மதுரையில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரையைச் சுற்றியுள்ள அனைத்து கிரமாங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் அங்கே பக்தர்கள் கூடுவர்.
தமிழ்த் திரைப்படங்களில் கோலோச்சிக் கொண்டுள்ள பலரும் மதுரை அல்லது அதன் சுற்றுப்புறங்களில் இருந்து வந்திருந்தாலும் சினிமா விழாக்கள் பெரும்பாலும் சென்னையிலேயே நடந்து விடுகின்றன.
குட்டி மதுரை என்று அழைக்கப்படும் பரமக்குடியில் இருந்து வந்த உலக நாயகன் முதல் முறையாக விருமாண்டி படத்தின் தொடக்க விழாவினை மதுரையில் வைத்து தன்னுடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடத்தினார்.
அதன் பிறகு இன்றைய தலைமுறை நடிகர்களின் சூப்பர் ஸ்டாரான விஜய் நடிக்கும் வேலாயுதம் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 28 ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. துள்ளல் இசைக்கலைஞன் விஜய் ஆண்டனி வேலாயுதம் படத்திற்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டத்திற்குப் பெயர் பெற்ற ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இந்தப்படத்தை மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார்.
இணைத் தயாரிப்பு டி.சுரேஷ், ஒளிப்பதிவி ப்ரியன். ஒவ்வொரு பாடல்களும் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. இயக்குனர் ஜெயம் ராஜா முதல் முறையாக விஜயை இயக்கியிருக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியாவும் ஹன்சிகாவும் நடித்திருக்கின்றனர்.
தேர்தலுக்கு முன் விஜய் நடிக்கும் படத்திற்கும் - அவருக்கும் ஆளும் கட்சியினரால் தொந்திரவுகள் ஏற்பட்டுப் பின் விஜய் அ.தி.மு.க வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மதுரையில் வைத்து விஜயின் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமான மாநாடு போல நடைபெற இருப்பது சினிமா ரசிகர்களிடையேயும் விஜயின் ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- K Vijay Anandh