2010 இல் படங்களை விமர்சனம் செய்துகொண்டிருந்த ஆர்ஜேபாலாஜி, இன்று, 2018 இல் மற்றவர்கள் பெரிதும் விவாதித்து அலசும் அளவிற்கு எல் கே ஜி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். நடுவில், வெற்றிகரமான ஆர் ஜே மற்றும் சமூக சேவகர் என்று வலம் வந்த ஆர் ஜே பாலாஜி, நகைச்சுவை நடிகராக ஆனார்.
அதன் பின் நடந்ததை அவரே சொல்கிறார், “ தொடர்ந்து பலபடங்களில் ஒரே மாதிரியான நண்பன் அல்லது நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், இது நம்முடைய எதிர்காலம் அல்ல என்று முடிவு செய்து, கிட்டத்தட்ட 17 படங்களின் வாய்ப்பை மறுத்துவிட்டேன். நண்பர்கள் அறிவுரை கூறினார்கள், காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று…
நான் ஒரு நடுத்தரக்குடும்பம் தான், ஆனால் சமூகத்திற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்கிற நோக்கில் தான் சென்னை வெள்ளத்தின் போதிலிருந்து ஏதாவது செய்துகொண்டிருக்கிறேன். நான் செய்ததைப் பார்த்து பலரும் செய்வது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் எனக்கான கதைக்களத்தை நானே உருவாக்கவேண்டும் என்று முடிவுசெய்து எழுதப்பட்டது தான் இந்தக்கதை. எனக்கு சினிமா நிறையச் செய்திருக்கிறது, அந்த சினிமா மூலம் ரசிகர்களுக்கு ஏதாவது நல்ல விஷயம் சொல்லவேண்டும் என்று முடிவு செய்து, இந்தக்கதையை எழுதினேன்.
படம் ஆரம்பிக்கும் போது , பிஜேபி ஆதரவாளன் என்றார்கள். டீசரைப் பார்த்து விட்டு ஆண்டி இந்தியன் என்றார்கள். இது வழக்காமன அரசியல் நய்யாண்டி படமல்ல, அரசியல் கிண்டல்களும் இருக்கும். ஆனால் அதையும் மீறி, வாக்காளர்களைக் குறிப்பாக இளம் வாக்காளர்களைச் சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும்.
இளைஞர்கள், வாக்களிப்பதைப் பற்றிய புரிதலே இல்லாமல் இருக்கிறார்கள். எந்த பட்டனை அமுக்கவேண்டும் ? ஏன் அமுக்க வேண்டும் ? என்று தெரியாமல் இருக்கிறார்கள். ஓட்டுப்போடுவதைத் தவிர்க்கும் வாக்காளர்கள் எண்ணிக்கையும் அதிகம்.
இந்தப்படம் மூலம் நான் கேட்டுக்கொள்வது, கண்டிப்பாக அனைவரும் ஓட்டுப்போடுங்கள், ஓட்டுப்போடும் முன் 10 நிமிடம் யோசித்து ஓட்டுப்போடுங்கள் என்பது தான்..” என்றார்.
தமிழ் நன்றாகப் பேசத்தெரிந்த நாயகி வேண்டும் என்பதற்காக பிரியா ஆனந்தை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தப்பட அனுபவம் குறித்து பிரியா ஆனந்த் பேசும் போது, “ காதலையும் தாண்டி ஒரு நட்பு இருக்கிறது என்று அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆர் ஜே பாலாஜி, அத்துடன் ஒரு வழக்கமான கவர்ச்சி நாயகி என்றில்லாமல், பொறுப்புள்ள பெண்மணி கதாபாத்திரமாக எனது கதாபாத்திரம் இருக்கிறது. எங்களை ஆர்ஜேவாக மகிழ்வித்தவர் பாலாஜி, அவருக்காக இந்தப்படத்தில் நாயகியாக நடித்தேன். மற்றபடி நான் பேசும் வசனங்களெல்லாம், அவர் எழுதிக் கொடுத்ததே..” என்றார்.