a K.Vijay Anandh review
நுங்கம்பாக்கம், இந்தப்படமும் காவல்துறை உங்கள் நண்பன் படமும் முறையே அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகின.
இரண்டு படங்களிலுமே மையக்கரு ஈகோ அல்லது சுயமரியாதைச் சீண்டல் தான்.
நுங்கம்பாக்கம், படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட கதை என்றாலும், சாதி, மதம், அரசியல் என்று அத்தனை தலைகளையும் உருட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு என்பதால், முடிந்த அளவு தான் சொல்லமுடிந்திருக்கின்றது.
நுங்கப்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலைவழக்கையும் அதன் தொடர்புடைய சமூகவலைத்தள பதிவுகள் மற்றும் ஊகங்களையும் புறந்தள்ளிவிட்டு பார்த்தோமானால், ஒரு காதல் தோல்வியின் வெளிப்பாடு அல்லது தனது தோற்றத்தை அவமானப்படுத்திவிட்ட பெண்ணை பழிவாங்குதல் என்பதாக எடுத்துக் கொண்டு படத்தை ரசிக்க முடிகிறது. காதலை, ஊறுகாய் போலக் காட்டியிருந்தாலும் அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் அஜ்மல், கொலையாளி என குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாரிடம் பேசும் வசனங்கள் ,குறிப்பாக “இப்பெல்லாம் காதலிக்கிற பசங்க உன்னை உதாரணமாக்காட்டி தான் பெண்களை பயமுறுத்துகிறார்களாம்….” என்பன போன்ற வசனங்கள் மற்றும் எந்தவிதமான தடயங்களும் இல்லாத நிலையிலும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஆயிரம் தொலைபேசி எண்களை பட்டியலிட்டு, அதிலிருந்து படிப்படியாக 75, 3 என்று வந்து மிகச்சரியாக ராஜ்குமாரைக் கண்டுபிடிப்பது போன்றவை ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைப்பதாகவே இருக்கிறது. வசனகர்த்தா ஆர் பி ரவி மற்றும் இயக்குநர் ரமேஷ் செல்வனுக்கு பாராட்டுகள்.
ஆக, நுங்கம்பாக்கம் படம் ஒரு தனி மனிதனின் ஈகோவின் அல்லது அவனது சுயமரியாதைச் சீண்டலின் விளைவாக ஏற்பட்ட வினையைச் சொல்கிறது என்றால், காவல்துறை உங்கள் நண்பன் படம், ஒரு காவல்துறை அதிகாரியின் சுயமரியாதைச் சீண்டலின் விளைவால் ஒரு சாதாரண மனிதன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்தப்படம், உண்மைச்சம்பவம் அல்ல எனினும் இதையொத்த சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
காவல்துறை உங்கள் நண்பனில் ஒரு மோசமான காவல்துறை அதிகாரியால் சாமான்யனொருவன் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறான் என்பதையே முழு நேரமாகக் காட்டினாலும், அப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ஒரு Adult தாம்பத்யம் படத்தை இன்னும் நெருக்கமாக்கிவிடுகிறது.
சுரேஷ் ரவி மற்றும் ரவீனா ரவிக்கு இடையிலான அந்த தாம்பத்யம் அழகு, கொஞ்ச நேரமே வந்தாலும்.
மைம் கோபி, மோசமான காக்கிச்சட்டைகளின் மொத்த உருவமாக அரிதாரம் பூசி ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி முகபாவனை மற்றும் உடல்மொழிகளிலேயே பயமுறுத்தி விடுகிறார். பிரச்சினையின் ஆரம்பப்புள்ளியாக வரும் ஆர் ஜே முன்னா மற்றும் நடுவில் இணைந்துகொள்ளும் கதிரவன் பாலு ஆகியோரும் காக்கிச்சட்டைக்குள் தங்களை கணகச்சிதமாகப் பொருத்திக் கொள்கிறார்கள். சூப்பர் குட் சுப்ரமணி ஒரு சூப்பரான காவலராக ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துவிடுகிறார்.
இந்தப்படத்திலும் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் ஞானக்கரவேல் பெரிய பலமாக அமைந்திருக்கிறார். சாமான்யன் பேசும் வசனங்கள் , பஞ்ச் வசனங்களுக்கும் பக்குவமில்லாத வசனங்களுக்கும் நடுவில் அழகான மீட்டரில் அளந்து எழுதியிருக்கிறார். நிறைய நடிகர்கள் இல்லை, நிறைய லொகேஷன்கள் இல்லை அட நிறைய பட்ஜெட்டும் இல்லை ஆனால், புதியவர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் விதமாக இயக்குநர் RDM எடுத்திருக்கும் இந்தப்படத்தின் வசனங்கள் மற்றும் நடிகர்களின் முகபாவங்கள் ஆகியவையே ரசிகர்களைக் கவர போதுமானதாக அமைந்திருக்கிறது.
சாமான்ய மனிதனின் சுயமரியாதையானாலும் சரி, அதிகாரவர்க்கத்தின் சுயமரியாதையானாலும் சரி, சீண்டிப்பார்க்கப்பட்டால் நியாயமான காரணங்களுக்கே எனினும் விளைவுகள் அநியாயமாகவே இருக்கும் என்பதையே இருபடங்களும் உணர்த்துகின்றன.
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், இவ்விரண்டு படங்களும் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு நல் ஆரம்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.