட்சியும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், இது வேற லெவல் படமாகியிருக்கும் என்பதையும் தவிர்ப்பதற்கில்லை.
இப்படிப் பட்ட படத்தை வாங்கி விநியோகம் செய்யும் ரவீந்தர் சந்திரசேகர் போற்றுதலுக்குரியவர்.