ஒரு கண்ணாடி ஜாடிக்குள் பல தேசத்து நண்டுகளைப் போட்டு மூடி வைத்திருந்தார்களாம். ஒரு குறிப்பிட்ட தேசத்து நண்டுகளைத் தவிர மற்ற நண்டுகள் ஒன்றின் மீது ஒன்று ஏறியும் - ஏறிய நண்டுகள் கை கொடுத்தும் அனைத்து நண்டுகளும் தப்பித்து விடுமாம். அந்தக் குறிப்பிட்ட தேசத்து நண்டுகள் ஏறித்தப்பிக்க முயலும் சக நண்டுகளையும் உள்ளே இழுத்து விடுமாம், ஏனென்றால் அவை இந்திய நண்டுகளாம். இப்படி ஒரு கதையினை நாம் நம் பள்ளிப்பருவத்தில், கல்லூரி வாழ்க்கையில் அல்லது பணியாற்றுமிடத்தில் என்று ஏதோ ஒரு இடத்தில் சக இந்தியர்களேச் சொல்லக் கேட்டிருப்போம்.
இனிமேல் அந்தக் கதை இங்கே எடுபடாது, அதில் உண்மை இருக்காது ஆகவெ சுவராஸ்யமும் இருக்காது மொத்தத்தில் அந்தக்கதைக்கு இனிமேல் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் வேறு எங்குமே வேலை இல்லை என்ற நிலைமை வந்து விட்டது.
இந்திய அளவில் அன்னா ஹசாரே வின் ஊழலுக்கு எதிரான அமைதிப்புரட்சியில் கிட்டத்தட்ட இந்தியாவின் 2 ஆம் சுதந்திரப்போர் என்று அழைக்கப்படும் அளவிற்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் படித்த இளைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளையும் சேர்ந்தவர்கள் என முழுவீச்சில் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டார்கள்.
அன்னா ஹசாரே வின் போராட்டம் தனி மனித நலனுக்கானது அல்ல நாம் அனைவருக்குமானது நமது வளமான எதிர்காலத்திற்கானது என்பது ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொண்டதினால் தான் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் ஆதரவு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
லஞ்ச லாவன்யங்களுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப்போரினைப்போலவே இதோ சங்ககிரி ராச்குமாரின் மக்களை மாக்களாக ஆக்கும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போரும்.
அந்தப்போரில் அவர் வெற்றிபெற நமது இயக்குனர்கள் தோள் கொடுத்திருக்கிறார்கள். சத்யராஜின் கெளரவத் தோற்றத்தைத் தவிர வெங்காயம் திரைப்படத்தில் வேறு யாரும் பிரபலங்கள் இல்லை. அரை வயிறும் கால் வயிறும் கஞ்சி குடித்து ஒட்டிப்போன வயிறுகளுடன் கூடிய சிறுவர்களுடன் ஒரு சில யதார்த்த மனிதர்களுடனும் வெங்காயத்தை இயக்கியிருக்கிறார் ராச்குமார். அந்தச் சிறுவர்களுக்குத் தோற்றத்தில் தான் வறட்சி. அறிவிலோ பெரும் முதிர்ச்சி. இந்தச் சமுதாயாத்திடம் அவர்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு இந்தச் சமுதாயம் என்ன பதில் சொல்லப்போகிறது?
சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் சாதகம், சம்பிரதாயங்கள், தோச நிவர்த்திகள், பரிகாரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பாடுப்பட்ட பெரியார் கதாபாத்திர வேடமேற்று அவரது வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும் படத்தில் நடித்ததை விட அவரது எண்ணங்களைப் பிரதிபலித்திருக்கும் பெரியாரைப் போலவே மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கும் வெங்காயம் படத்தில் நடித்ததைப் பெரியார் பெரிதும் விரும்பியிருப்பார் என்கிறார் புரட்சித்தமிழன் சத்யராஜ்.
சங்ககிரி ராச்குமாரின் வெங்காயத்திற்கு ஊடகங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அங்கீகரம் பெற்றுத்தரும் முயற்சியாக இயக்குனர் சேரன் தன் சக இயக்குனர்களை அழைத்து வெங்காயம் படத்தினைத் திரையிட்டுக்காட்டினார். படம் பார்த்த அனைத்து இயக்குனர்களுமே வெங்காயம் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் என்பதனை ரசிகர்களுக்கு ஒரு வேண்டு கோளாக விடுத்திருக்கின்றனர்.
வெங்காயத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்ட ஒவ்வொரு இயக்குனர்களும் ஏதாவது ஒரு வகையில் இயக்குனர் சங்ககிரி ராச்குமாருக்குத் தோள் கொடுக்கத் தயாராயினர். அதனை அங்குக் கண்கூடாகக் காண முடிந்தது. இயக்குனர் தங்கர்பச்சன் ஒரு பெரிய வி நியோகஸ்தர் தயாரிப்பாளரை அறிமுகம் செய்கிறார். ஆர்.கே.செல்வமணியோ இந்தப்படத்திற்கு ரசிகர்களும் ஊடகங்களும் ஆதரவளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஏன் நல்ல படம் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேள்வி கேட்கும் தகுதியே இல்லை என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.
திரைக்கதை அமைப்பதில் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ஜனரஞ்ஜக இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்குனர் ராச்குமாரைத் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மனதார பாரட்டியதுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
ஒரு வகுப்பில், கைதூக்கி விட வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு புத்திசாலி மாணவனுக்கு ஒரு மாணவன் நோட் புத்தகம் கொடுக்க ஒரு மாணவன் பேனா கொடுக்க ஒரு மாணவன் மதிய உணவை அவனுடம் பகிர்ந்து கொள்ள இப்படி நெகிழ்ச்சியான அனுபவங்களை நம் பள்ளி வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம். அதே போன்ற நெகிழ்ச்சியான அனுபவங்களை இயக்குனர் சேரனின் முயற்சியால் பார்க்க முடிந்தது. நடிகை ரோகினியும் கலந்து கொண்டு படம் பார்த்து விட்டு வந்த இயக்குனர்களின் கருத்துக்களைப் பதிவு செய்து கொண்டார்.
இனிமேல் அந்த நண்டுக்கதையினை சொல்ல மாட்டீர்கள் அல்லவா..?
- Vijay Anandh.K
Photos: Saravanan Mayee
[nggallery id=321]