திரைப்படத்துறைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் சினிமா ப்ளாட்பார்ம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். ஹித்தேஷ் முருகவேள் இசையில் உருவான இந்தப்படத்தின் இசையை கே.பாக்யராஜ், கே.ராஜன், பேரரசு , ஏ வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிவுமதி, நா.முத்துக்குமார், எல்.ஜி.ரவிச்சந்தர்,நல்.செ.ஆனந்த் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கின்றனர்.
சந்தோஷ் பிரதாப், சாந்தினி ஜோடியாக நடிக்க, 1006 இல் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் மலையாள நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஜி.எம்.குமார், பருத்திவீரன் சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் V.T ரித்திஷ்குமார், “தலைப்பைப் போலவே படமும் கவிதையைப் போல் இருக்கும். 4 வருடங்களாக இப்படத்தை எடுத்திருக்கிறோம். புதிதாகத் திரைப்படத்துறைக்குள் வரும் தயாரிப்பாளர்களை, ஏன் வருகிறீர்கள் என்று பயமுறுத்தாதீர்கள், மாறாக வழி நடத்துங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசும் போது, “ இந்த விழாவில் என் மகனைப் ( LKG பட இயக்குநர் பிரபு ) பார்த்தபோது தான் தெரிந்தது அவனும் இந்தப்படத்தின் இயக்குநர் எல் ஜி ரவிசந்தரும் 20 ஆண்டுகால நண்பர்கள் என்பது. பெரிய படங்களால் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் லாபம். ஆனால், இது போன்ற சிறிய படங்களால் தான் ஒட்டுமொத்தமாக நாட்டிற்கே நல்லது..” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “பெண்களில் 3 வகை, தானே விரும்பிக் கெட்டுப்போவது, தவறான ஆண்களை நம்பி கெட்டுப்போவது, எக்குத்தப்பாக கயவர்களிடம் மாட்டிக் கொண்டு பாதிக்கப்படுவது. இதில், கே பாக்யராஜ் அறிவுரை கூறியிருப்பது இரண்டாவது வகைப்பெண்களுக்கு மட்டுமே! ஒரு இடத்தில் திருட்டுப்பயம் இருந்தால், அங்கே குடியிருப்பவர்களைத் தான் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லமுடியும். அதற்காக, திருடர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாக ஆகாது.
அதே நேரம், சமூகம் கெட்டுப்போவதற்கு இன்றைய சினிமாவும் ஒரு காரணம் என்பதையும் மறுக்க முடியாது. கே பாக்யராஜ் படங்களில் பெண்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். காதல் காட்சிகள் மிகவும் கண்ணியமாக இருக்கும்.
ஆனால், இன்றைய சினிமாக்களில் காதல் செய்ய ஆரம்பித்தவுடனேயே கல்யாணத்திற்கு அப்புறம் என்னவெல்லாம் செய்வோமோ அதனைச் செய்துவிடுகிறார்கள்..” என்றார்.
இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசும் போது, “ சிறிய படங்களைப் பொருத்தவரை, திட்டமிட்ட பட்ஜெட்டிற்கு சிறிது குறைவாகவே செலவு செய்து, மிச்சப்படுத்திக் கொடுக்கும் பணமே தயாரிப்பாளர்களின் முதல் லாபம் ஆக ஆகிவிடுகிறது. அப்படி திட்டமிட்டு எடுக்கப்படும் நான் அவளைச் சந்தித்த போது மாதிரியான படங்கள் உத்திரவாதமாக வெற்றிபெறும்..” என்றார்.
நாயகன் சந்தோஷ் பிரதாப், “ என்னமோ தெரியவில்லை இன்றைய தலைமுறை இயக்கு நர்களை விட, சென்ற தலைமுறை இயக்கு நர்கள் படங்களில் தான் நான் அதிகமாக நடிக்கின்றேன். அவர்களது அனுபவமும் கலைத்துறை மீது வைத்திருக்கும் காதலும் என்னை உடனடியாக ஒத்துக் கொள்ள வைக்கின்றன..” என்றார்.
மாசானி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி , பொது நலன் கருதி ஆகிய படங்களை இயக்கியும், பல்வேறு வெற்றிப்படங்களின் கதை விவாதங்களில் கலந்துகொண்டும் தான் இன்னும் இரண்டுசக்கர வாகனத்தில் தான் பயணிப்பதாக, நான் அவளைச் சந்தித்த போது இயக்குநர் எல்.ஜி ரவிசந்தர் புலம்ப, அதே மேடையில், தனது ஸ்கோடா காரை பரிசாக அளித்துமகிழ்ந்தார் தயாரிப்பாளர் ரித்தேஷ்.
முத்தாய்ப்பாகப் பேசிய கே பாக்யராஜ், “சில அமைப்புகளால் என் மீது தொடுக்கப்பட்ட வழக்கினையடுத்து பலரும் என் பக்கம் நிற்போம் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு நன்றி. ஆனால், நானும் பயப்படவில்லை, நீங்களும் பயப்படவேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறேன்.
பெண்கள் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்த எம் ஜி ஆர் அவர்களால் அவரது கலையுலக வாரிசாக அறிவிக்கப்பட்டவன் நான். என்னைப் பற்றி தமிழக மகளிருக்கு நன்றாகவே தெரியும்.
நான் அவளைச் சந்தித்த போது படத்தைப் பார்த்த பெண்கள் அழுததாகச் சொன்னார்கள். அந்தச் சம்பவம், எனக்கும் படத்தைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டிவிட்டது. அது மட்டுமல்ல, அவர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள் என்றாலே படம் வெற்றிபெற்றுவிட்டது என்று அர்த்தம்..” என்றார்.
மூத்த ஒளிப்பதிவாளர் ஆர் எஸ் செல்வாவின் ஒளிப்பதிவில் உருவான இந்தப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.