வால்ட் டிஸ்னியின் ஃப்ரோஷன் படத்த்தின் இரண்டாம் பாகம், வரும் நவம்பர் 22 இல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது. லயன் கிங் படத்தினைத் தொடர்ந்து இந்தப்படத்திற்கும் தமிழ்த்திரைப் பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் பாடலாசிரியரான விவேக், இந்தப்படத்திற்கான தமிழ் வசனங்களை எழுதியிருப்பதன் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வசனம் எழுதிய அனுபவத்தைக் குறிப்பிடும் போது, உலகின் பிரபல நிறுவனமான டிஸ்னியுடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. அதிலும் ஸ்ருதி ஹாசன், திவ்ய தர்ஷினி , சதயன் போன்ற திறமை மிக்க ஆளுமைகளுடன் பணிபுரிந்ததில் மேலும் மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் பின்னணி குரலால் கதாபாத்திரங்களுக்கு தத்ரூபமாக உயிரூட்டியுள்ளார்கள். படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் பலருக்கும் முன் மாதிரியாக விளங்குகிறார்கள்.
நான் முதல் முறையாக வசனம் எழுதும் படமிது. நாம் வாழ்வில் பல சிறு விசயங்களை இழந்திருப்போம் வாழ்வாதாரத்திற்காக ஓடி ஓடி ஒரு கட்டத்தில் நாம் நம்மையே தொலைத்திருப்போம். என்ன ஆனாலும் மனிதத்தை மட்டும் வாழ்வில் தொலைத்துவிடக்கூடாது என்று இந்தப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக என் மனைவியின் மிரட்டலால் தான் இந்தப்படத்தில் பணியாற்றினேன். அவர் இப்படத்தின் தீவிர ரசிகை ..” என்றார் விவேக்.
ஹீரோயின் கதாபாத்திரமான எல்ஷாவிற்கு ஸ்ருதிஹாசன், எல்ஷாவின் தங்கை பாத்திரமான ஆன்னாவிற்கு திவ்யதர்ஷினி, ஓலஃப் கதாப்பாத்திரத்திற்கு சத்யன் குரல்கொடுத்துள்ளனர். “எவ்வளவோ படங்களில் பணியாற்றியிருக்கின்றேன், ஆனால், டிஸ்னியின் ஃப்ரோஷன் 2 இல் ஓலஃப் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருப்பது எனக்கு கிடைத்த கெளரவமாகக் கருதுகிறேன்..” என்றார் சதயன்.