a K.Vijay Anandh review
தாராள பிரபு
இன்றைய நிலையில் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கும் அதிமுக்கியமான பிரச்சினையை இவ்வளவு சுவராஸ்யமாகச் சொல்லமுடியுமா..? என்று வியப்பை ஏற்படுத்திக் கொண்டாடச் செய்யும் படம் தாராள பிரபு.
ஜாம்பவான்கள் சச்சு, விவேக், சிவாஜி அவர்களுடன் புதிதாகச் சேர்ந்திருக்கும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் அனுபமா குமார் மற்றும் மதுவந்தி இந்த மூத்தோர் படையை வைத்துக் கொண்டு ஹரிஷ் கல்யாண் மற்றும் தான்ய ஹோப் என்று அழகும் வசீகரமும் திறமையும் கொண்ட இளம் ஜோடியை வைத்துக் கொண்டு குறைவில்லாத பொழுதுபோக்கை வழங்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து.
நீண்ட நாட்களுக்குப் பிறகு உச்சக்கட்ட அளவில் மெச்சத்தக்க கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, அதாவது ஒவ்வொரு கதாபாத்திரங்களையுமே அந்தளவுக்கு செதுக்கியிருக்கிறார்கள்.
படத்தில் 20 களில் ஒரு நாயகன் என்றால், இவரை 50 களில் ஒரு நாயகன் என்று சொல்லலாம். அந்தளவுக்கு கருத்தரிப்பு மருத்துவர் கண்ணதாசனாக கருத்தாலும் காமெடியாலும் கவர்கிறார் விவேக், மருத்துவர் கலைவாணர் என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கக்கூடும். அவரது உதவியாளராக வரும் ஆர் எஸ் சிவாஜி, எங்கேயோ போய்ட்டீங்க சார் காமெடிக்குப் பிறகு, இந்தப்படத்தில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தஞ்சை பகுதியில் இருந்து புலம்பெயர்ந்த அரசவம்சத்திற்கே உரிய மிடுக்குடன் ஹரிஷ் கல்யாண் குடும்பம். பாரம்பரிய மருந்துப்பொருட்கள் தயாரிக்கும் பாட்டியாக சச்சு, அதைவைத்துக் கொண்டு அழகு சிகிச்சை செய்யும் அம்மாவாக அனுபமா குமார், ஒரே மகனாக ஹரிஷ் கல்யாண் என்று அழகான குடும்பம், முன்பே குறிப்பிட்டதுபோல அற்புதமான பாத்திரப்படைப்பிலேயே படம் பாதி ஜெயித்துவிடுகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் மகனிடம் தோற்றுப் பின் மகனுக்காக அவற்றை மாற்றிக் கொள்ளும் அம்மாக்களை அப்படியே பிரதிபலிக்கிறார் அனுபமா குமார். பாட்டி சப்போர்ட் இருக்கிற வரைக்கும், இந்த உலகில் எதுவுமே சாத்தியம் தானே! கவனிக்கப்படாமல் இருக்கும் பாட்டிகளையும் இந்தப்படம் பார்க்கும் பேரன் பேத்திகளின் கைகள் அரவணைக்கும், நன்றி சச்சுப்பாட்டிக்கு!
ஹீரோசியம் என்கிற ஜோசியத்திற்குள் சிக்கிக் கொள்ளாத பக்கத்துவீட்டுப்பையனாக ஹரிஷ் கல்யாண், வழக்கம்போல தாராள பிரபுவிலும் தாராளமாக வசீகரித்துவிடுகிறார். இந்தப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மூலம், இளமையை எவ்வளவு போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்கிற உந்துசக்தியை படம் பார்க்கும் இளைஞர்கள் பெறுவார்கள். பேசவேண்டிய இடத்தில் வாயால் பேசி, அதைவிட அதிகமாகக் கண்களில் பேசி, பேசவேண்டிய இடத்தில் பேசமுடியாமல் தவித்து என்று நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்தியிருக்கிறார்.
தன்யா ஹோப், படத்தின் வெற்றிக்கு ஹோப் கொடுத்திருப்பதில் இவரது கதாபாத்திரத்திற்கும் கணிசமான பங்கு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. சமோசாவுக்கு சட்னி கட்டுற மாதிரி என்கிற வசனத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியிலும் அளவாகப் பேசி, அற்புதப்படுத்தியிருக்கிறார்.
இசை , ஒளிப்பதிவு என்று சகலமும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.
விந்துகொடையை வைத்து கருத்தரித்தல் என்கிற மருத்துவ முன்னேற்றம் 10-15 வருடங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் சாத்தியப்பட்டு விட்டாலும், தாராள பிரபு போன்ற படங்கள் வருவதற்கு இவ்வளவு தாமதமா என்று ஆதங்கப்பட்டுக் கொள்ளவேண்டியிருக்கிறது.
ஒருவேளை 15 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு படம் வெளிவந்திருந்தால், இன்று தெருவுக்குத் தெரு எஸ் டி டி பூத் போல முளைத்திருக்கும் வரமா..? சாபமா..? என்று சொல்லிவிடமுடியாத கருத்தரிப்பு மையங்களின் தேவை குறைந்திருக்கலாம்!
ஒரு சமூகத்தின் வாழ்வியல் முறையே மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம். Better late than never என்று சொல்வது போல, இனிமேலும் நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.
100 மில்லியன் விந்தணுக்கள் இருந்தாலும், கருத்தரிக்கத் தேவையானது என்னமோ ஒரே ஒரு விந்தணு தான், அதனையும் ஆரோக்கியம் இல்லாமல் ஆக்கிவிட்டால் அடுத்த தலைமுறை என்ற ஒன்றே இருக்காதே!
விந்து தான அறிவியலையும், தத்தெடுத்தல் என்கிற மனித நேயத்தையும் போற்றி வந்திருக்கும் தாராள பிரபு, இந்த வார வெற்றிப்படங்களின் வரிசையில் முதலிடத்தைப் பெறும் என்றால் அது மிகையல்ல.