a K.Vijay Anandh review
உள்ளூர் ரெளடிகளை எதிர்க்கத்துணிவில்லாமலும், நம்மை காப்பாற்றுவார்கள் என்று ரட்சகர்களாக நம்பியவர்களின் தீடீர் மெளனமும் சேர்ந்துகொண்டு சோர்வடைந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு வெளியூரிலிருந்து ஒருத்தன் வந்து உள்ளூர் ரெளடிகளுக்கு சவாலாக நின்றால் தானாகவே அவன் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும் என்பது உளவியல்.
அந்த வகையில், சனாதனத்தையும் இந்த புண்ணிய பூமியின் ஆன்மீக கலாச்சாரங்களையும் கொண்டாடும் கன்னட தெலுங்கு படங்களின் தமிழ் பதிப்புகளுக்கு இந்த மண்ணில் மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
மலைவாழ் விவசாய குடிமக்களின் காவல் தெய்வமான பஞ்சுருளி அம்மனுக்கும் நூறு வருடங்களுக்கு முற்பட்ட அன்றைய ஒரு சிற்றசனுக்குமான ஒப்பந்தம் என்பதாக ஆரம்பித்து சம காலத்தில் தொடரும் சம்பங்களின் தொடர்ச்சியாக காந்தாரா வெளிவந்திருக்கிறது.
நமது மக்களுக்கு கல்லும் தெய்வம் தான் சிறுபுல்லும் ( அருகம்புல்) தெய்வம் தான். அந்த கல் என்ன செய்துவிடமுடியும், அந்தக்கல்லை காண்பித்து ஏமாற்றிக்கொண்டிருக்கவேண்டாம் என்கிற எதிர்மறையான கருத்துடன் தங்களது முன்னோர்கள் – அர்சர்கள் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, எப்படியாவது அம்மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, தங்களுக்கு சொந்தமானதாக நினைக்கும் அந்த காடும் காடு சார்ந்த விவசாய நிலங்களை பிடுங்க தொடர்ந்து முயற்சிக்கும் – சதி செய்யும் – அரச வம்சந்தின் வாரிசும் ஊர்த்தலைவருமான அச்யுத்குமார் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அந்த கூட்டத்திலேயே பலசாலியும் , பஞ்சுருளி அம்மனின் குருவாவின் இன்றைய தலைமுறை மூத்தவாரிசும் முரடனுமான ரிஷப் ஷெட்டியை – குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி – நம்மை எதிர்த்து கிளம்பிவிடாதபடி சதி செய்யும் அச்யுத் சம கால அரசியல்வாதிகளை கண்முன்கொண்டு வருகிறார்.
கழுத்தில் பட்டையுடனும் காலில் சலங்கையுடனும் வந்து ரிஷப் ஷெட்டியின் கனவில் காட்சி தரும் வராக மூர்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் அற்புதம். ரிஷப் ஷெட்டி பன்றிக்கறி கொடுக்கும் ஒவ்வொரு முறையும், அந்த புள்ளி வைச்ச பன்றியை கொண்டு வா உனக்கு இன்னும் நிறைய தருகிறேன் என்று கூறும் அச்யுத் குமாருக்குள் இருக்கும் வன்மம் வார்த்தைகளாக வெளிப்படுகிறது. ஆனால், வேட்டை, குடி, நண்பர்களுடன் கும்மாளம் என்று இருக்கும் ரிஷப் ஷெட்டிக்குத்தான் அது புரிவதில்லை.
சுத்தமான ஆன்மாவை சுற்றி எத்தனை பெரிய சதிவேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அது அந்த தெய்வத்தின் துணையுடன் ஒரு நாள் வீறு கொண்டு எழுந்து எதிரிகளை அழிக்கும் என்பது இயற்கையின் நியதியன்றோ! அப்படி, பஞ்சுருளி தெய்வத்தின் காவல்தெய்வமான குளிகாவின் அருளுடன் விஸ்வரூபமெடுத்து எதிரிகளை துவம்சமாக்குகிறார் ரிஷப் ஷெட்டி.
இறுதிக்காட்சியில், ரிஷப் ஷெட்டி (இறைக்)கோலம் கட்டும் போது அவர் காட்டும் உணர்ச்சிகள் ஆக்ரோஷம், பக்தி, மக்களை அரவணைத்தல் என்று அத்தனையும் அட்டகாசம். தந்தையை போலவே இவரும் காட்டிற்குள் காணாமல் போகிறார் அந்த இறைக்கோலத்துடனேயே!
