அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் காதலர் தினம் 2020 அன்று வெளியான நான் சிரித்தால் உலகம் முழுவதிலுமாக 750 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான 3 வது நாளே வெற்றி அறிவிப்பு செய்துவிடலாம் என்கிற படக்குழுவினரிடம் 5 நாட்கள் போகட்டும் அதன் பின் நடத்தலாம் என்று சுந்தர் சி அறிவுறுத்தியபடி நேற்று, நான் சிரித்தால் படம் மூலம் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியில் சிரிக்கிறோம் என்கிற விதமாக குஷ்பூ தலைமையில் அதன் வெற்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. படத்தில், துக்கம் உள்ளிட்ட இக்கட்டான நேரத்தில் நாயகனுக்கு வரும் சிரிப்பு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இயக்குநர் இராணா சுவராஸ்யமாகச் சொல்லியிருப்பார். நிஜத்தில், படத்தின் வெற்றி படக்குழுவினரை மகிழ்ச்சியில் சிரிக்க வைத்திருக்கிறது.
படத்தின் நாயகன் ஆதி பேசும்போது, “ பள்ளீயில் படிக்கும் போது தமிழுக்கும் இசைக்கும் நிறைய செய்யவேண்டும் என்கிற கனவு இருந்தது, ஆனால் பணமில்லை. அதன் பிறகு சுய இசைக்கலைஞனாக வந்த எனக்கு இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர் என்று இந்தத் திரையுலகம் வாய்ப்பளித்தது, சுந்தர் சி மூலமாக. இன்று பணமும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். எனது கனவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன். என்னை விட அதிகத் திறமையுடன் கூடிய சுய இசைக்கலைஞர்கள் – இயக்கு நர்கள் இருக்கிறார்கள், அவர்களூக்கான மேடை அமைத்துக் கொடுப்பது தான் எனது கடமை.
சமூக வலைத்தளம் மூலம் ஒரே நாளில் பிரபலமாகி திரையுலகில் வாய்ப்புகளைப் பெறமுடியும். ஆனால், திறமையும் கடின உழைப்பும் இருந்தால் தான் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொடர்ந்து ஜெயிக்க முடியும். அப்படிப்பட்ட திறமையான இராணாவை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி…” என்றார்.
திறைமையான புதுமுகங்களுக்கு மட்டுமல்லாமல் பலதிறமைகள் இருந்தும் சரியான அங்கீகாரம் இல்லாத மூத்த கலைஞர் படவா கோபிக்கும் நல்ல ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பதில் ஹிப் ஹாப் ஆதியும் அவரது குழுவினரும் தனித்துவம் மிக்கவர்களாகத் தெரிகிறார்கள் என்றால் அது மிகையல்ல.
“ தற்பொழுது 10 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அனைவருமே புதுமுக இயக்குநர்கள், புதிய சிந்தனைகளுடன் வரும் இளைஞர்களுடன் பணியாற்றும் போது புதிதாகக் கற்றுக் கொள்ளவும் முடிகிறது, இளமையாக இருக்கவும் முடிகிறது..” என்றார் கே எஸ் ரவிக்குமார். பொதுவாக கூச்சம் சுபாவத்துடனும், படப்பிடிப்புத் தளங்களில் துறுதுறுவென்றும் இருப்பதில் ஆதி, விஜய் போலத் தெரிகிறார் என்றும் குறிப்பிட்டார் கே எஸ் ரவிக்குமார்.
“ ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்குப் போனேன். அந்த மேடை வேறு , சினிமா மேடை வேறு. நாங்கள் இருவருமே சினிமாவில் இருப்பதால், சினிமா தவிர வேறொன்றும் தெரியாது. எங்களுக்கென்று ஒரு தயாரிப்பு நிறுவனம் வேண்டும் என்று ஆரம்பித்திருக்கிறோம். இந்த நிறுவனத்தின் காசோலைகளில் கையெழுத்திடுவதைத் தவிர, அவ்னி நிறுவனங்களின் ஒவ்வொரு வெற்றிக்கும் சுந்தர் சியே முக்கிய காரணகர்த்தா.
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, எந்த சூழ் நிலையிலும் தாங்கிப்பிடிக்க அவர் பின்னால் நிற்கிறார் என்கிற தைரியத்தில் தான் நான் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறேன்..” என்றார் குஷ்பூ.
நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடியா நான் சிரித்தால் இயக்கு நர் இராணாவிற்கு, அவரது முதல் படத்தின் வெற்றியை விட வேறு என்ன சிறந்த பரிசாக இருந்துவிடமுடியும்..!
மற்றொரு சமூக வலைத்தள சூப்பர் ஸ்டார் ராஜ்மோகன், நிகழ்ச்சியை இனிதே தொகுத்தார்.
நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.