நடிகர் பிரபு, இசையமைப்பாளர் கங்கை அமரன், விஞ்ஞானி சுந்தரேஷ் ஆகியோருக்கு சத்திய பாமா பல்கலைக் கழக வேந்தர் ஜேப்பியார் டாக்டர் பட்டம் வழங்கினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட நடிகர் பிரபு பேசியதாவது. மாணவர் பருவம் ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதது. இந்த பருவத்தில் தான் நீங்கள் பல்வேறு துறைக்கும் சென்று உங்கள் திறமையை வெளிப்படுத்துகிறீர்கள். ஆகவே, நீங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க உங்கள் பல்கலைக்கழகவேந்தர் ஜேப்பியாரை நினைத்தால் நீங்கள் அவரைப் போல் சாதனை படைக்க முடியும் என்றார்.
விழாவில் இசையமைப்பாளர் கங்கை அமரன், “ஒவ்வொரு மாணவர்களும் பட்டங்களை பெறும்போது தனது அம்மாவை நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லோருடைய வெற்றிக்கும் முதல் கடவுள் அம்மாதான். நானும், எனது அண்ணன் இளையராஜாவும் பெற்ற வெற்றிக்கு காரணம் என் அம்மாதான். இப்பொழுது வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தின் புகழும் எனது அம்மாவையேச் சேரும்” என்று பேசினார்.
“மாணவர்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் ஆராய்ச்சி செய்தால் தான் இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேற முடியும்” என்று டாக்டர் பட்டம் பெற்ற டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி மற்றும் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேஷ் பேசினார்.