இயக்குநர் மித்ரன், சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக்கி அழகுபார்த்திருக்கும் படம் ஹீரோ. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில், கொட்டப்பாடி ஜே ராஜேஷ் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார், பாடல்களை பா விஜய் எழுதியிருக்கிறார்.
சினிமாவில் நடிப்பவர்கள் மட்டுமல்ல, நாம் சுயமாகச் சிந்தித்து சமூகத்திற்கு நல்லது செய்யும் ஒவ்வொருவருமே சூப்பர் ஹீரோக்கள் தான் என்கிற கருத்தை படத்தில் மட்டும் வலியுறுத்தாமல், டிரையலர் வெளியீட்டு மேடையிலேயே நிரூபித்தும் காட்டியது ஹீரோ படக்குழு.
ஆம், ஹீரோ படத்தின் மொபைல் விளையாட்டில் முதலிடம் பிடித்த ஈரோட்டைச் சேர்ந்த கோகுல் என்கிற, அவர் வசிக்கும் தெருவில் கூட இன்னும் பலராலும் பரீட்சியப்பட்டிருக்காத இளைஞனை வைத்து ஹீரோ படத்தின் டிரையலரை வெளியிட்டு அவரை சூப்பர் ஹீரோ வாக்கி பெருமைப்படுத்தினார்கள்.
பல ஆண்டுகால நெருங்கிய நண்பர்களான இயக்குநர் மித்ரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் மற்றும் எடிட்டர் ரூபன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படம், என் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்தும் படமாக இருக்கும் என்று உறுதியளித்தார் சிவகார்த்திகேயன். மேலும், மூத்த நடிகர் அர்ஜுன் மற்றும் பாலிவுட் நடிகர் அபே தியோல் ஆகியோரிடம் பணியாற்றியதன் மூலம் நிறையக் கற்றுக் கொண்டதாகவும், குறிப்பாக இன்னொரு மொழியில் நடிக்கும் போது, அந்த மொழியில் அமைந்த வசனங்களை மிகவும் சரியாக உச்சரிக்க அபே தியோல் காட்டிய சிரத்தையைப் பார்க்கும் போது, அதே சிரத்தையுடன் பணியாற்றினால் நாமும் வேற்றுமொழிகளில் நடிக்கும் ஆவலைத் தூண்டுகிறது என்றார் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர் பேரை நான் உளறிவைச்சேன்னா அதுவேற டிரெண்டிங் ஆகித்தொலைக்கும் அதனால் வெறும் தயாரிப்பாளர் என்றே குறிப்பிட்டு கலகலப்பூட்டினார் சிவகார்த்திகேயன்.
இந்தப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும், ஒளிப்பதிவாளர் இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி, ஒரு பள்ளி மாணவிக்குண்டான உடல்மொழியுடன் மேடையில் படத்தைப் பற்றி அழகு தமிழில் பேசி ஆச்சிரியப்பட வைத்து, அனைவரையும் கவர்ந்தார்.
“படத்தில் தான் அபே தியோல் வில்லன், ஆனால் நிஜத்தில் பல வில்லன்கள் இருந்தார்கள். அவர்களைப் பொருட்படுத்தாமல் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் படங்களில் இது முக்கியமான படமாக இருக்கும். அத்துடன் வசூலில் ஒரு புதிய உச்சத்தைத் தொடும் படமாக இருக்கும். சமூகப்பிரச்சினைகளுடன் வணிக சூத்திரத்தில் படம் எடுக்கும் விதத்தில் ஷங்கருக்கு அடுத்து மித்ரன் தான் என்பேன் ..” என்றார் தயாரிப்பாளர் ராஜேஷ்.
இரும்புத்திரை வெளியாகும் நிலையில் சிவகார்த்திகேயனைச் சந்தித்து இப்படி ஒரு படம் எடுக்கலாம் என்று கூறியபோது, அவரும் அதே போன்ற மன நிலையில் இருந்ததால், இந்தப்படம் சாத்தியமாயிற்று என்றார் இயக்குநர் மித்ரன். யுவன் ஷங்கர் ராஜாவின் தீவிர ரசிகரான மித்ரனுக்கு, பின்னணி இசைப்பணிகளை முடித்துவிட்டு, “ நான் பணியாற்றிய படங்களிலேயே எனக்கு மிகவும் மன திருப்தி அளித்த படம், ஹீரோ..” என்று யுவன் அனுப்பிய செய்தியே பெரியவெற்றியாக அமைந்திருக்கிறது.
“முதல் ரீல் முதல் 8வது ரீல் வரையிலான 80 நிமிட தொடர் பின்னணி இசைசேர்ப்பு இதுவரை யாராலும் நிகழ்த்தப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தப்படத்தில் அந்த அதிசயத்தை அனுபவித்து மகிழுங்கள். அந்தளவுக்கு படத்தின் திரைக்கதை என்னை உந்தி உழைக்க வைத்தது..” என்றார் யுவன் ஷங்கர் ராஜா.