a K.Vijay Anandh review
வழக்கமாக வந்து கொண்டிருக்கும் பேய் - பழிவாங்குதல் போன்றவை இல்லாமல் இருந்திருந்தால் இந்தப்படம் நிச்சயமாக ஒரு உலகப்படமாகக் கொண்டாடப்பட்டிருக்கும்.
சமீப காலங்களில் , பெற்று - வளர்த்து என்கிற வார்த்தைகள் மிகவும் கேவலமான முறையில் சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகின.
அவர்கள், இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். அவர்களுக்குக் குழந்தைகள் இருப்பின், குழந்தைகள் ஏதோ தாங்கள் வைத்துக்கொண்ட உடலுறவின் எச்சங்கள் என்று நினைப்பின், அந்தக் குழந்தைகளை ஒரு ஒரு மணி நேரம் , எங்காவது கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு, ஒரு நொடி கூடப் பயமில்லாமல் இருந்துவிட முடியுமா..??? அந்த பரிதவிப்பு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பவர்களுத்தான் தெரியும்.
இதில், தன் செல்ல மகளைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் விஜய் கிருஷ்ணராஜ் தம்பதியின் அழுகை, நிஜமாக இருக்கிறது.
பணத்திற்காக, தான் தூக்கிவளர்த்த செல்ல மருமகளையே கடத்தி , நாடகமாடி, பின் கொலையும் செய்துவிடத் துடிக்கும் விஸ்வாந்த். அவரது கூட்டாளிகள் ஆடம்ஸ், கேஸியான்
அவர்களுக்கு அடைக்கலம் தரும் ஏ.வெங்கடேஷ் என்று பயமுறுத்தியிருக்கிறார்கள்.
விஸ்வாந்த், கவனிக்க வைக்கும் நடிப்பு, ஆடம்ஸும் ஆச்சிரியப்படுத்தியிருக்கிறார். அங்காடித் தெரு படத்திற்குப் பிறகு, சித்தப்பா கதாபாத்திரத்தில் வரும் ஏ.வெங்கடேஷ், உடல்மொழியிலேயே பயமுறுத்தி விடுகிறார்.
பேபி அம்ருதா, ரித்விகா ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஆதிஷ் உத்ரியன் இசை, திகில் நிறைந்த திரைக்கதைக்குப் பக்க பலமாக இருக்கிறது.
மகேஷ் கே தேவ், கிடைத்த வசதிகளைக் கொண்டு நிறைவான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார்.
இயக்குநர் ஜேபிஆர், மிகச்சிறந்த ஒரு கதைக்களத்தை, வணிக சினிமாவாக்க முயன்றிருப்பது தான் சற்று சறுக்கியிருக்கிறது.
முதல், பாராவிலேயே குறிப்பிட்டது போல, பேய்களின் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கும் முன் வரை, ஓநாய்கள் ஜாக்கிரதை ஒரு உலக சினிமா.