a K Vijay Anandh review
நல்ல வேளை இந்த ராஜ்தீப் திரைப்பட இயக்குநர் ஆகிவிட்டார். மாறாக ஒரு அரசியல்வாதி ஆகியிருந்தாலோ, நாட்டின் மொத்த கஜானா பணமும் இவரது வீட்டிற்குள் குவிக்கப்பட்டிருக்கும். என்ன ஒரு கற்பனைய்யா, விக்ரம் பிரபுவின் ரகசிய அறைக்குள் அடுக்கப்பட்டிருக்கும் பணக்குவியல்கள் தான் படத்தின் ஹைலைட்டே! அப்படி ஒரு காட்சியை கருவாக்கி உருவாக்கியதற்கே முதலில் ஒரு பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்!
அது ஏன்..? எதற்கு..? எப்படி..? என்கிற தனியார் துப்பறிவாளினி மஹிமா நம்பியாரின் புலனாய்வும் - பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போகும் பெரும்பணம் எங்கே ? யாரால்? திருடுபோகிறது என்று காவல்துறை அதிகாரி சுப்பராஜின் புலனாய்வும் ஒரு புள்ளியில் முடிவது திரைக்கதையின் சுவராஸ்யம்.
லாஜிக்காக யோசித்தால், ஆட ஆமாங்க ஆட்சி அதிகாரங்களுக்கு வருவதே மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து யாருக்கும் உபயோகப்படாமல் வீட்டில் ஒளித்து வைப்பது நம்மூர் அரசியல் வாதிகளுக்குத் தொழில் என்றால், இந்தப்படத்தில் தான் சந்திக்கும் ஒரு வித மன நோயால் பணத்தைத் திருடும் விக்ரம் பிரபு வின் - குறைபாடும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே!
படங்களீன் வெற்றி தோல்விகள் என்கிற கிராஃப் ஏறி இறங்கத்தான் செய்யும். ஆனால், ஒரு நடிகராக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். விக்ரம் பிரபு தன்னுடைய உடை, உடல்மொழி, மற்ற நடிகர்களுடன் திரையை ஆக்ரமிக்கும் போது தனது பங்களிப்பை வழங்கும் முறை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியே ஆகவேண்டும்.
நாயகனுக்கு இணையாக அல்லது நாயகனை விட ஒரு படி மேலாக, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதற்காகவும் அசுரகுரு குழுவினரைப் பாராட்டியே ஆகவேண்டும். மஹிமா நம்பியார், கிட்டத்தட்ட விக்ரம் பிரபுவே ஏற்றிருக்கவேண்டிய கதாபாத்திரம், அவர் செய்த வேலைகளை இன்னொருத்தர் செய்வதாகக் கூட காட்டியிருக்க முடியும். ஏனென்றால், படத்தின் முக்கிய வில்லனாக யாருமே ஊகிக்க முடியாத அளவில், கிளைமாக்ஸுக்குச் சற்று முன்னர் தான் ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தி ஆச்சிரியப்படுத்துகிறார்கள்.
அந்த வகையில், மஹிமா ஒரு Inspirational youth icon ஆக சிறப்பாகத் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். மருத்துவம், பொறியியல் என்று யோசிக்கும் பெண்கள் தனியார் துப்பறிவாளினி என்று மாற்றி யோசிக்கத் துவங்குவார்கள், துவங்க வைத்திருக்கிறார் மஹிமா.
மஹிமா மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரின் ஒப்பனைகள் மற்றும் உடைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செய்திருக்கவேண்டும்.
இந்த மனுஷனுக்கு ஏரிக்கரை, துப்பாக்கி செண்டிமெண்ட் நிறையவே இருக்கிறது பொல. ஜெகன், வழக்கம் போல இயல்பாக வந்துபோகிறார். யோகிபாபுவும், டைம் பாஸுக்கு காமெடியனாக வராமல், படத்தின் முக்கியத்திருப்பத்திற்குக் காரணமாகிறார்.
சில வசனங்கள் சில லொகேஷன்களுக்குப் பொருந்தாது. பொதுமக்கள் கூடும் காபி ஷாப்பில், நாகி நீடு, மஹிமா, விக்ரம் பிரபு பேசிக்கொண்டிருக்கும் வசனங்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் அல்லது லொகேஷனை மாற்றியிருக்கலாம், கடத்திட்டுப் போய் பின்னி மில்லில் வைத்துப் பேசுங்க, மஹிமா வைத் தேடி விக்ரம் பிரபுவும் அங்கே வந்து சேரட்டுமே!
அதற்கு முன், தனியார் துப்பறியும் ஏஜென்சி நடத்தும் சதீஷ் ஐ, ஹவாலா ஜலாலுதீன் கொன்றிருக்கக் கூடாது, அவனது டார்கெட் மஹிமா தான். சதீஷ மூலம் மஹிமாவுக்கு ஒரு எச்சரிக்கை தரப்பட்டிருக்கலாம். அடுத்தடுத்து ஜலாலுதீன் கத்தியை எடுப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
குறைகளைத் தவிர்த்துப் பார்க்கும் போது, மிகவும் நேர்மையான ஒரு புதிய கதைக்கருவுடனான ஒரு பொழுதுபோக்கை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார், அசுர குரு என்பதை மறுப்பதற்கில்லை!