கதாநாயகனின் இரண்டாவது படம், அந்தப்படத்திற்கு வசனம் எழுத வேண்டியவர் குறித்த நேரத்தில் எழுதித்தராததால் வேறு ஒரு வசனகர்த்தாவைப் போட முடிவு செய்கிறார் தயாரிப்பாளர். தனக்குத் தெரிந்த 22 வயது வசனகர்த்தாவை சிபாரிசு செய்கிறார் கதாநாயகன் அரைமனதுடன் அந்த வசனகர்த்தாவை வசனம் எழுதப் பணிக்கிறார் தயாரிப்பாளர். வசனம் எழுதி படம் வெளிவந்து சக்கைப்போடு போடுகிறது.
இன்னும் ஒரு வெற்றி படத்தில் நடித்து விட்டால் தமிழ்சினிமாவில் நிரந்தமான ஒரு இடத்தைப் பிடித்து விடலாம். பிரமாண்டமான ஒரு படத்தின் கதாநாயகன் தேர்வில் கலந்து கொள்கிறார் மேலே குறிப்பிட்டிருக்கும் கதாநாயகன். தாடையில் சிறு பள்ளம் போன்ற வடு இருப்பதாக் அந்தக் கதாநாயகன் நிராகரிக்கப்படுகிறார். அங்கே வசனகர்த்தா வருகிறார். அதற்கென்ன ஒரு குறுந்தாடி ஒட்டிக் கொண்டால் போச்சு என்று இயக்குனருக்கு யோசனை தெரிவிக்கிறார். அதனை ஏற்றுக் கொண்ட இயக்குனர் அந்தக் கதா நாயகனையே இந்தப்படத்தில் நடிக்க வைக்கிறார். படம் வெளிவந்து சக்கை சக்கைப் போடுபோடுகிறது.
அந்தக் கதாநாயகன் எம்.ஜி.ஆர், வசனகர்த்தா கலைஞர் மு.கருணாநிதி. (படங்களின் பெயர்கள் மற்றும் முழு விபரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்) எம்.ஜி.ஆரின் மரணத்தை முதலில் தெரிவிக்கப்பட வேண்டியவர் கலைஞர் என்பது எம்.ஜி.ஆரின் உயிலில் எழுதப்படும் அளவுக்கு அவர்களது இருவருக்குமிடையிலான நட்பு இருந்தது.
இன்னும் நிறைய செய்திகள்.
சிவாஜியை வைத்து எடுக்கப்பட்ட பராசக்தி படம் 3000 அடி வளர்ந்த பின்னும் சிவாஜியை நீக்கி விட்டு வேறொரு நடிகரைப் பாருங்கள் என்று மெய்யப்பன் செட்டியார் கூறுகிறார். மற்றவர்கள் சமாதானப்படுத்தி தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கச் செய்கிறார்கள். பராசக்தி வெளிவந்து நடிகர் திலகத்தை நமக்கு அளிக்கிறது.
பாட்டெழுதுவதற்காக திருச்சியில் இருந்து ஒரு கவிஞர் அழைத்து வரப்படுகிறார். அவருக்கு எழுதத்தெரியவில்லை தொடர்ந்து வானொலி நிலையத்திலேயே வேலை பார்க்கச் சொல்லுங்கள் என்று இசையமைப்பாளர் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறார். ஆனால் அந்த கவிஞர் தொடர்ந்து முயற்சி செய்து தன்னை நிரூபித்து இன்று காவியக்கவிஞர் வாலியாக நம் முன்னே இன்றும் இளைஞர்களுக்கானப் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிறார்.
அந்தக்காலத்தில் தனக்கு வந்த வாய்ப்பினை நிராகாரிப்பதற்காக ஒரு நடிகை ரூ 1 லட்சம் சம்பளம் கேட்கிறார். இன்றைய தேதியில் அதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ 35 கோடிக்கும் மேல். தயாரிப்பாளர் சளைத்தவரல்ல 1 லட்சத்துக்கானக் காசோலையை அங்கேயே கொடுத்து அந்த நடிகையை புக் செய்கிறார். அந்த நடிகை கே.பி.சுந்தராம்பாள்.
தன் திறமையை மட்டுமே அடிப்படையாக வைத்து சம்பளம் வாங்குபவர்களில் இன்று வரை ஒரு படத்திற்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் என்கிற பெருமையைப் பெறுகிறார் கே.பி.சுந்தராம்பாள்.
படிக்கப் படிக்க இன்னும் படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறதா...? இது இன்னொருவரின் டைரி... அட இன்னொருவரின் டைரியைப் போய் படிக்கலாமா என்கிறீர்களா..?
ஆனந்தரங்கம் பிள்ளை என்பவரது டைரிதான் பாண்டிச்சேரியின் வரலாறாக இன்றளவும் கருதப்படுகிறது. காந்தி, வ.உ.சியின் போன்ற இந்திய சுதந்திரப் போராளிகளின் டைரிகள் இந்திய சுதந்திரப் போராட்டங்களைப் பதிவு செய்கின்றன.
அந்த வகையில் சினிமா உலகைப்பற்றிய வரலாறு பதிவு செய்யப்பட வேண்டாமா..? சினிமாக்காரர்களுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷய்ங்கள் திரைப்படத்துறையில் நடந்திருக்கின்றன. இறங்கி விளையாடுவதற்கோ அல்லது வெளியே அமர்ந்து வேடிக்கை பார்ப்பதற்கோ சினிமா என்கிற களம் தமிழனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதனை மறைத்து விட்டு தமிழன் வரலாற்றை எழுத முடியாது. அவன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பேணி பாதுகாத்து வளர்த்த கூத்துக்களின் நவீன வடிவம் தான் இன்றைய (தமிழ்) சினிமா.
அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள, களத்தில் இறங்கி சாதித்த சாதனையாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஏற்றங்கள், இறக்கங்கள், அறிவுரைகள் இன்னும் ஏராளம் ஏராளம்... அவையனைத்தும் பொக்கிஷமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது 35 வருட அனுபவத்துடன் இன்று மூத்த பத்திரிக்கையாளராக வலம் வந்து கொண்டு இருக்கும் மேஜர் தாசன் அவர்களது டைரியில்.
அதில் இருந்து எடுத்த சில துளிகளைத் தன் முதல் பாகத்தில் பதிவு செய்து சினிமா நிருபரின் டைரியிலிருந்து, “திரைச்சுவைகள்” என்கிற புத்தகத்தை பூம்புகார் பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறார்.
திரைச்சுவைகளை தரணி முழுவதும் உள்ள மக்கள் சுவைத்து மகிழ ஏதுவாக காவியக்கவிஞர் வாலி வெளியிட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், ஏ.வி.எம் சரவணனும் பெற்றுக் கொண்டார்கள்.
கலையுலக மூத்த கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியினை தமிழ்சினிமா பத்திரிக்கையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
[nggallery id=241]
புத்தகம் கிடைக்குமிடம் பூம்புகார் பதிப்பகம், 127 பிரகாசம் சாலை (பிராட்வே) சென்னை 108. தொலைபேசி எண் + 91 44 25267543