இன்றைய கேரளா அன்றைய சேர நாடு என்பதை நாம் அறிவோம். அங்கே, பாரதப்புழா ஆற்றின் கரையில் திருநாவாயா என்கிற இடத்தில், நவ முகுந்தன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கலாச்சாராத் திருவிழாவை தோற்றுவிக்கிறார்கள், அன்றைய சேர அரசர்கள். கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அந்தத் திருவிழாவை, சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறி மெக்கா சென்ற பிறகு, வள்ளுவ நாடு என்கிற நாட்டிடம் ஒப்படைத்துச் செல்கிறான். ஒரு கட்டத்தில் வெறும் பாரம்பரிய கலாச்சாரத் திருவிழாவாக இருந்த மாமாங்கம், பிறகு சிலப்பதிகாரத்தில் வரும் இந்திரவிழா போன்று பல்வேறு தேசத்தில் இருந்து வணிகர்கள் வந்து, சந்தைவிரிக்கும் விழாவாகவும் ஆகிப்போனது. அதன் பிறகு சிற்றரசர்களுடனான போரில் அந்தப்பகுதியை ஜாமோரின் அரசர்கள் கைப்பற்றுகிறார்கள்.
ஆனால், வள்ளுவ நாட்டைச் சேர்ந்த மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலான குடும்பங்களைச் சேர்ந்த களரி உட்பட நமது தற்காப்புக்கலைகளில் சிறந்த பயிற்சி எடுத்த வீரர்கள் சாவேறுகள் என்று அழைக்கப்படும் தற்கொலைப் படை வீரர்களாக மாறி ஒவ்வொரு மாமாங்கத்தின் போதும் ஜாமோரின் அரசர்களைக் கொன்று தங்களது தேசத்தை மீட்கப் போராடி, உயிர் துறந்துவருகிறார்கள். இதுவும், தொடர்ந்து நடந்துகொண்டிருந்திருக்கிறது.
அப்படி சாவேறுகள் என்று அழைக்கப்படும் வீரர்களில் 12 வயது சிறுவனும் ஒருவன். அப்படி ஒரு சிறுவனாக, 12 வயதே நிரம்பிய நிஜ களரி வீரர் அச்சுதன் நடிக்க, உன்னிமுகுந்தன் மற்றும் மம்மூட்டி ஆகியோறும் சாவேறுகளாக நடிக்கிறார்கள். நெட்பால் மற்றும் கூடைப்பந்தாட்ட தேசிய வீராங்கனை பிராச்சி டெஹ்லான், இனியா ஆகியோர் வள்ளுவ நாட்டு அக்கா தங்கைகளாக நடிக்கிறார்கள், கனிகா வும் முக்கியமான கதாபாத்திரமேற்றிருக்கிறார்.
வேணுகென்னப்பிள்ளி இப்படத்தைத் தயாரிக்க ,இயக்கியிருக்கிறார் பத்மகுமார். எம் ஜெயச்சந்திரன் பாடல்களுக்கான இசையமை அமைத்திருக்கிறார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
பிரீயட் பிலிமாக அதாவது வரலாற்றுப் படமாக பாகுபலி வெளிவந்தாலும், மாமாங்கம் த்தில் நிஜமாக நடந்த வரலாற்றைப் படமாக எடுத்திருக்கிறார்கள். “ மலையாளப்படங்களுக்கான வியாபாரம் மிகவும் சிறியது கேரளா மற்றும் வளைகுடா நாடுகளை உள்ளடக்கியது என்று நிர்வாகத்தயாரிப்பாளர் கூறினாலும். இந்தப்படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் உணர்வுகள், இந்தியா முழுமைக்கும் பொதுவானதே, ஏன் உலகம் முழுமைக்கும் பொதுவானதே. இதுபோன்ற வரலாற்றுப்படங்களில் நடிப்பது என்பது வேறு. ஆனால், இதனை நான் ஒரு கடமையாகச் செய்திருக்கிறேன். பழிவாங்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தால், ஏன் கொல்கிறோம் என்று அவனுக்கும் தெரியாது, எதற்கு உயிர்விடுகிறோம் என்று செத்தவர்களுக்கும் தெரியாது. ஆகவே, ஒரு அற்புதமான தீர்வாக இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் கதை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் காட்டியிருப்பதால், அன்று புழக்கத்தில் இருந்த வார்த்தைகள் பெரும்பாலானவை தமிழ் வார்த்தைகளே. சுதந்திரம் அடைந்த பின் தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது மலையாள மொழி பேசிக்கொண்டிருந்த பல்வேறு சமஸ்தானங்கள் இணைந்து கேரளா என்கிற ஒரு குடைக்குள் வந்தன…” என்றார் மம்மூட்டி.
தமிழ் பதிப்பின் வசனங்களை இயக்கு நர் ராம் எழுதியிருக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். 8 ரீல்கள், கிட்டத்தட்ட 2500 காட்சிகளுக்கு வி எஃப் எக்ஸ் அமைக்கப்பட்டிருப்பதாக கமலக்கண்ணன் தெரிவித்தார்.
இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பிய செலவு, அதே காலகட்டத்தில் வெளியான மார்ஸ் என்கிற ஹாலிவுட் படத்திற்கான செலவை விட பாதி தான் என்று சொல்லுவார்கள். அதைப்போல, தமிழகத்தின் முன்னணி நடிகரின் சம்பளத்தில் பாதியில் உருவாக்கப்பட்ட இந்த மாமாங்கம், இந்திய சினிமாவை உலக அரங்கில் தலை நிமிரச்செய்யும் என்பதை அதன் பாடல் மற்றும் முன்னோட்டக்காட்சிகளைப் பார்த்தவர்கள் ஒத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு, தத்ரூபமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் உழைப்பில் மாமாங்கம் திருவிழாவை திரும்பவும் கொண்டுவந்திருக்கிறார் தயாரிப்பாளர் வேணுகென்னப்பிள்ளி.