நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த ஐந்தும் தான் உலகிலுள்ள அத்தனைக்கும் ஆதாரமாக விளங்குகின்றன. அவற்றை கட்டி ஆள்கிறவனென்றால், ஐந்தெழுத்து மந்திரத்திற்குச் சொந்தக்காரனான எந்நாட்டுக்கும் இறைவனான, தென்னாடுடைய சிவன் என்று சொல்லலாம். அவனது நமசிவாய என்கிற ஐந்து எழுத்து மந்திரம் பஞ்சராக்ஷரம் என்று அழைக்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட அந்த ஐந்து பூதங்களின் குணங்களான பொறுமை, நேசம் ஆர்வம் (Fire), நுண்ணறிவு மற்றும் எல்லைக்குள் அடங்கிவிடா வாழ்க்கை ஆகியவற்றை இயல்பாகக் கொண்ட ஐந்து கதாபாத்திரங்களை மையமாக வைத்து, அவர்கள் மேற்கொள்ளும் ஒரு அற்புதமான பயணமாக பஞ்சாக்ஷரத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பாலாஜி வைரமுத்து.
பழுத்த பழமாக இருப்பாரோ என்று எண்ணிவிடவேண்டாம், விவேகா நந்தர் போல நமது பாரம்பரியம் போற்றும் ஆழ்ந்த அறிவுள்ள இவரும் ஒரு இளைஞரே. பட அனுபவங்களைப் பற்றி பாலஜி வைரமுத்துவே கூறியபோது, “பஞ்சராக்ஷரம், சிவன் அல்லது கடவுள் படமாக இதை எடுக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியிலும் சிவனை உணரலாம். அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் யாவுமே கர்மா அல்லது வினைப்பயனைப் பொருத்தே நடைபெறுகின்றன. எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்று விவேகானந்தர் முதல் அரிஸ்டாடில் வரை சொல்லியிருக்கிறார்கள். வாழ்வில் வெற்றிபெற்றவர்களால் அல்லது அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது என்பதை ஊகிக்க முடிபவர்களால் தொடர்ந்து சிகரத்தில் அமர முடிகிறது. ஆனால், ஒரு சாமான்யானால் அப்படி ஊகிக்க முடியாத நிலையில், வாழ்க்கையில் போராடிக் கொண்டே இருக்கவேண்டியதாக இருக்கிறது. வாழ்க்கையில் நாம் பெறும் தோல்விகளுக்கும் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் நாமே காரணம் என்று நினைத்தால் மட்டுமே நம்மால் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.
வாழ்க்கையில் வெற்றிபெற அல்லது சிறப்பாக அமைத்துக் கொள்ள நேர்மறை சிந்தனைகள் மிகவும் முக்கியம். நேர்மறையாக எண்ணங்கள் சிறந்த பலன் கொடுப்பவையாகினும், குண்டூசியால் கிணறு தோண்டுவது போல கொஞ்சம் பிராயத்தனம் செய்யவேண்டுவதாய் இருக்கின்றன.
எதிர்மறை எண்ணங்களோ, புல்டோசர் கொண்டு குழியை மூடுவது போல, லேசாகச் சிந்திக்க ஆரம்பித்தாலே மூளையும் உடலையும் தன் வயப்படுத்தி தவறான செயல்களுக்கு வழிவகுத்துவிடும்.
இந்தப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, குறைந்தபட்சம் அடுத்த 10 நாட்களுக்கு உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களே குடிகொண்டிருக்கும்..” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ பல வருடங்களாக இந்தக்கதையைச் சுமந்து கொண்டு பல தயாரிப்பு நிறுவனங்களுக்குப் படியேறினேன். இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் எப்படியும் தயாரிப்பாளர் பிடித்துவிடலாம் என்று நம்பிக்கை இருந்தாலும், என் ஒருவனுக்காக என்னை நம்பி இந்தப் படத்தில் பணியாற்றக் காத்திருந்தவர்களை மேலும் காத்திருக்க வைக்க மனமில்லை. ஆகவே, அப்பாவிடம் கேட்டேன். அவரும் உடனே ஒப்புக்கொண்டார்..” என்றார்.
இயக்குநரின் முதல் படம், அவரது அப்பாவே தயாரிக்கிறார் என்றாலும், படத்திற்குத் தேவையான எதற்காகவும் சமரசத்திற்குட்பட்டுவிடாமல் கதைக்கு என்ன தேவையோ அதனைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஒரு கார்பந்தயக் காட்சி ஒன்றில், இது வரை இந்திய சினிமாக்களில் பார்த்திராத அளவிற்கு சாகசங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக உடைகளுக்கு இன்னொன்று ( Double ) – அதாவது ஹீரோ ஒரு சட்டை போட்டு நடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அந்தச் சட்டை எதிர்பாராமல் கிழிந்து போய்விட்டால், அதே போன்று இன்னொரு சட்டை வைக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்புக்கு தாமதம் ஏற்படாமல் தொடர்ந்து நடக்கஏதுவாக..) வைத்துக் கொள்வார்கள். ஆனால், இதில் பந்தயக்காருக்கே இன்னொன்று வைத்துக் கொள்ள அனுமதித்தார் தயாரிப்பாளர்..” என்றார் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கும் பில்லா ஜெகன்.
“ வரும் கதாபாத்திரங்களையெல்லாம் ஒத்துக் கொண்டு நடிக்கிறேன் என்று எண்ண வேண்டாம். வாய்ப்பு தேடும் போது எந்தக் கதாபாத்திரங்களும் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தால் தான் அப்படி நடிக்கிறேன். இந்தப்படம் எனக்கு நல்ல அடையாளம் கொடுக்கும்..” என்றார் பஞ்ச பூதங்களில் வானத்தின் குணத்தைப் பிரதிபலிக்கும் சந்தோஷ். சென்னை டூ சிங்கப்பூரில் நடித்த கோகுல், நெருப்பை பிரதிபலிப்பவராகவும், சனா, நீரையும் – மது சாலினி காற்றையும் பிரதிபலிப்பவர்களாக நடித்திருக்கின்றனர். இவர்களுடன் அஸ்வின் மற்றும் குணா ஆகியோர் நடிக்கிறார்கள்.
“வாய்ப்புக்கேட்டுப் போனேன், டைரக்டர் டக்குனு சட்டையைக் கழட்டச் சொல்லிட்டார். சட்டையைக் கழட்டிவிட்டு வெற்று உடம்புடன் வசனம் பேசிக்காட்டினேன். உடனடியாக என்னை வில்லனாக நடிக்க வைத்துவிட்டார்..” என்று கலகலப்பூட்டினார் சீமான், ஆமா, மதுரைப்பக்கம் இருந்து இன்னொரு சீமான்.
பாடல்களை ஜிகேபி எழுத, இசையமைத்திருக்கிறார் எட்டுதோட்டாக்கள் சுந்தரமூர்த்தி. யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் செய்திருக்கிறார்.
சீக்ரெட் என்கிற புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் பஞ்சராக்ஷரம் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.