a K.Vijay Anandh review
நமது படைப்பாளிகள் அதுவும் புதியவர்கள் தமிழ் சினிமாவை கற்பனை கூட செய்ய இயலாத இடத்திற்கு இட்டுச்செல்கிறார்கள். சமீபத்திய வரவு உடன்பால், இயக்குநர் கார்த்திக் சீனிவாசன்.
நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு காஸ்ட்யூம், விதிவிலக்கு அண்ணன் வீட்டிற்கு அம்மாவை கும்பிட வெளியூரிலிருந்து அதிகாலை வந்துசேரும் காயத்ரி அவரது கணவர் விவேக் பிரசன்னா அவர்களது குழந்தை மான்ய ஸ்ரீ. அவர்களும் அடுத்த காட்சியில் ஒரு உடை மாற்றிக்கொண்டு படம் முழுவதும் அதிலேயே வருகிறார்கள். சரி, யாரு அண்ணன்..? அட பரோல்ல கலக்கிய லிங்கா, அவரது மனைவியாக அபர்நதி ஒரே மகன் தர்ஷித் சந்தோஷ். அவர்களுடன் வயோதிகம் மறதியால் அவதிப்படும் அத்தையாக தனம். 90% கதை நடப்பதும் ஒரே வீட்டிற்குள் தான். சார்லி தான் அந்தவீட்டின் குடும்பத்தலைவர்.
90% படமும் ஒரே வீட்டிற்குள், அதுவும் ஜெட் வேகத்தில் பயணிக்கின்றது படம், பொழுதுபோக்கவேண்டும் என்பதற்கான செயற்கையான காட்சித்திணிப்புகள் எதுவுமே இல்லாமல்… எப்படி யோச்சிக்கிறாங்க..? அண்ணன் லிங்காவிற்கும் பணத்தேவை, தங்கை காயத்ரிக்கும் பணத்தேவை – வீட்டை விற்கும் பேச்சுகே இடமில்லை என்று சொல்லிவிட்டு வழக்கம்போல சார்லி போகும் வள்ளலார் காம்ப்ளெக்ஸ் இடிந்துவிழுகிறது. அதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் அரசு இழப்பீடாக அறிவிக்கிறது.
வீட்டை விற்க அப்பா சம்மதித்திருந்தால் கூட 20 லட்சத்திற்கும் கீழே தான் கிடைக்கும், செத்து 20 லட்சம் கொடுத்துட்டாரே என்று வருத்தமும் குதூகலகமுமாக குடும்பம். எப்படி 20 லட்சத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று வெளியே போகலாம் என்றால், வாசலில் உயிரோடு வந்து நிற்கும் அப்பா சார்லி.
இது இடைவேளைதான், அடுத்த பாதியில் என்ன நடக்கின்றது என்பது முதல்பாதியை விட வேகமான திரைக்கதை.
ஒரு Lower Middle Class வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டு வருகிறார்கள். சந்தோஷமும் இல்லாமல் சோகத்தையும் வெளிகாட்ட முடியாமல் என்று லிங்கா முதல் ஒவ்வொருவரும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். மாற்றி மாற்றி பேசும் தங்கையாக காயத்ரி, சிறப்பாக நடித்திருக்கிறார். வதந்தியில் நொறுக்குத்தீனி திங்க ஆரம்பித்தவர் இதிலும் கீழே வைக்கமாட்டேங்கிறார், நொறுக்குத்தீனியை. ரசிகர்களுக்கு, விவேக் பிரச்சன்னா நொறுக்குத்தீனி. குழந்தைகளும், மறதியால் அவதிப்படும் தனமும், கடைக்குட்டியாக ஒட்டிக்கொள்ளும் தீனாவும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். சார்லி, கேட்கவா வேண்டும். மகளிர் மட்டும் பட்த்தில் நாகேஷுக்கு கிடைத்த கதாபாத்திரம், இதில் இவருக்கு, வாழ்ந்திருக்கிறார்… இல்ல இல்ல செத்திருக்கிறார்…
லிங்காவிற்கு கதவுகள் திறக்கப்பட்டாகிவிட்டது, அடுத்து ஒரு பெரிய இன்னிங்ஸுக்கு இனி அவர் முழுவிச்சில் தயாராக வேண்டும். நடிப்புத்திறமையும் நல்ல தோற்றமும் கொண்ட இளம் நடிகர்களுக்கான காலி இடத்தை அழகாக நிரப்ப ஆரம்பித்திருக்கிறார். இந்தக்கதையை கேட்டிருந்தால், அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று எந்த முன்னணி இளம் நாயகனும் பறித்துக்கொள்ளும் கதாபாத்திரம். மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அபர்நதி, வெறும் மஞ்சக்கயிறோடு குடும்பத்தை தாங்கும் இல்லதரசி. நாத்தனாரின் மீது காட்டும் எரிச்சல், அதைவிட கொஞ்சம் அதிகமாக நாத்தனார் வீட்டுக்காரனிடம் காட்டும் கோபம் கலந்த எரிச்சல், கையாலாகாத – அதாவது தங்கள் குழந்தைக்கு சொன்னமாதிரி சைக்கிள் கூட வாங்கித்தர வக்கில்லாத – கணவனையும் பொறுத்துக்கொள்ளும் பாங்கு, வயோதிகத்தால் அவதிப்படும் தன் அம்மாவை பார்த்துகொள்வது என்று – இந்த பிரேமா மாதிரி ஒரு மனைவி இருந்தால் எதுவுமே இல்லாவிட்டாலும் அவனுக்கு எல்லாமே இருப்பது போன்ற அழகான வாழ்க்கை அமைந்துவிடும் என்று சொன்னால் அது மிகையாகாது. லிங்காவுக்கும் இவருக்கும் தான் ரேஸ், மாறி மாறி ஜெயிக்கிறார்கள்.
நீ உன் அப்பனை பார்த்துக்கிட்ட மாதிரிதான் நானும் உன்னை பார்த்துப்பேன் என்று அப்பன் மூஞ்சியில் மட்டுமல்ல – பெரியவர்களை சுமையாக – பணம் கரக்கும் மிஷினாகவே கருதும் – ஒவ்வொருத்தர் மூஞ்சியிலும் – நோட்டை எறிந்திருக்கிறார் , தர்ஷித் சந்தோஷ்.
முதலிலேயே குறிப்பிட்டது போல, தமிழ் சினிமாவை இன்னொரு தளத்திற்கு இட்டுச்சென்றிருக்கிறது உடன்பால்.