
இயக்குனர் S A சந்திரசேகரனின் சட்டப்படி குற்றம் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கமலா திரையரங்கு உரிமையாளர் சிதம்பரம் விஜயை அரசியலுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தனது தந்தை மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சிறிது சிறிதாக தன் திறமையால் வளர்ந்து ஒரு சிறந்த நடிகராகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் விஜய் இன்று பல வினியோகஸ்தர் மற்றும் அனைத்து திரைப்பட உரிமையாளர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஒரு சிறந்த கமர்ஷியல் ஹீரோவாக மாறியிருக்கிறார். அவருக்கென்று மபெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் ஒரு முழு நேர அரசியல் வாதி ஆகி விட்டால் சினிமாத் துறைக்குப் பேரிழப்பாக இருக்கும் என்றும் திரையரங்குகளும் படம் பார்க்க ரசிகர்கள் இன்றி வார இறுதி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மூடப்பட நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும்
தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விஜய் தற்பொழுது ஷங்கர் மற்றும் மணிரத்னம் போன்றோரின் இயக்கத்தில் நடிப்பதன் வாயிலாக உலக அளவில் சிறந்த நடிகராக வர வாய்ப்புகள் இருக்கும் போது இந்த நேரத்தில் அரசியலுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அரசியலில் இறங்கியதால் தனது நண்பரான நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலையினையும் நினைவுபடுத்தினார். தனது இறுதி நாட்களில் அரசியல்வாதி யாரும் தன் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று சிவாஜி கட்டளையிடும் அளவிற்கு அரசியல் அவரைப் பழிவாங்கி விட்டது என்று குறிப்பிட்ட அவர், மாபெரும் நடிகரான சிவாஜி சினிமாத் துறையினை விட்டு விட்டு அரசியலுக்குச் சென்றதால் சினிமாத் துறைக்கு பேரிழப்பு ஏற்பட்டதாகக் கூறிய சிதம்பரம் அதே நிலையினை விஜயும் ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.