காதலர் தினத்தில் வெளியான 'காத்து வாக்குல ஒரு காதல் ' படத்தின் டீஸரை நடிகர் யோகிபாபு, இயக்குநர்கள் சுப்ரமணிய சிவா ,விஜய்சந்தர் உள்ளிட்ட பிபலங்கள் பாராட்டியுள்ளனர்.
படத்தைப் பற்றிக்கேட்டபோது, ”இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும்.
காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு.அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் 'காத்து வாக்குல ஒரு காதல்..” என்கிறார், கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதி இயக்கும் மாஸ் ரவி, இவரே இந்தப்படத்தின் நாயகனும் கூட. நாயகியாக லட்சுமிபிரியா நடிக்க, தெறி வில்லன் சாய்தீனா ,கல்லூரி வினோத் ,ஆதித்யா கதிர் ,லொள்ளு சபா ஆண்டனி மற்றும் சில புதுமுகங்களும் நடிக்கின்றனர்.
சீரடி சாய்பாபா வழங்கும் எஸ்.பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவு சுபாஷ் மணியன். எடிட்டிங் ஸ்ரீ ராஜ்குமார் இவர் ஏ.வெங்கடேஷ், எஸ்.எஸ்.குமரன் படங்களின் படத்தொகுப்பாளர். பழைய 'வண்ணாரப்பேட்டை', 'விண்மீன்கள்' படங்களின் இசையமைப்பாளர் ஜுபின் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.