a K.Vijay Anandh review
யுவன் ஷங்கர் ராஜாவின் அர்புதமான பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையுடன் யுவாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஷாபிக் முகமது அலியின் அளவான கத்தரி இவற்றுடன் சுவராஸ்யமான திருப்பங்கள் எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆகியவற்றுடன் தரணி தரன் அமைத்திருக்கும் திரைக்கதை, எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமான தலைப்பு என்று ராஜா ரங்குஸ்கியை ரசிகர்களின் கவனத்தைக் கவரும் வகையிலான வெற்றிப்பட வரிசையில் நிற்கவைத்திருக்கின்றன.
முதல் கொலை செய்யும் போதுதானே நடுக்கம் இருக்கும், இது நாலாவது கொலை என்று பிளாஷ்பேக் இல்லாமல் வசனத்தாலேயே ”குணமாகப்” பயமுறுத்தி விடுகிறார் இயக்குநர் தரணிதரன். அட., இதற்கு முன் திரைப்படங்களில் இவர் இருப்பார், இனி இவரால் திரைப்படங்கள் கவனிக்கப்படும் என்கிற அளவிற்கு ஒரு வில்லன் நடிகரை அறிமுகப்படுத்தியிருக்கிறார், தனது கதையை மட்டுமே நம்பி.
மெட்ரோ சிரிஷ், ஒரு இளம் காவலராக வசீகரிக்கிறார். முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். கொஞ்சம் சீரியசாகவே வந்தாலும், பெரிய நடிகர் வரிசையில் நானும் இருப்பேன் என்று இந்தப்படத்திலும், அடித்தெல்லாம் சொல்லாமல், அளவாக நடித்தே சொல்லியிருக்கிறார். இவரை ஒவ்வொரு பிரேமிலும் கலகலனு சிரிக்க வைச்சு ஒரு படம் இயக்க யாரேனும் முன்வந்தால் அதைப்பயன்படுத்திக் கொள்ளுங்கள் சிரிஷ்.
அட, சாந்தினி, நம்பிக்கையுடன் படிகளில் ஏறிக்கொண்டே இருந்தால் திடீரென்று அவை எஸ்கலேட்டராக மாறி நம்மை அடுத்த கடட்த்திற்கு விரைவாக ஏற்றிவிடும். ராஜா ரங்குஸ்கி, இவருக்கு ஒரு எஸ்கலேட்டர்.
இன்ஸ்பெக்டர் விஜய் சத்யா, சிபிசிஐடி ஜெயகுமார், காவலர் கல்லூரி வினோத் என்று இயல்பான இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் புதியதாகத்தான் இருக்கிறது. மரியா கொலையில் துப்புத்துலக்கப் போகும் ஜெயகுமார், இப்படித்தான் நடந்திருக்கும் என்று ஊகிப்பதெல்லாம், நகைப்புக்குரியதாக இருக்கிறது. முந்தைய பிந்தைய காட்சிகள் போல அதையும் இயல்பாக யோசித்திருக்கலாம்.
அனுபமா குமார் கதையின் மையக்கருவான கதாபாத்திரம், இரண்டு மூன்று காட்சிகளே வந்தாலும் கவனிக்க வைத்துவிடுகிறார்.
ராஜா ரங்குஸ்கி, எழுத்தாளர் சுஜாதாவின் அட்டைப்படத்திற்குள் ராஜேஷ்குமாரின் சிறுகதை படித்த அனுபவம் என்றால் மிகையாகாது.