தயாரிப்பாளர் திருஞானம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம், 'பரமபதம் விளையாட்டு'. இப்படத்தில், திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக விஜய்வர்மா என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களது மகளாக மானஸ்வி நடித்திருக்கிறார்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்துக் கூறிய மானஸ்வி, “ இந்தப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருக்கிறேன். காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமியாக நடித்திருப்பது மறக்க முடியாத அனுபவம்.
படப்பிடிப்பின் போது, உடற்பயிற்சிகள் மற்றும் சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்வது போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தார் திரிஷா அக்கா.
ஒரு தடவை இரவில் நடந்த படப்பிடிப்பின் போது எனக்கு அதிகமாகக் குளிரடித்தது. எனது அப்பா போர்வையை எடுத்துவரத் தாமதமான நிலையில், திரிஷா அக்கா அவரது போர்வையை எனக்கு போர்த்திவிட்டு அன்பாக அரவணைத்துக் கொண்டார்..”என்றார்.
வரும் 28 ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில், முன்னதாக நடந்த பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியினையடுத்து, அவருக்கு கடையெழு வள்ளல்களைப் பற்றியும் குறிப்பாக மயிலுக்குப் போர்வைகொடுத்த பேகன் பற்றியும் கூறி, இந்தக் குட்டிமயிலுக்குப் போர்வை கொடுத்ததன் மூலம் இனி திரிஷாவை பேகி என்றும் அழைக்கலாமா என்று கேட்க, குழந்தைக்கே உரிய வசீகரச்சிரிப்பை உதிர்த்தாள் இந்த மான்ஸ்வி. இவர், நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி, பின்னணி குரல் கலைஞர் அஞ்சலி தம்பதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மானஸ்வியைப் பற்றி இன்னொரு விஷயம் குறிப்பிட்டே ஆகவேண்டும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் சம்பந்தப்பட்ட படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றியும் பட அனுபவத்தையும் நச்சென்று நாலே வார்த்தையில் மிகவும் தெளிவாகப் பேசிவிடுவதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.