கல்வியாளர், கொடையாளர், அரசியல்வாதி என்கிற முகங்களுடன் எஸ்.ஆர்.எம் கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தருக்கு கவிஞர் என்கிற முகமும் சேர்ந்துகொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.
தனது பரபரப்பான அலுவல்களுக்கிடையில் அம்மா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு பாரிவேந்தர் கவிதைகள் என்கிற புத்தகமாக இன்று வெளியிடப்பட்டது. கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட கவிஞர் அறிவுமதி பெற்றுக் கொண்டார்.
சிலம்பொலி சு.செல்லப்பன் தலைமையில் நடந்த இந்த விழாவில் பாரிவேந்தர் எழுதிய கவிதைகளை மேற்கோள் காட்டி வாழ்த்திப்பேசிய அறிவுமதி, " 3000 ஆண்டுகளுக்கு முன்னால் உன்னத்துப்பகைவன் என்று அழைக்கப்பட்ட ஒரு மன்னன் இருந்தான். அதாவது உன்ன மரம் வாடிய காலங்களில் போருக்குச் செல்வது தவறான சகுனமாகப் பார்க்கப் பட்ட காலகட்டத்தில் அதைப் பொருட்படுத்தாமல் போருக்குச் சென்று வென்றானாம். அவனைப் போலவே , வேந்தரின் தாயாரும் சகுனங்கள் பார்ப்பதில்லை என்று தனது கவிதையில் குறிப்பிட்டிருக்கின்றார், அவர் உன்னத்துப்பகைவி என்றால் மிகையாகாது..." என்று பேசியதுடன் தொடர்ந்து கவிதைகள் எழுதுமாறு பாரிவேந்தரைக் கேட்டுக் கொண்டார்.
" சங்க காலத்தில் புலவர்கள் அவர்களுக்குக் கொடையளிப்போராக புரவலர்கள் இருந்தார்கள். இங்கே புலவரும் அவரே , புரவலரும் அவரே..அவரது கவிதைகளில் இயல்பு, இனிமையுடன் மோனையும் இருக்கிறது.." என்று பேசினார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
"எங்கள் கவிதையுலகிற்குள் வந்துவிட்டார் பாரிவேந்தர்.." என்று ஆரம்பித்த வைரமுத்து, " இந்தக்கவிதை சாகித்ய அகடமி விருது வாங்கிவிடுமோ என்பதற்காக வரவில்லை, ஒரு பச்சைத்தமிழனாக எளிய குடும்ப சூழலில் பிறந்து ஆலமரமாக வீற்றிருக்கும் கல்விக்குடும்பத்தின் அதிபதியாக உயர்ந்திருக்கிறார்... சென்னைக்கு ஏழு ரூபாயோடு வந்து தன் உழைப்பால் இன்று உலகம் போற்ற உயர்ந்திருக்கிறார்.
அவர் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்து வெகுமானங்களை வென்றிருக்கிறார். அவரது சிராய்ப்புகள் தெரியாது அவரடைந்த சிகரம் தெரியும்.. ஆனாலும், அன்றைய அதே எளிமையுடன் இன்றும் இருக்கிறார்...
அவர் எழுதிய கவிதைகளுக்குள் பெரிய உதாரணங்களோ உவமைகளோ இல்லை. ஆனால், சத்தியம் இருக்கிறது. அவர் அடைந்த உயரத்திற்கு எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்பதில்லை. இன்றைய நிலையில் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனல் உண்மைகளை மட்டுமே உரைத்திருக்கிறார்..
கவிதைகள் எழுதுவதுடன் உங்கள் வாழ்க்கையையும் எழுதுங்கள். அது நம் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கும்..." என்றார்.
ஏற்புரை வழங்கிய பாரிவேந்தர், " 40 ஆண்டுகாலமாக நான் எழுதிய கவிதைளைக் கோர்த்து, எங்களது மாணவர் அமைப்பின் தமிழ்ப்பேராயத்தினர். நான் தொடர்ந்து எழுதிய கவிதைகள் அல்ல இவை. நான் பார்த்து என்னைப் பாதித்த, கேட்ட , அனுபவித்த அந்தந்த தருணங்களில் எழுதப்பட்ட கவிதைகளே இந்தப் புத்தகத்த்தில் இடம் பெற்றிருக்கின்றன. என் தாயைப் பற்றி எழுதிய அத்தனை வரிகளும் உணர்ச்சிகளின் உந்துதலால் எழுதப்பட்டவை. அந்தக்கவிதையைப் படிக்கும் போதெல்லாம் நான் அழுவேன். பாசப்பிணைப்பால் கண்ணீர் வரவழைக்காத சினிமாக்களைக் கூட நான் பார்க்கமாட்டேன்...
தாயை வணஙகியவர்கள், போற்றுபவர்கள், நல்ல தாயைப் பெற்றவர்கள் அனைத்தையும் பெற்றவர்கள் என்று நான் கருதுகிறேன்...
9 ஆவது வயதிலே கவிதை எழுதியிருக்கிறேன். தொடர்ந்து பல்வேறு கவிதைகள் எழுதியும் அவை பதிவு செய்யப்படாமலே போய்விட்டது... என் 20 வயதில் காதல் வந்த போது, என் காதலி 10 வயதில் இருந்ததால் கவிதை எழுத முடியவில்லை. பின்னாளில் அவரே என் மனைவியாகவும் ஆகிவிட்டார்.." என்று கலகலப்பூட்டிப் பேசினார்.
பாரிவேந்தர் தனது கல்லூரி காலகட்டத்தில் குன்றக்குடி அடிகளார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கவிதைகள் எழுதி வாசித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கவிதைத் தொகுப்பில், பாரிவேந்தரின் அம்மாவின் ஓவியம் உள்ளிட்ட அனைத்து கவிதைகளுக்கும் ஏற்ற ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர் தீட்டியிருக்கிறார்.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற சிலம்பொலி சு.செல்லப்பன் கூறியது போல, திரளான கூட்டமாக மட்டுமல்லாமல் கல்வி, அரசியல், கலை என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் கலந்துகொண்ட விழாவாக பாரிவேந்தர் கவிதைகள் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.