திடீரென்று தமிழ் சினிமாக்கள் என்றாலே, இடதுசாரி சிந்தனை கொண்ட நாயகன் மற்றும் கடவுள் மறுப்பைக் கொஞ்சம் தூக்கலாகவே ரசிகர்கள் மனதில் ஏற்ற நினைக்கும் வசனகர்த்தாக்கள் என்று இருந்த நிலையில், போனவாரம் சிவனை மையமாக வைத்து மாயன் என்கிற படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வாரமோ, சிவாலயப் பின்னணியில் நடக்கும் படமாக உருவான அகவன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. மாயன் மற்றும் அகவன் படக்குழுவினர்களுக்கிடையே பொதுவான ஒற்றுமையாக சிவன் மட்டுமல்ல ரஜினிகாந்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், மாயன் பட இயக்கு நர் ஏற்கனவே பெருமான் ரஜினிகாந்த் என்கிற படத்தை இயக்கியிருக்கிறார் என்றால், அகவன் படத்தயாரிப்பாளர் ஆர் ரவிச்சந்திரனோ, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்த் ரசிகராகவும் ரஜினிமன்றத்தில் நிர்வாகியாகவும் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர் பி கே எண்டெர்டெயின்மெண்ட் ஆர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் அகவன்,. அகவன் என்றால் உள்ளே குடியிருப்பவன் அல்லது உள்ளிருப்பவன் என்று பொருள். இந்தப்படத்தில் நாயகனாக ரூபாய் படத்தில் நடித்தவரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளரின் மகனுமான கிஷோர் ரவிச்சந்திரன் , நாயகிகளாக ஸ்ரீ ரா ஸ்ரீ, மற்றும் நித்யா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கே பாலசந்தரிடம் இணை இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய பாம்பே சாணக்யா முதல் பிரபு சாலமன் வரை உதவி இயக்கு நராகப் பணியாற்றிய ஏ பி ஜி ஏழுமலை இயக்குநராக அறிமுகமாகிறார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு சி சத்யா இசையமைத்திருக்கிறார்.
தயாரிப்பாளரின் சொந்த ஊரான அனந்த மங்கலம், அகத்தீஸ்வரர் கோயில் பின்னணியில் ஒரு கதை எழுதுங்கள் என்று தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டதையடுத்து, ஒரே வாரத்தில் அற்புதமான கதையுடன் சென்றிருக்கிறார், சிவபக்தரான இயக்குநர் ஏழுமலை. கதை பிடித்துப் போக, மிகவும் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்த கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன், தாமே வெளியிடுவதாக முன்வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார். சிவனைப் பற்றிய ஒரு பாடல் எழுதவேண்டும் என்று சொன்னபோது, முதலில் மறுத்த நாத்திகரான யுகபாரதி, பின் தயாரிப்பாளரின் வேண்டுகோளை ஏற்று, ஒருவாரம் விரதம் இருந்து, சிவன் பற்றிய பாடல்கள், புராணங்களையெல்லாம் படித்து விட்டு, அற்புதமான பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார். அவர்களது சிவாலயத்திற்குச் சென்ற யுகபாரதி, தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டவர்களின் பக்தியைப் பார்த்து மெய்சிலிர்த்திருக்கிறார்.
அகவன் படத்தின் பாடல்களை ராகவா லாரன்ஸ் வெளியிட கே பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.
கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ளவரும் தீவிர ரஜினி ரசிகருமான தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், திருவண்ணாமலை கிரிவலப்பாதையும் விளக்குகள் போட்டுக் கொடுத்த ரஜினிகாந்தின் செயலை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, தனது ஊரில் ராஜராஜ சோழன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை உடைய கோயிலுக்கு, 90 அடியில் ராஜகோபரம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ரசிகர்கள் மிகவும் பொறுப்புள்ள குடிமக்களாக வேண்டும் என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் சொன்னதைப் போலவே, ஒரு தொழிலதிபராகவும் ஆன்மீகத் தேடல் உடையவராகவும் தயாரிப்பாளர் உருவாகியிருக்கிறார். நாயகன் கிஷோரோ ரஜினிகாந்தைப் போலவே ஸ்டைலாக நின்று அவரைப் போலவே வேகவேகமாகத் தான் சொல்ல வந்ததைப் பேசிவிட்டார்..” என்றார் ராகவா லாரன்ஸ்.