a K Vijay Anandh review
அட நம்ம சேரனா..? முகத்தில் தாடியும், அதற்குள் மனைவியையும் மகளையும் பிரிந்துவாடும் சோகமும், வில்லன்களிடம் மாட்டிக் கொண்ட தன் மகள் என்ன ஆகப்போகின்றாளோ என்று பதைபதைக்கும் போதும், குற்றவாளிகளை வேட்டையாடும் போது காட்டுன் ஆக்ரோஷமுமாக அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
வெளி நாடு போய்ட்டா, அடுத்து நாலு வருஷங்களுக்குப் பார்க்க முடியாது, எனது மகள், ஒரு 10 நாள் என்னிடம் இருக்கட்டுமே என்று உருகி அதற்காக மனைவியை நிரந்தரமாகப் பிரியக்கூடத் தயாராக இருப்பதாகக் கூறும் சேரன் உருக வைக்கிறார்.
சிருஷ்டி டாங்கே வைக் காப்பாற்றி இர்ஃபான் உள்ளிட்ட வில்லன்களை வேறு ஒரு வழக்கில் சிக்க வைக்கும் போலீஸ் மூளையில் ஜொலிக்கிறார்.
ஒட்டுமொத்தமாக நடிகர் சேரனுக்கு இது இன்னொரு வாசலைத் திறந்து வைத்திருக்கும் படம் என்றால் அது மிகையாகாது.
அட, மும்பை கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் தர்பாரில் உடன் இருக்கும் நான்கு காவலர்களில் ஒரு பெண் காவலருக்கும் முக்கியத்தும் கொடுத்திருப்பார்கள். அதுபோலவே, கிரைம் பிராஞ்ச் அதிகாரி இராஜா செந்தூர் பாண்டியன் - சேரன் - அணியில் இருக்கும் நான்கு பேரில் ஒரு பெண் காவல்துறை அதிகாரியாக வந்து அசத்தியிருறார் சாரா. பெண்களுக்கு முக்கியத்தும் கொடுத்து ஹீரோவுக்கு இணையாக அதிகாரியாக வலம் வர வாய்ப்பளிக்கும் இயக்குநர் களுக்கும் அதற்கு ஆதரவு கொடுக்கும் ஹீரோக்களுக்கும் பாராட்டுகள்.
சிருஷ்டி டாங்கே மிகவும் துணிச்சலாக நடித்திருக்கிறார், சில காட்சிகளில். அவரை.உச்சக்கட்டமாக பாராட்ட ஒரு விஷயம் இருக்கிறது. அதைச் சொல்லிவிட்டால் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்துவிடும்.
இர்ஃபான், அற்புதமாக நடிகன் என்று இந்தப்படத்திலும் நிரூபித்திருக்கிறார்.
ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லரில், பருவ வயது பெண்களுக்கான முக்கியமான செய்தியும் இருக்கிறது.
அழுத்தமான கதையை மிகவும் திட்டமிட்ட படப்பிடிப்புகளை அமைத்து கொடுத்த விதத்தில் இயக்குநர் சாய் ராஜ்குமார் பல தயாரிப்பாளர்களால் கவனிக்கப்படுவார்.
சதுரங்க காய்களை நகர்த்தும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் காட்டப்படும் டைட்டில் காட்சியே பிரமிக்க வைக்கிறது.
ஒரு குடும்பத்தில் அதன் தலைவனாக விளங்கம் தந்தையே ராஜா, புரியாத வயதில் தவறான காய்களை நகர்த்தி அவருக்கு செக் வைப்பது அல்லது தன்னையறியாமல் அதற்குக் காரணமாக அவர்களது மகள்களே இருந்துவிடக்கூடாது என்பது இந்த ராஜாவுக்கு செக் சொல்லும் செய்தி.