a K.Vijay Anandh review
" வாடிக்கையாளர் மிகவும் முக்கியமானவர். நாம் அவருக்கு சேவை செய்யவில்லை, அவர் தான் நமக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்குகிறார். அவருக்கு விசுவாசமாக இருக்கவேண்டியது ஒவ்வொரு வியாபாரியின் கடமை...' என்கிற மகாத்மா காந்தியின் பொன்மொழியை ஒரு வரிக்கதையாகக் கொண்டு, சிவகார்த்திகேயனுக்காகத் திரைக்கதை அமைத்து வேலைக்காரன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.
கூலிக்காரக்குப்பத்தைக் கொலைகாரன்குப்பமாக்கிவிட்ட பிரகாஷ்ராஜ் மீது கொலைவெறி கொண்டு ஒரு சிறிய வானொலி நிலையத்தை ஆரம்பிக்கிறார் சிவா.
கூலிக்குக் கொலை பண்ணாதீங்க, சம்பளத்துக்கு வேலை செய்யுங்க என்று தனது குப்பம் மக்களைத் திருத்துகிறார்.
கூலிக்குக் கொலை செய்வதும் ஒன்றுதான், சம்பளம் வாங்கிக் கொண்டு தரமில்லாத உணவுப்பொருட்களை விற்பதும் ஒன்றுதான் என்பது பிரகாஷ்ராஜ் , சினேகா, விஜய் வசந்த் மூலம் சிவாவுக்குத் தெரியவருகிறது.
அதன் பின், என்ன மாதிரியான மாற்றத்தை சிவா ஏற்படுத்துகிறார் என்பதே வேலைக்காரன்.
வாங்குகிற சம்பளத்திற்கு முதலாளியிடம் வேலைபார்ப்போம், ஆனால், முதலாளியையும் நம்மையும் வாழவைக்கும் வாடிக்கையாளர்களுக்கு விசுவாசமாக இருந்து தரமான பொருட்களை மட்டும் உற்பத்தி செய்வோம் என்கிற அற்புதமான சிந்தனையை சக வேலைக்காரர்களிடம் விதைக்கிறார் சிவா.
அது முதலாளிகளை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை பகத் ஃபாசில் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்களும் ஆட்சியாளர்களுக்கு அடிமையாக இருக்காமல் , பொதுமக்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பது வேலைக்காரன் சொல்லாமல் சொல்லும் பாடம்.
என்றைக்கு உணவுகளை ஹோட்டலில் சாப்பிட ஆரம்பித்தோமோ அன்றே ஆரோக்கியம் கெட ஆரம்பித்துவிட்டது. இன்றோ, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைப் பலசரக்குக் கடைகளில் வாங்க ஆரம்பித்துவிட்டோம், விளைவு உணவு பயங்கரவாதத்திற்குப் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.
மோகன் ராஜாவின் சமூக நோக்கம் சார்ந்த சிந்தனைக்குப் பாராட்டுகள்.
ரோகிணி, சார்லி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. சிவா, குப்பத்திற்கு வெளியே இருந்து நண்பன் விஜய் வசந்திற்காக உள்ளே வருவது போலக் கதை அமைத்திருக்கலாமா..? வீட்டுவேலை செய்யும் ரோகினியின் மகளாக நயன் தாரா , சமூக வானொலி ஆரம்பித்திருக்கலாமா..? உள்ளே வரும் சிவா, தனது தனித்திறமைகளால் , வானொலிக்கும் உயிர் கொடுத்து, நயன் தாராவைக் காதலித்திருக்கலாமா..? இதெல்லாம் கதை விவாதத்தில் சொல்ல வேண்டிய ஆலோசனைகள்.
சிறப்பான சிந்தனையை, சிறப்பான படமாக மாற்றுவதில் இன்னும் அதிகம் மெனக்கெட்டிருக்க வேண்டும் என்பது, காதைச் சுற்றி மூக்கைத் தொட முயலும் திரைக்கதையில் தெரிகிறது.
ஒரு தடவை நல்லது.ஜெயிக்க ஆரம்பித்துவிட்டால் , ஜெயித்துக் கொண்டிருக்கும் கெட்டதுகள் ஒழிந்துவிடத்தான் செய்யும். நல்லது, ஜெயிக்கும் அளவிற்கு வலிமையானதாக இருக்க வேண்டுமே!
அவ்வளவு, நல்லவரான அறிவு, நம்மூர் மலிவான சரக்கை அடித்துக் கொண்டே புரட்சிக்காக வித்திடுவது அபத்தத்தின் உச்சம்.
தொழில் நுட்ப ரீதியாக , ஒளிப்பதிவாளர் ராம்ஜியை விட இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
அந்த கொலைகாரக்குப்பம் செட் அமைத்த முத்துராஜுக்கு ஒரு சபாஷ்.
ஏழாம் அறிவு பட பாடல்கள் வெளியீட்டு விழாவில், " இப்பத்தான் நிகழ்ச்சி தொகுப்பாளனாக இருந்து மேடைக்கு நடுவே வந்திருக்கிறேன். மறுபடியும் அங்கே கூப்பிடாதீர்கள்.." என்று கேட்டுக் கொண்ட சிவகார்த்திகேயனை, ஹெட்ஃபோன் மற்றும் மைக் மாட்டி , அது இது எது நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு இரண்டாம் பாதியில், நயன் தாரா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷுடன் மேடையேற்றியிருக்கிறார்கள்.
" அப்பா , எனக்குக் கொஞ்சம் டைம் வேணும், நான் கொஞ்சம் யோசிக்கனும்.." என்று படத்தில் சிவகார்த்திகேயன் புலம்புவது நிஜத்தில்.மோகன் ராஜாவிற்குப் பொருந்தித்தான் போகிறது.
அட்டகாசமான, அத்தியாவசியமான கதைக்கருவிற்கு,, இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கலாம்.