a K.Vijay Anandh review
அப்பா – மகன் , ஒரே நடிகர் பார்முலா என்பது நமது சினிமாக்களில் வெற்றிகரமான ஒரு பார்முலா. அந்த வகை படங்கள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், சர்தாரில் அப்படி ஒரு கதாபாத்திர வடிவமைப்பு பார்க்கும் போது, முதலில் மிகவும் ரசிக்கமுடிகிறது.
அதற்கடுத்ததாக, இந்திய உளவாளிகள் பற்றி இன்று இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் மிகவும் சிலாகித்து பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மையக்கதாபாத்திரமாக இந்திய உளவாளி யை வைத்திருப்பது அடுத்த ரசிக்கத்தக்க விஷயம்.
மூன்றாவதாக, இவ்வளவு பெரிய ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தின் கதைக்களமாக இன்று சர்வதேச வணிகமாகிக்கொண்டிருக்கும் தண்ணீர் ஐ வைத்தது சர்தார் படத்திற்குள் மிகவும் ஒன்றிப்போக முடிகிறது.
மிகப்பெரிய ஆக்ஷன் படமாக கைதியை கொடுத்திருந்தாலும், சர்தார் படமே கார்த்திக்கு ஒரு முழுமையாக ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
தொள தொள வெள்ளை சட்டையுடன் 30 வருடங்களுக்கு முந்தைய அப்பா கார்த்தி, ஒரு மேடை நாடக கலைஞன் சந்திரபோஸ் - ஆக இருந்துகொண்டே இந்திய அரசாங்கத்தின் அதிமுக்கிய உளவாளி சர்தாராக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
அதே வெள்ளை சட்டை ஆனால், பிட்டாக போட்டுக்கொண்டு மகன் கார்த்தி, - விஜய்பிரகாஷ் என்கிர காவல்துறை உதவி ஆய்வாளராக , சின்ன சின்ன விஷயங்களை பெரிய பெரிய டிரெண்டாக்கி கொண்டு நடு நடுவே ராசி கண்ணாவுடன் காதலும் செய்து கொண்டு ரசிக்க வைத்திருக்கிறார்.
வங்காள தேச சிறையில் இருந்து தப்பிக்க சர்தார் கார்த்தி சண்டை போட்டுக்கொண்டிருக்கும் போதே, சர்தார் பற்றிய விவரங்கள் தேடிப்போன இடத்தில் வில்லனின் ஆளுடன் சண்டை போடும் மகன் கார்த்தி, இரண்டுமே ஒரே நேரத்தில் நடப்பதாக காட்சிப்படுத்திய விதம் அருமை. இயக்குநருக்கும் எடிட்டருக்கும் ஒரு சபாஷ்.
ஒரு உளவாளி, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், மெக்கானிக் ஷெட் வைத்திருக்கும் யூகிசேது அல்லது சிங்கிள் மதராக சமூகத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் லைலா போன்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், மிகவும் ஆச்சிரியமாக எந்தவிதமான நெருக்கடியான சூழலிலும் அவர்கள் தேசத்திற்கு ஆற்றும் பங்கு அலாதியானது. அது சாமான் ய மக்களுக்கு கற்பனையிலும் எட்டாதது.
அவர்கள் சிறப்பாக வேலைசெய்தாலும் கவனிக்கப்படுவதில்லை, அனாதையாக செத்துப்போனாலும் அழுவதற்கு யாரும் இருக்கப்போவதில்லை. இந்த விஷயத்தை சர்தார் கார்த்தி விஷயத்திலும் , சிங்கிள் மதர் லைலா விஷயத்திலுமாக வைத்து உளவாளிகள் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் பி எஸ் மித்ரன்.
பெரிய விளக்கமெல்லாம் கொடுக்காமல் கார்த்தி சொல்லும் அந்த இரண்டே வார்த்தை காய்ச்சி குடிங்க காய்ச்சி குடிங்க.. காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து தண்ணீரை விற்கும் ஒவ்வொருவரும் மனிதகுலத்திற்கு எதிரானவர்களே என்பதை மாஸ்டர் ரித்விக் மூலமாக உலகிற்கு சொல்லியிருக்கும் விதம் அருமை.
இரண்டு கா க்களுக்கும் படம் முழுவதும் நிறைய வேலை இருப்பதால் இரண்டு ரா க்களுக்கும் ( ராஷி கண்ணா , ர்ஜிஷா விஜயன் ) குறைவான காட்சிகளே, இருந்தாலும் நிறைத்துவிடுகிறார்கள்.
முறுக்கு மீசை முனிஷ்காந்த், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தூக்கி சாப்பிட்டுவிடும் குணச்சித்திர காமெடி நடிகர், இதிலும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
அதென்ன, நிஜமான அணைக்கட்டா அல்லது செட்டா..? ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் பார்த்து ரசித்தது போன்ற கிளைமாக்ஸ் காட்சி அமைப்பு. கலை இயக்குநருக்கும் கணிப்பொறி வல்லு நர்களுக்கும் ஒரு சபாஷ். ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவும் சிறப்பு!
அப்பாவுக்கு ஒரு பெர்ஃபாமென்ஸ் பாட்டு மகனுக்கு ஒரு ஜாலியான காதல் பாட்டு என்று இரண்டே பாடல்களுடன் சிறப்பான பின்னணி இசையும் வழங்கி படத்திற்கு மெருகேற்றியிருக்கிறார் ஜீவி பிரகாஷ்.
சர்தார், இந்திய உளவாளிகளுக்கு மரியாதை – ரசிகர்களுக்கு திரை விருந்து!