பொதுவாக, படங்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு என்ன சொல்லவேண்டுமோ அதைவிடுத்து, ஏதேதோ பேசுவார்கள். அவை வேறு ஒரு வகையில், விளம்பரம் தேடித்தரலாம் என்றாலும், மிகவும் அரிதான நிகழ்வே.
ஆனால், வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் உருவான டாணா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், அதன் நான்கு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், தொழில் நுட்பக்குழுவினர் என்று மேடையேறினாலும், டாண் டாண் என்று படத்தைப் பற்றிப் பேசினார்கள்.
திரைத்துறைக்குச் சம்பந்தமில்லாத துறைகளில் வணிகம் செய்துகொண்டிருந்தாலும் தங்களது நண்பர்களுக்காக டாணா படத்தை தயாரித்திருக்கிறார்கள் எம் சி கலைமாமணி, எம் கே லட்சுமி கலைமாமணி, சனா உல்லாகான், பிரசாந்த் ரவி மற்றும் சந்தோஷ்.
யுவராஜ் சுப்ரமணி இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Voice Conflict என்கிற குரல் மாற்றம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அதே நேரம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் என்று விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். காதல், ஆக்ஷன், நகைச்சுவை, திகில் என்று அனைத்தும் சேர்ந்த கலவையாக இப்படம் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் காவலர்களைக் குறிப்பிடும் போது டாணாக்காரன் வர்றான் என்பார்களாம், அதுவே தலைப்பு. நாயகன் வைபவ், காவலராக ஆக முயலும் பாத்திரமேற்றிருக்கிறார். பதட்டத்தில், இவருக்கு பெண்குரல் வந்துவிடுவது தான் படத்தின் ஹைலைட்.
டாணா மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் சிவா, சந்தோஷ் சிவனின் உதவியாளர் என்பதும், 150 க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்கள் இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை பிலிமில் எடுத்தால் எப்படி இருக்குமோ அதே தரத்துடன் எடுத்திருக்கிறார். இந்திய இசைதான் பலவிதமான ஒலிகளை உள்ளடக்கியது என்றும் விஷால் சந்திரசேகர் இப்படத்தில் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார் சிவா. இவரது தந்தை பிரபல ஆன்மீக குரு ஆத்ம நம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் எனக்கு ஒரு நல்ல படம் அமைந்துவிடுகிறது. 2020 இல் அமைந்த நல்ல படம் டாணா..” என்றார் நந்திதா ஸ்வேதா. யோகிபாபுவுடன் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், தொடர்ந்து அவருடன் நடிக்கவேண்டும் என்று விரும்புவதாகவும் மேலும் தெரிவித்தார், நந்திதா.
“இக்கதையை எழுதியவுடன் வைபவ் தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவுசெய்த இயக்குநர் அதனை ஏற்றுக்கொண்டு படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படம் ரசிகர்களை முழு அளவில் திருப்திப்படுத்தும்..” என்றார் வைபவ்.