a K.Vijay Anandh review
திரிஷா, தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார்களுள் ஒருவர். பொன்னியின் செல்வன் 1 இன் மிகப்பெரிய வெற்றியை அடுத்து, ராங்கியாக ரசிகர்களுக்கு ஆக்ஷன் எண்டெர்டெயின்மெண்ட் கொடுத்திருக்கிறார்.
தையல் நாயகி என்கிற பத்திரிகையாளராக, லோக்கல் காவல்துறையுடன் மோதல் என்று அறிமுகமாகும் திரிஷா, சர்வதேச தீவிரவாதிகளை இண்டர்போல் வேட்டையாட தெரிந்தோ தெரியாமலோ உதவுகிறார்.
பெரிய ஒப்பனைகளின்றி, சுஷ்மிதாவின் அத்தையாக, பொறுப்பான பத்திரிகையாளராக கச்சிதமாக பொருந்திப்போகிறார். பள்ளிக்குழந்தைகளுக்கு சமூகவலைத்தளம் மூலமாக பாலியல் சீண்டல்கள் தரும் பெருசுகளை மிகவும் வித்தியாசமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
அதில், மிச்சம் மீதியாக இருக்கும் ஆலிம் என்பவனையும் திருத்திவிட்டு அக்கவுண்டை குளோஸ் செய்யலாம் என்று நினைப்பவருக்கு, எதிர்பாராத திருப்பங்கள், அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும்.
இணைய தளம் வந்துவிட்ட அதுவும் சர்வதேச அளவிலான சமூக வலைத்தள பக்கங்கள் பெருகிவிட்ட இன்றைய தேதியில், அதன் வாயிலாக நாம் செய்யும் தவறு, சர்வதேச தவறாகிவிடுவதை சுஷ்மிதா – ஆலிம் இடையிலான ஆன்லைன் உரையாடல்கள் எச்சரித்திருக்கின்றன.
சுஷ்மிதா பக்கம் எந்த தவறும் இல்லாத நிலையில், சுஷ்மிதா வின் சமூகவலைத்தளப்பக்கத்தை பயன்படுத்தி, சில முக்கியமான தகவல்களை சி பி ஐ மற்றும் இண்டர்போல் பெறுவதற்கு திரிஷாவும் காரணமாகிவிடுகிறார், அதனால் தப்பிக்கிறார்.
ஆலிம் , சிறப்பாக நடித்திருக்கிறார்.
கே எ சக்திவேலின் ஒளிப்பதிவு மிகவும் அருமை, குறிப்பாக உஸ்பெக்கிஸ்தானில் நடக்கும் காட்சிகள் அதன் மலைத்தொடர்கள் என்று பிரமிக்க வைக்கின்றன.
உங்கள் தாழ்மையுள்ள என்கிற ஒற்றை வார்த்தையை வைத்து தொடரும் அடிமைத்தனத்தை விளாசும் திரிஷா மாஸ் ஹீரோயின் என்பதை நிரூபிக்கிறார்.
இண்டர்போலால், தீவிரவாத இஸ்லாமியனாக முத்திரை குத்தப்பட்டிருக்கும் ஆலிமின் கைகளில் ஓம் டாலர் கட்டிவிட்டு அழகுபார்க்கும் இயக்குநர் சரவணனின் துணிச்சலுக்கு ஒரு ஓ போடலாம்.
நாட்டில் கனிம வளம்- இருந்தால் அது அரசியல்வாதிகளாலோ பெரு நிறுவனங்களாலோ கொள்ளையடிக்கப்படலாம் என்பதாக எச்சரித்திருக்கிறார்கள்.
ஒருவகையில், அவற்றை கொள்ளையடிப்பது சில தனி நபர்களாக இருக்கலாம், ஆனால், பயனாளிகள்..? விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு அடிமையாகிபோன ஒவ்வொரு சாதாரண குடிமகன்களும் தான் என்கிற கசப்பான உண்மையையும் உணரவேண்டியுள்ளது.
மொத்தத்தில், அருமையான ஏ ஆர் முருகதாஸின் கதையை நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் சரவணன்.
ராங்கி, சரியானதை செய்பவள்!