a K.Vijay Anandh review
இன்று பெளர்ணமியா என்று தெரிந்துகொள்ள, காலண்டரை பார்க்க வேண்டும் அல்லது அன்னாந்து வானத்தையாவது பார்க்கவேண்டும். அப்படி தலை நிமிர்ந்து வானத்தை பார்க்க கூட ஒரு காரணி தேவைப்படுகிறது. குழந்தைகளாக இருந்தால், தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும் போது அவளது கைகள் பெளர்ணமியை காட்டும். வளர்ந்த வாலிபனாக இருந்தால், குழந்தையாக இருக்கும் போது அவன் நட்ட மரம் அன்னாந்து பார்க்க சொல்லும். அப்பொழுது முழு நிலவு தெரியும்.
சரி ஏன் முழு நிலவு தெரியவேண்டும்..?
பெளர்ணமி பெளர்ணமி காதலியுடன் கடற்கரைக்கு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டதே, இந்த பெளர்ணமிக்கும் அவள் அங்கே தானே வந்திருக்க முடியும்! நம்பனும்!
இப்படி படம் முழுவதும் ஒரு புதியதலைமுறை கவிதைகள் போன்ற காட்சியமைப்புகள், பிரதீப் ரங்கநாதன் 154 நிமிட படத்தை, அதுவும் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட படத்தை ராக்கெட் வேகத்தில் கொண்டு சென்றிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
உத்தமன் பிரதீப்புக்கும் நிகிதாவுக்கும் இடையிலான காதல் திருமணத்தில் முடியுமா..? என்பது தான் படம் முழுவதும், கிட்டத்தட்ட படம் ஆரம்பித்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே ஆரம்பித்துவிடுகிறது இந்த கேள்வி.
மிகவும் சவாலான தொடக்கத்தை கொடுத்துவிட்டு, மிகவும் சுவராஸ்யமான திரைக்கதை காட்சியமைப்புகள் நடிகர்களின் குறிப்பாக பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானாவின் அட்டகாசமான நடிப்புகளுடன் கதை வேகமாக பயணிக்கிறது. பிரதீப் ரங்க நாதன், அறிமுக கால தனுஷ் மற்றும் எஸ் ஜே சூர்யா சேர்ந்த கலவை அவர்களுடன் இயக்கு நர் பிரதீப்பும் சேர்ந்துகொண்டு வசனங்கள், உடல்மொழிகள் என்று அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இவானா, இவர் நடிப்பை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. படம் பார்க்கும் போது தெரியும்,, இவரை போல ஒரு காதலி கிடைக்கமாட்டாரா என்று இளைஞர்கள் தவம் செய்யப்போவது உறுதி!
நாலு சுவருக்குள்ளாக நாலஞ்சு காட்சிகளே வரும் சத்யராஜ் தான் படத்தின் நாரதர், இருவரின் மொபைலை மாற்றிக்கொள்ள செய்ய்யும் நாரதரின் கலகம் நன்மையில் முடிகிறதா என்பது தான் முழுப்படமும். சத்யராஜ், ஒரு சீனியர் நடிகராக, இந்த தலைமுறை நடிகர்களுடன் போட்டி போட்டு அவர்களது காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு அசாத்தியமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கட்டப்பாவிற்கு பிறகு, இந்த வேணு சாஸ்திரியும் நீண்ட நாட்கள் பேசப்படுவார்.
இன்னொரு பக்கம், யோகிபாபு – ரவீனா, நிச்சயம் செய்யப்பட்ட ஜோடியாக ஒரு நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். உருவகேலியால் பாதிக்கப்படுவதை உணர்ச்சி மேலிட சொல்லும் இடங்களில், யோகிபாபுவும் அசத்துகிறார்.
ஆண்வர்க்கம் என்றால், அந்தக்கால ஆண் இந்தக்கால ஆண் என்று ஒரு புரிதல் இல்லாமல் கூட இருந்துவிடமுடியும். ஆனால், பெண்கள் எக்காலத்திலும் ஒரே மாதிரிதான், ஒவ்வொரு பெண்ணும் சக பெண்கள் அனுபவிக்கும் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளையும் அனுபவிக்கவே செய்கிறார்கள். ராதிகா சரத்குமார், அந்தப்பக்கம் இவானாவின் தங்கையாக வருபவர் என்று ஒரு தேர்ந்த அனுபவ மற்றும் யதார்த்த வார்த்தைகளை உதிர்த்தி இருவர் புண்களையும் ஆற்றுகிறார்கள். கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியமைப்புகள் சத்யராஜ் , தம்புரா வாசிக்க தொடங்குவதிலிருந்து முடியும் வரை அற்புதமான தொகுப்புகளாக ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கின்றன.
யுவன் சங்கர் ராஜாவின் இசை ஒரு பக்கம் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு இன்னொரு பக்கம் அற்புதமாக அமைந்திருக்கிறது என்றால், ப்ரதீப் ஈ ராகவ், எடிட்டிங்கில் தாண்டவமாடியிருக்கிறார். பல இடங்களில் வித்தியாசமான காட்சிக்கோர்வைகளை ரசிக்க முடிகிறது.
லவ் டுடே படம் மூலம், பிரதீப் ரங்கநாதன், நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் குறிப்பாக இன்றைய 6 ஜி சமூக வலைத்தள தலைமுறைக்கு!
இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் சரியான திரைவிருந்து லவ் டுடே.