“ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று…” இந்தியா சுதந்திரம் அடைவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே சுதந்திரத்தினைக் கொண்டாடப் பாட்டிசைத்தார் நம் பாரதி. இன்னும் பல விஷயங்களைத் தீர்க்கதரிசனம் செய்துப் பாடல்களாக எழுதிக் குவித்தார். கண்ணன் மீது தீராக்காதல் கொண்டு பலபாடல்களை எழுதினார்.. “காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே...” என்கிற பாடல் எல்லாம் எவ்வாறு மறக்க இயலும்.
கண்ணன் மீது கொண்ட பாரதியின் அளவிட முடியாதக் காதல் அவரை ஒரு ஆழ்வாராகவே பாவித்து சென்னை அடையாறில் அமைந்துள்ள மத்யகைலாஸ் ஆலயத்தில் கிருஷ்ணன் சன்னதியில் பாரதிக்கும் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள்.
அத்தகைய தெய்வீகப் பிறவியான பாரதியின் 5 ஆம் தலைமுறை எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி. அவரது எள்ளுத்தாத்தா பாரதி
பராசக்தியைப் போற்றிப் பாட்டெழுதினார் என்றால் நம் காலத்து நிரஞ்சன் பாரதி “மங்காத்தா” வுக்காகப் பாட்டெழுதியிருக்கிறார். கண்ணாடி நீ – கண் ஜாடை நான், என் வீடு நீ – உன் ஜன்னல் நான், .... என்று நிரஞ்சன் பாரதி எழுதிய பாடலை யுவன் சங்கர் இசையில் SPB சரண்-பவதாரணி பாடியிருக்கிறார்கள்.
“கவிதை எழுத வேண்டும் என்பது என் கனவு – ஆர்வம்... வெறுமனே எழுதிக் கொண்டிருக்காமல் சினிமா என்கிற சக்தி வாய்ந்த ஊடகத்தின் வாயிலாக எழுதும் போது அது பலரைச் சென்றடையும்... மேலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கலாம் அதனால் தான் சினிமாவில் பாட்டெழுத ஆரம்பித்திருக்கிறேன்... எனது எள்ளுத்தாத்தா பாரதியார் வாழ்ந்த காலம் - சூழல் வேறு.. அன்றும் அவர் பல அடிமைத்தனங்களுக்கு எதிராக மனித சமுதாயதம் போராட வேண்டும் என்கிற நோக்கில் எழுச்சிப் பாடல்களை எழுதினார். இன்றும் பல விதமான சமுதாயச் சீரழிவிற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது. நிச்சயமாக சாதி வேறுபாடில்லா சமூகம் உட்பட பாரதியின் கனவுகளை நனவாக்க எனது கவிதைகள் வாயிலாக தொடர்ந்து குரல் கொடுப்பேன்... அவரது பாடல்களில் “பாரத சமுதாயம் வாழ்கவே...., பாருக்குள்ளே நல்ல நாடு...., காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே..” போன்ற கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்...” இவ்வாறு நிரஞ்சன் பாரதி கூறினார்.
திரிசக்தி குழுமத்தில் பத்திரிக்கைப் பிரிவில் வியாபாரப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் MBA பட்டதாரியான நிரஞ்சன் பாரதி, பாரதியாரின் புதல்விகளான தங்கம்மா பாரதி, சகுந்தலா பாரதி ஆகியோரில் தங்கம்மா பாரதியின் மகள் லலிதாபாரதி - லலிதா பாரதியின் மகன் ராஜ்குமார் பாரதியின் மகனாவார். ராஜ்குமார் பாரதிக்கு அர்ஜூன் பாரதி என்கிற மூத்த சகோதரர் இருக்கிறார். நிரஞ்சன் பாரதி 2009 ல் “வானமே உன் எல்லை என்ன?” என்கிற கவிதைத் தொகுப்பினை எழுதியிருக்கிறார்.
பாரதியாரின் வாரிசு சினிமாவிற்குப் பாட்டெழுதுவது என்பது சினிமாத்துறைக்கே ஒரு கெளரவம். நிரஞ்சன் பாரதிக்கு பாட்டெழுத வாய்ப்பு கொடுத்த மங்காத்தா அணியினருக்குப் பாராட்டுகள்.