a K.Vijay Anandh review
இந்த இயக்குநர் ஒரு குறிப்பிட்ட சாதிக்காக படமெடுக்கிறார், காவிக்காக படமெடுக்கிறார் என்று முத்திரை குத்திவிடாதீர்கள். உண்மையில், ஒவ்வொருவரின் வீட்டு பெண்களுக்காக, அப்படி பொய்யாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் வைப்பவர்களின் வீட்டுப்பெண்களுக்காகவுமாக பாகாசுரனை எடுத்திருக்கிறார்.
வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும், மஹாபாரத கூத்தில் பீமனாக வேடம் போடும் கூத்துக்கலைஞன் செல்வராகவன், தான் ஏற்கும் அந்த கதாபாத்திரப்பாணியிலேயே எதிரிகளை வதம் செய்வதும் – ஓய்வுபெற்ற இராணுவ வீரராக கிரைம் சம்பவங்களை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் யூடியூபர் நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம் – தனது வீட்டுப்பெண்ணின் இழப்பிற்காக நடத்தும் புலனாய்வும் ஒரு புள்ளியில் இணைவதுமாக அமைக்கப்பட்ட திரைக்கதை அருமை. கிட்டத்தட்ட முதல்பாதியிலேயே சம்பந்தப்பட்ட மூன்று பேரும் கொல்லப்படுகிறார்கள் என்கிற போதிலும், இரண்டாவது பாதியில் நாயகி தாராக்ஷியின் மறைவு பற்றி அவரது தாத்தா கே ராஜன் விவரிப்பதாக வரும் காட்சிகளுடன் இறுதிக்காட்சியில் யாருமே எதிர்பாராத வகையில் ராதாரவி சம்பந்தப்பட்ட காட்சிகளை அமைத்து இரண்டாம் பாதியை இன்னும் விறுவிறுப்பாக்கியிருக்கிறார்கள்.
செல்வராகவன், கூத்துக்கலைஞனாக, இன்னொரு மனைவியை திருமணம் செய்துகொள்ளாமல் மகளுக்காகவே வாழ்பவராக, மகளை கொன்ற அசுரர்களை பழிவாங்குமிடங்களில் நிஜமாகவே பீம அவதாரம் எடுப்பவராக, எல்லாவற்றையும் செய்துவிட்டு, சிவாலயங்களில் கிடைக்கும் பிரசாதங்களை சாப்பிட்டுக்கொண்டு அப்பாவியாக சுற்றித்திரியும் சிவனடியாராக என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் அட்டகாசமாக பொருந்திப்போகிறார். கே ராஜன், வாத்தியார் ராஜகோபால் கச்சிராயராக – அன்பான தாத்தாவாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
தாராக்ஷி, பெரிய ரவுண்டு வருவார் தமிழ் சினிமாவில். அவரது காதலனாக வரும் குணாநிதியும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. முதல் படத்தில் இவர் தற்கொலை செய்துகொள்வார், இரண்டாம் படமான பாகாசுரனில் இவரது காதலி தற்கொலை செய்துகொள்கிறார் என்பது சுவராஸ்யமான தகவல்.
Subscribe mysixer.com on youtube for videos
முன்னாள் இராணுவ வீரருக்கு உரிய கம்பீரத்துடன், காவல்துறைக்கும் சிக்கலான வழக்குகளை துப்புதுலக்க உதவும் நட்டி சதுரங்க வேட்டைக்கு பிறகு மீண்டும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார்.
சசி லயா, கூல் சுரேஷ் போன்றவர்கள் அருவருக்கத்தக்க கதாபாத்திரங்களை ஏற்று துணிச்சலாக நடித்து இந்தக்கதைக்கு வலுசேர்த்திருக்கிறார்கள். இவர்களே அப்படியென்றால், ராதாரவி போன்ற வாழ்க்கையையே நடிப்புக்காக அர்ப்பணித்த நடிகனை பற்றி கேட்கவா வேண்டும்..? இன்னும் அந்த வில்லத்தனத்தால் பயமுறுத்திக்கொண்டிருக்கிறார். பல்வேறு காரணங்களால் இளம் பெண்கள், குடியால் கணவனை இழந்த விதவைகள் என்று விபச்சாரத்திற்கு வருவதாக வரும் அந்த ஒற்றைக்காட்சியில் பெரும் சமூக அவலத்தை சொல்லி எச்சரித்திருக்கிறார் இயக்குநர். சசி லயாவை கொல்லுமிடத்தில், என்னை கற்பழித்துவிடாதே கொன்றுவிடு என்பது போய், என்னுடன் எப்படிவேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள் ஆனால் கொன்றுவிடாதே என்று அவர் சொல்லும் அந்த ஒற்றை வசனத்தில், இந்த சமூக அமைப்பு பெண்களை எப்படி மாற்றிவிட்டது என்பதை சொல்லிய இடத்தில் கைதட்டல்களையும் அள்ளுகிறார் இயக்குநர் மோகன் ஜி
சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும், பாடல்களும் அருமை. குறிப்பாக என்னப்பன் அல்லவா… பாடல் நிச்சயம் ஒரு ஆன்மீக அதிர்வை ஏற்படுத்தும், இனி பட்டிதொட்டிகளெல்லாம் நடக்கும் விழாக்களில் அது நிரந்தரமாக ஒலிக்கும்.
ஒருவேளை எல்லா வதங்களையும் முடித்துவிட்டு இறுதியாக தெப்பக்குள்ளத்தில் மூழ்கி எழுந்துவிட்டு என்னப்பன் பாடலை…. வைத்திருக்கலாமோ என்றும் தோன்றாமல் இல்லை…..
அசுரர்களை அழிக்கும் பீமராசு என்கிற நீதியின் பக்கம் நிற்கும் கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்காமல், பகாசுரன் என்று வில்லனின் பெயரை டைட்டிலாக வைத்திருக்கிறாரே என்கிற யோசனை எழும். இன்று, நாயகர்களை விட வில்லன்களை பற்றி தெரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக இருக்கலாம்.
சரி, அந்த வில்லன் பகாசுரன் யாருங்க..? அட நம்ம கையிலும், பையிலுமாக 24 மணி நேரமும் இருப்பவர் தான் என்று அறியும் போது நிஜமாகவே ஷாக்கிங்காக தான் இருக்கிறது. அந்த பகாசுரனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது.
யார் என்ன சொன்னாலும் மண்ணும் பெண்ணும் தான் அந்தந்த பகுதிகளில் வாழும் சமூகத்தின் கலாச்சார ஆணிவேர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில், காந்தாரா, மண்ணைக்காப்பாற்ற வந்தபடம் என்றால் இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருக்கும் பகாசுரன் நம் பெண்ணைக்காப்பாற்ற வந்த படம் என்று சொன்னால் அது மிகையாகாது.