a K.Vijay Anandh review
அட்டக்கத்தி தொடங்கி எல்லாமே மாற்று சினிமாக்கள் தான், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மடைமாற்றிய தயாரிப்பாளர் சி.வி.குமார், படம் இயக்கினால், இன்னொரு நல்ல படத்தைத் தானே கொடுக்கவேண்டும்.
உலகப்பெரும் பணக்காரர்கள், பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட முதல் அடியை எடுத்து வைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
ஆம், நாம் யார்..? உடல், உயிர் மற்றும் நினைவுகள் சேர்ந்த கலவை தானே! உடல் அழிந்துவிடும், உயிர் அதைத்தான் ஆராய்ச்சியாளர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நினைவுகள் இருக்கின்றதே!
ஒரு ஹார்ட் டிஸ்கில் சேகரித்து வைத்திருக்கும் டேட்டாக்களை , அடுத்தடுத்த ஹார்ட் டிஸ்க்குகளுக்கு மாற்றி, தொடர்ச்சியாக பல கணிப்பொறிகளை இயங்க வைப்பது, அந்தக் கணிப்பொறிகள் மூலம், பழைய டேட்டாக்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதும் சாத்தியம் தானே.
மனித மூளையும், ஒரு தானியங்கி ஹார்ட் டிஸ்க் போன்றதே. ஒருவனது மூளையில் பதியும் நினைவுகளை, அவனது.மரணத்திற்குப் பின் அடுத்தடுத்து மூளைகளுக்குக் கடத்திக் கொண்டிருந்தால், அந்தக் கடத்தல் தொடரும் வரை, ஒருவரது நினைவுகள் மூலம், அவர் உயிர் வாழ முடியும்.
மேற்குறிப்பிட்ட ஒரு அறிவியல் கதையை, சந்திப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ், மைம் கோபி மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோரை வைத்து, லாஜிக் தவறுகள் இன்றி கொடுத்த விதத்தில் சி.வி.குமாரின் இயக்குநர் அவதாரம் வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறது.
அடுத்தடுத்து நடக்கும் கொலைகளைத் துப்புத் துலங்க நியமிக்கப்படும் காவல் துறை அதிகாரி சந்தீப் கிஷன், தலையில் அடிபட்டு உளவியல் சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுகிறார். அங்கே, மன நல மருத்துவராக லாவண்யா. இருவரும் மிகவும் இயல்பாகப் பொருந்திப் போகிறார்கள் தங்களது கதாபாத்திரங்களுக்குள்.
பகவதி பெருமாள், காமெடி நடிகர் என்பதையும் தாண்டி, குணச்சித்திர நடிகராக ஜொலிக்கிறார்.
டேனியல் பாலாஜி, பெரிய சலசலப்பில்லாத கதாபாத்திரம் தான் என்றாலும், அதிலும் அவர் தான் பெஸ்ட் என்று முத்திரை குத்திவிடுகிறார்.
முதலில், குறிப்பிட்ட தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக அமரேந்திரன், அவரது மறைவுக்குப் பின் காவக்துறையின் புலன் விசாரணைக்கு உதவும் சக விஞ்ஞானி ஜெயப்பிரகாஷ் , நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
விஞ்ஞானி அமைச்சர்கள் என்று சமூகவலைத்தளங்களில் நிஜ அமைச்சர்கள் கிண்டலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும், அமரேந்திரனைக் கையாளும் விதத்தில், பழுத்த அமைச்சராக ஜொலிக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
ஜிப்ரனின் இசை, கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, லியோ ஜான் பாலின் எடிட்டிங் எல்லாமே கதைக்குக் கச்சிதமாக உதவியிருக்கின்றது.
டூயட்டுகள் வைத்து, நேரம் கடத்திக் கொண்டிருக்காமல், கதையை மட்டுமே.சுவராஸ்யமாகச் சொன்ன விதத்தில் இயக்குநர் சி.வி.குமார் மிளிர்கிறார்.
மாயவன், நிச்சயமாக பயமுறுத்தியிருக்கின்றான். நினைவுகள் மூலம் ஒருவன் ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழ்வது சாத்தியப்படவேண்டுமானால், அதற்கு 100 பேரின் நினைவுகளை அழிக்க வேண்டும் என்பது, பயமுறுத்தும் உண்மை. அதாவது, அவர்களின் தனிப்பட்ட நினைவுகளை அழித்துவிடுவதன் மூலம், அவர்கள் சாகடிக்கப் படுகிறார்கள்.
ஆக, பல நூறு பேரைப் பலிகொடுத்து, பல நூறு ஆண்டுகள் வாழும் தொழில்நுட்பம் தேவையா..? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.