a K.Vijay Anandh review
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பையனையும் அவனைவிட உயர்ந்த சாதியைச் சேர்ந்த பெண்ணையும் காதல் திருமணம் அதாவது கலப்புத்திருமணம் செய்து வைத்துவிட்டு, அந்த ஒரே ஒரு ஜோடியின் வாழ்க்கையில் ஒளியேற்ற விளக்காக நிற்பதற்குப் பெயர் தான் சாதி ஒழிப்பா..?
சாதி ஒழிப்பிற்கு ஈவேரா என்கிற ஒற்றை மனிதர்தான் அதாரிட்டியா..? அவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்..? நாமாவோம் என்று தமிழர்களாக ஒன்று சேர்வதற்கு, தமிழகத்திலிருந்து எந்த ஒரு மாமனிதரும் கிடைக்கவில்லையா..?
எல்லோரும் ஒரு நாள் செத்துப்போகத்தான் போகிறோம் என்பது கடவுள் நம்பிக்கை இல்லாத ஈவெராவிற்கும் பொருந்தும். அப்படியிருந்தும் தன்னுடைய காலத்திலேயே தன்னுடைய சொத்துக்களை எந்த மனிதர்களுக்காகப் போராடினாரோ அந்த மனிதர்களுக்காக எழுதி வைத்துச் செத்துப்போகாமல், தனது இறப்பிற்குப் பின்பும் தனது சொத்துக்களை நிர்வகிக்க ஒரு வாரிசு வேண்டும் என்று திருமணம் செய்து கொண்டதை விடவா ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது..? அப்படிப்பட்ட மூட நம்பிக்கையின் உச்சமான ஈவெரா வை பகுத்தறிவின் பகலவன் போல காட்டி, ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றும் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.
ஈவெராவின் இந்து மத துவேஷம் ஒன்றையே தனது கொள்கையாகவும் கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக எப்படி அரசு செலவில் தமிழகம் முழுவதும் ஈவெராவிற்கு சிலை வைத்து, ஊர்களின் பெயர் வைத்து அழகு பார்த்ததோ அதைப்போலவே தயாரிப்பாளர் காசில், ஈவெரா புகழ் பாடியிருக்கிறார் சமுத்திரக்கனி.
சாதி ஒழிப்பு என்கிற போர்வையில் மொழி துவேஷத்திற்கு வழிவகுத்திருக்கிறார்கள். தெலுங்கு மொழி பேசும் அஞ்சலி குடும்பத்தார் சாதி ஒழிப்பிற்கு முதல் ஆளாய் வந்து நிற்பது போலவும், தமிழர்கள் அனைவரும் சாதி வெறி பிடித்தவர்கள் போலவும் காட்டியிருப்பதன் மூலம்.
முதலில், சாதி எப்பொழுது வந்தது..? சாதியால் மக்களைப் பிளவுபடுத்தியது யார்..? குலம் என்பது என்ன..? அது சாதியாக எப்படி மாற்றப்பட்டது..? என்பன போன்ற விஷயங்களில் ஆராய்ச்சி செய்து விட்டு, துரதிஷ்டவசமாக இன்று மக்களிடம் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருக்கும் சாதீயக் கட்டமைப்புகளைக் களைய அறிவுரை கூறுவது தான் ஆகச்சிறந்த சமூக நல்லிணக்கப்படைப்பாக இருக்கமுடியும்.
மதச்சார்பற்ற என்கிற போர்வையில் மதநல்லிணக்கம் என்பதை மறக்கடித்து இந்தமதத்தை மட்டும் இழிவுபடுத்திக் கொண்டிப்பது போலத்தான், நாடோடிகள் 2 சொல்லும் சாதி ஒழிப்பும்.