ரிஷப் ஷெட்டியின் அறிமுகக்காட்சி, கடற்கரை கன்னட மக்களின் பாரம்பரிய போட்டியான சகதியில் எருமை விடும் போட்டியாக இருக்கிறது. அந்த காட்சியிலிருந்து இறுதிவரை இந்த நடிகன் காட்டும் உடல்மொழி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அம்மாவிடம் குழந்தையாகவும், சான்றோர்களுக்கு என்றும் மரியாதை கொடுப்பவராகவும் ( அது தற்பொழுது குருவாவாக ( பூசாரி) இருக்கும் தனது தம்பியாக இருந்தாலும் ) தான் விரும்பிய பெண் சப்தமி கெளடாவை விரட்டி விரட்டி காதலிப்பவராகவும், நண்பர்களுடன் சேர்ந்து பன்றி வேட்டைக்கு கிளம்புபவராகவும், மக்களுக்கு எதிராக எதிரிகள் எந்த ரூபத்தில் – காவல்சட்டையுடன் வந்தாலும் எதித்து குரல்கொடுப்பவராகவுமாக ரிஷ்ப் ஷெட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
வெடி வெடிக்கக்கூடாது, விலங்குகளுக்கு தொந்திரவாக இருக்கும் இன்று காட்டிலாக அதிகாரி கிஷோர் திமிருடன் கூறும் போது, “ அந்த மிருகங்கள் உங்கிட்ட வந்து கம்பிளைண்ட் பண்ணுச்சா.. வெடி என்ன ஊமையா சத்தமில்லாம வெடிக்கிறதுக்கு..?” என்று கூலாக நையாண்டி செய்யும் இடங்கள் அற்புதம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெடிவெடித்து மகிழும் தீபாவளி கொண்டாட்டத்தில், வேட்டுவைக்கும் விதமாக வெடி வெடிப்பதற்கு எதிராக கேஸ்போடுபவரகளுக்கான சாட்டையடியாக இந்த காட்சியை எடுத்துக்கொள்ளலாம்.
காட்டுக்குள்ள சுள்ளி பொறுக்க எங்களிடம் அனுமதி வாங்கவேண்டும் என்று கிஷோர் சொல்லும் போது, அப்படிப்பார்த்தால் காட்டுக்குள் வருவதற்கு நீ எங்ககிட்டதான் அனுமதி வாங்கனும் என்கிற ரிஷ்ப் ஷெட்டியின் ஒற்றை வரி பதில் ஓராயிரம் அர்த்தங்களை கொடுக்கிறது. உண்மைதானே, காலம் காலமாக காட்டில் வசிக்கும் பழங்குடிகளான நம் முன்னோர் தானே உண்மையான காட்டிலாக அதிகாரிகள். அவர்கள், தந்தங்களை கடத்துவதற்காக யானைகளை கொல்வதில்லை, தோல்களை விற்று சம்பாதிப்பதற்காக புலிகளை வேட்டையாடுவதில்லை, காட்டை அழிக்கும் அளவிற்கு அவர்கள் மரங்களை வெட்டி கடத்துவதில்லை, பட்ட மரங்களை அப்புறப்படுத்துகிரார்கள் அந்த இடங்களில் புதிய மரங்கள் வளர்கிறது. அந்நியர் புகுந்து காட்டுவிலங்குகளை வேட்டையாடாமல் பார்த்து கொள்கிறார்கள், அதனால் காட்டு விலங்குகளும் இவர்களிடம் சினேகமாக இருக்கிறது!
நாயகன் மட்டுமல்லாது படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பி அக்னீஷ் லோக் நாத்தின் இசை அற்புதம். பின்னணி இசையுடன் அந்த இறுதிக்காட்சியில் அவர் கொடுத்திருக்கும் இசை, படம் பார்ப்பவர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும்!
அரவிந்த் எஸ் காஷ்யப் இன் ஒளிப்பதிவு அந்த மலைகளையும், அரசனின் மாளிகை, எளிய மக்களின் மண் வீடுகள் என்று அத்தனையையும் கண்களுக்குள் கடத்துகிறது.
இந்த உலகின் மிகப்பெரிய மூட நம்பிக்கையே என் பேர்ல இத்தனை ஏக்கர் நிலம் இருக்கு என்பதுதான்..!
இந்த உலகின் கொடூரமான பாவச்செயல், பாரம்பரிய வழக்கங்களை குறிப்பாக எளிய மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை இழிவுபடுத்தி எள்ளி நகையாடி அதை அழிக்கப்பார்ப்பது தான்.,.!
ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூருக்கும் காந்தாராவை தமிழுக்கு கொண்டு வந்திருக்கும் டிரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபுவுக்கும் நன்றிகள் பல!
காந்தாரம், ஒவ்வொரு திரைரசிகர்கனையும் கவந்திழுக்கும்!