தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர், சத்யராஜின் முக்கியமான படங்களுள் ஒன்றான “வால்டர் வெற்றிவேல்” அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெடிக்கல் திரில்லர் வகைப்படமான இதனை கமர்ஷியல் உக்திகளுடன் இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் யு அன்பு.
பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே வெளியாகுமுன் சேட்டிலைட் உரிமம் வாங்கப்படும் நிலையில், வால்டர் படத்தின் கதைக்களத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. இது தயாரிப்பாளர் பிரபு திலக் உள்ளிட்ட வால்டர் குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட தயாரிப்பாளர் பிரபுதிலக், “ஒரு தயாரிப்பாளரின் கடமை சினிமாவில் மிகப்பெரிது, மிக முக்கியமானது. கதை கேட்பதில் ஆரம்பித்து, அதனைப் படமாக உருவாக்கி, படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பது வரையிலான பெரிய கடமை. சினிமாவால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும். சினிமாவில் சமூகத்திற்காக ஏதாவது நல்லதை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் 1940 களிலேயே புரட்சிகரமான கருத்துக்களை விதைத்த படங்களை நம் மூத்த திரை ஆளுமைகள் இயக்கியிருக்கிறார்கள். சமூகத்தை பாதிக்ககூடிய அல்லது சமூகத்திற்கான தேவையை கொண்டு போய் சேர்ப்பது தான் சினிமாவின் வேலை. இரண்டு சமூக மக்கள் எங்கோ சண்டை போட்டுக் கொண்டதை சினிமாவாக்கி சம்பாதிப்பது சினிமாவின் வேலையல்ல. ஒரு சிறு திரைக்காட்சி கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு மிகப்பெரும் ஆயுதம், இந்த சினிமா. அப்படி பட்ட சினிமாவில் வேலை செய்வது கோயில் கர்பக்கிரகத்தில் இருப்பது போல இருக்கிறது…” என்றார். வால்டர், நமது குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் படமாக ரசிகர்களைக் கவரும் விதத்தில் வெளிவர இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“சத்யராஜ் படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறேன். அந்த நேரத்தில் சிபிராஜை சிறுவனாகப் பார்த்திருக்கிறேன். இன்று அவரோடு வில்லனாக நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கடந்த கால கசப்பான அனுபவங்களால் என் சம்பந்தப்பட்டக் காட்சிகளை மட்டும் கேட்காமல் முழு ஸ்கிரிப்ட்டையும் கேட்டபிறகே நடிக்க ஒத்துக் கொண்டேன்..” என்றார் நட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியம்.
“அப்பாவுடனும் வடிவேலுவுடனும் நடிப்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. கிட்டத்தட்ட அதே உணர்வை இப்படத்தில் நட்டி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருடன் நடிக்கும் போது உணர்ந்தேன். இயக்குநர் ஐந்து வருடங்களாகத் தூக்கிச் சுமந்த கதை, நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றாது..” என்றார் சிபிராஜ்.
நாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடிக்க, ரித்விகா, யாமினி சந்தர், அபிஷேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். இளையராஜ எடிட்டிங்கையும் ராசாமதி ஒளிப்பதிவையும் கையாள்கிறார்கள்.
பட வெளியீட்டுக்கு முந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக்கும் கலந்துகொண்டார்.