a K.Vijay Anandh review
முதல்பாதி புதுவசந்தத்தையும் இரண்டாம்பாதி திருப்பாச்சியையும் நினைவுபடுத்தும் மெய்ப்பட செய்.
குடியும் கும்மாளமுமாக இருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது..? தவிர, கிராமங்களில் இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்கள் வேறென்ன இருக்கிறது என்று வருத்தப்பட வைக்கிறது மெய்ப்பட செய் நாயகன் ஆதவ் பாலாஜி அவரது நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சியமைப்புகள்.
மது அரசு வியாபாரம் ஆகி, தமிழர்களின் கலாச்சாரம் ஆகிவிட்ட நிலையில், தமிழச்சிகள் மட்டும் என்ன விதிவிலக்கா..? மதுப்பழக்கம் இல்லாதவனைத்தேடி ஓடினால் ஒளவையார் ஆகிவிடுவோம் என்று தெரிந்து வைத்திருக்காதவர்களா அவர்கள்..? மதுனிகாவிற்கு, ஆதவ் பாலாஜி மீது காதல் வருவதில் என்ன ஆச்சிரியம் இருக்கப்போகிறது.
ரெண்டு ஊரும் மோதிக்கொண்டதால், நண்பர்களுடன் நகரத்திற்கு பிழைக்கவரும் காதல் ஜோடி. ஒரு பெண், நான்கு நண்பர்கள் என்று புதுவசந்தம் போல ஒரு கதை சொல்லப்போகிறார்களோ என்று நினைத்தால், இரண்டாம் பாதியை திருப்பாச்சி ரேஞ்சுக்கு வைத்திருக்கிறார்கள்.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு பிழைப்பு தேடிவந்தோமா..? வாழ்க்கையை அனுபவித்தோமா என்று இல்லாமல், காணாமல் போன ஒரு பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வேரறுக்கிறார் நாயகன்.
ஆதவ் பாலாஜி, ஆரம்பகாலகட்ட மோகன்லால் மாதிரி தெரிகிறார், குறை சொல்லமுடியாத நடிப்பையும் வழங்கியிருக்கிறார். நாயகி மதுனிகாவும், இயல்பாக வந்துபோகிறார்.
மிரட்டல் செல்வாவின் சண்டைக்காட்சிகள் நிஜமாகவே மிரட்டல் ரகம், நாயகிக்கும் அடி வாங்கி கொடுத்திருக்கிறார்.
நாயகியின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பி.ஆர்.தமிழ் செல்வம், ஆரம்பத்தில் அடாவடியாக நாயகனை மிரட்டிவிட்டு மாமனை சமரசம் ஆகிட்டான் இனி நம்ம வீட்டுப்புள்ள வாழ்க்கை நல்லாயிருக்கனுமே என்கிற கிராமத்து தாய்மாமனின் உணர்வுகளை பிரதிபலித்து அமைதியாகிவிடுகிறார். போகிறபோக்கில் வந்தாலும் அந்த காட்சியமைப்புகளில் யதார்த்தம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.
கட்ட கஜா என்ற தாதா வேடத்தில் வரும் ஆடுகளம் ஜெயபாலும் அவரது மகன் மற்றும் அடியாள் கூட்டமும் மிரட்டியிருக்கிறது.
ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடமாடும் நாடி ஜோதிடராக ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தாலும் பயில்வான் ரங்கநாதன் தான் இரண்டாம் பாதியின் விறுவிறுப்புக்கு வித்திடுகிறார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வேலின் பங்கு சிறப்பாக இருக்கிறது என்றால், பரணியின் இசையில் வரும் பாடல்கள் மிகவும் அற்புதம். நிச்சயமாக சூப்பர் ஹிட் ஆகவேண்டிய பாடல்கள், அவை படம்பிடிக்கப்பட்ட விதங்களும் அருமை.
பாலியல் வன்புணர்வு தான் படத்தின் மையக்கரு என்றாலும், அது குறித்தான நேரடியான அருவருக்கத்தக்க வகையிலான காட்சிகள் ஏதுமின்றி முற்றிலும் எதிர்பார்க்காத திரைக்கதை அமைத்து படத்தை இயக்கிய விதத்தில் இயக்கு நர் வேலன், சிறந்த படைப்பாளியாக வருவார் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
பல்லாயிரக்கணக்கான குற்றங்கள் நடந்தாலும் 10% பாலியல் குற்றங்களிலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. ஆனாலும் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் மட்டுமே கிடைக்கின்றன என்பதை தவிர பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கத்தேவையான தீர்வுகளை இன்னும் ஏற்படுத்த முடியவில்லை.
இந்தப்படத்தில் கூட , பாலியல் குற்றங்களில ஈடுபட்ட சட்டத்தின் ஓட்டைகள் வழியே தப்பித்துவெளியே வரும் வில்லனுக்கு நாயகன் கொடூரத்தண்டனை வழங்குகிறான் அவ்வளவே!
மெய்ப்பட அதாவது உண்மையாக நடந்துகொள்வது மட்டுமே பாலியல் குற்றங்களுக்கான தீர்வாக இருக்கமுடியும் என்பதை மெய்ப்படசெய் என்று தலைப்பாக வைத்து வந்திருக்கும் இப்படம் பல்வேறு விதங்களில் பாராட்டப்படவேண்டிய படமாக வெளிவந்திருக்கிறது.