ஆர்.கே. நாயகனாக நடிக்கும் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’படத்தை ஆப்பிள் புரொடக்சன்ஸ் சார்பில் ஏ. சி. ஆனந்தன் தயாரிக்கிறார். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் இரண்டாவது நாயகனாக அறிமுகமாகிறார், நார்வேத் தமிழர் வருண். இவருக்குப் பூர்வீகம் இலங்கை என்றாலும், வருண் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் நார்வேதான்.
இரண்டாண்டு மருத்துவப்பட்டப் படிப்பை முடித்துள்ள வருணுக்கு, திடீரெனக் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தில் இரண்டாம் ஹீரோவாக வாய்ப்பு அளித்தது தயாரிப்பாளர் ஏ. சி. ஆனந்தன்.அவர் வருணுக்கு உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.
என்கவுன்டர் ஸ்பெலிஸ்ட் குழுவில் ஒருவராக வரும் வருணுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சினிமா வாய்ப்பினைப் பற்றி வருண் கூறுகையில், “இந்தப் படத்தில் நடிக்க வரும் முன்பு, சினிமாவில் நடிப்பது குறித்து எந்த ஐடியாவும் இல்லை. வாய்ப்பு வந்ததும் படிப்புக்குக் கொஞ்சம் பிரேக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். படம் முடிந்த பிறகு படிப்பைத் தொடரும் எண்ணமுள்ளது. அதே நேரம் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளேன்.
படத்தில் நான் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறேன். இதில் நடிக்கத் தேவையான ஆலோசனைகளை எனக்குச் சொன்னவர் படத்தின் நாயகன் ஆர்.கே.தான். அவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். போலீஸ் வேடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் பயிற்சி கொடுத்தவரும் அவர்தான்.
ஏதோ வாழ்ந்தோம், போனோம் என்றில்லாமல், வரலாற்றில் ஏதோ ஒரு இடத்தில் நமது பெயரும் பதிவாக வேண்டும் என்ற ஆசை, இந்த வகையில் நிறைவேறியுள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
வாழ்த்துகள் வருண்.