a K.Vijay Anandh review
1993 இல் இளமையும் துடிப்பும் ஆக்ரோஷமும் கொண்ட வால்டர் வெற்றிவேல் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளில் 2020 இல் அவர் ஓய்வு பெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட கேஸைத் தன்னுடைய பதவிக்காலத்தின் இறுதி கேஸ் ஆக எடுத்துக் கொண்டு புலனாய்வு செய்யும் போது – ஒரு அனுபவம் – அமைதியான ஒரு நேர்த்தி – என்று ஒரு உடல்மொழி வெளிப்படும் அல்லவா, அந்த உடல்மொழியுடன் இந்த வால்டர் அசத்தியிருக்கிறார்.
அரசு/தனியார் மருத்துமனையில் பிறந்த சில நாட்களே ஆன குழந்தை மாயம் என்று அன்றாடம் படித்துக் கடந்துவிடும் செய்திகளுக்குப் பின் இவ்வளவு பெரிய குற்றப்பின்னணி இருக்கிறதா..? என்று நினைத்துப் பார்க்கும் போது இந்த அரசியல்வாதிகளின் கோர நிர்வாகத்தைப் பார்த்து ஒரு நொடி இதயம் நின்றுவிடத்தான் செய்கிறது.
40 வருடங்களாகத் தன்னால் உருவாக்கப்பட்டவனைக் கூட வரவிடாமல், தானே இறுதி மூச்சு உள்ளவரை பதவி அதிகாரத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்கிற புழுத்துப்போன திராவிட அரசியல்வாதிகளின் கடைசி வாரிசு ஈஸ்வரமூர்த்தியாக பவா செல்ல்லத்துரை பயமுறுத்திவிடுகிறார். எவன் பெத்த புள்ள செத்த என்ன எங்க புள்ள உசுரோடு வேணும் என்று மன்சாட்சியே இல்லாமல் கேட்கும் அவரது வாரிசாக, அப்படியே அதிகார வர்க்கத்தின் வெறித்தனமான சுய நலத்தைக் கண்முன் கொண்டு வருகிறார் ரித்விகா, வழக்கம்போல, அதிகார வர்க்கத்தில் வாக்கப்பட்டுப் போகும் ஆண் எப்படி ஒரு மொள்ளமாரியாக இருப்பானோ அதே மொள்ளமாரித்தனத்தோடு அபிஷேக்.
இடைஞ்சல் கொடுத்தால் இல்லாத பழியைப் போட்டு என்கவுண்டர் செய்துவிடவேண்டியதுதானே – அதுதானே நம்ம அரசியல் கலாச்சாரம் குறிப்பாகத் தமிழகத் திராவிட அரசியல் கலாச்சாரம்! அதன் படியே பலிகடா ஆகும், உண்மை விசுவாசி மற்றும் நேர்மையான மிலிட்டரி டாக்டர், அவர்கள் யாரென்பதை படத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
ஹீரோ எண்ட்ரி, ஒரு மாஸ் வணிக மசாலா படத்திற்கான ஹீரோ என் ட் ரி இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற எழதப்படாத விதிப்படி மருத்துவமனையில் நடக்கும் கலவரத்தை அடக்க அனுப்பப்படும் ஏ எஸ் பி வால்டராக அறிமுகமாகிறார் சிபிராஜ். அவரது லத்தி, பெண்களை ஒன்றும் செய்யாததிலிருந்து புரிந்துகொள்ளலாம், நிறையக் கண்டிப்பும் கொஞ்சம் மனசாட்சியும் கொண்ட காவல்துறை அதிகாரி இவரென்பதை. வில்லன் என்று அறியப்பட்ட ஒருவருக்கு அவரது மனசாட்சி இடம் கொடுப்பதால் தான், உண்மையான குற்றவாளியை அடையாளம் காண முடிகிறது.
கடந்த காலங்களில் வெளிவந்து பெரிய வெற்றிபெற்ற ஒரு சில விஜய்காந்த் படங்களில் அவர், இடைவேளைக்குச் சற்று முன்னர் தான் என்ட்ரியே கொடுப்பார், அதைப்போல கெத்தாக என்ட்ரி கொடுக்கிறார் நட்டி. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றாலும் சமுத்திரக்கனியும் – அன்னை குழுமங்களின் நிறுவனர் ஹுமாயூனும் மனதில் நிற்கிறார்கள்.
இப்படிப் பட்ட வணிக மாஸ் படங்களுக்கென்று எழுதப்படாத இன்னொரு விதியும் இருக்கின்றது. நாயகனின் காதலி, திரைக்கதையின் முக்கிய நீரோட்டத்துடன் பயணிக்கவேண்டும். இதில் ஷ்ரின் காஞ்வாலா வின் கதாபாத்திரம் அவ்வப்பொழுது டேக் டைவர்சன் எடுப்பதால், திரைக்கதையில் சிறிய தொய்வு ஏற்படுவதைச் சகித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது, யாமினி சுந்தர் கதாபாத்திரம் தான் நாயகியின் கதாபாத்திரமாகவே அமைக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்டிருக்க வேண்டுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தொழில் நுட்ப ரீதியாக ராசாமதியின் கேமரா பறந்து பறந்து கும்பகோணத்தை அழகாகப் படம் பிடித்திருக்கின்றது. தர்மபிரகாஷின் இசையும் உறுத்தாமல் நல்லனுபவத்தைக் கொடுக்கிறது.
ஷங்கர், ஹரி போன்று வணிக மசாலாவிற்குள் சமூகக் கருத்தை விதைக்கும் இயக்குநர்கள் வரிசையில் இடம்பெறத்தகுதியானவராக இப்படத்தின் இயக்குநர் யு அன்பு.
குழந்தைகள் அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கை, அந்த நம்பிக்கைகளைக் கருவிலேயே சிதைத்துவிடாதீர்கள் அரசியல்வாதிகளே!
வால்டர், எளிதில் கடந்துபோய்விடமுடியாத கதைக்களம்.