பொழுதுபோக்கிற்காக படம் எடுப்பது ஒரு ரகம். பொழுதுபோக்கினூடே சமூக அவலங்களைச் சாடி ஒரு சமூதாயச் சீர்திருத்தத்திற்கான அடித்தளமிடுவது போன்ற படங்களை எடுப்பது இன்னொரு ரகம்.
மற்றதேசத்து மனித சமூகம் மனித சமூகமாக மாற ஆரம்பிக்கும் முன்னே தமிழன் மொழி ஆளுமையிலும், வாழ்வியல் முறைகளிலும், மருத்துவம், வானியில், விஞ்ஞானம் போன்றவற்றிலும் ஆடல்-பாடல் கலைகளிலும், முத்தாய்ப்பாக ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடும் உணவுப்பழக்கம், யோகம் மற்றும் தற்காப்புக்கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறான். அந்த வகையில் மற்றவர்களுக்கு ஆறறிவு என்றால் தமிழனுக்கு ஏழாம் அறிவும் இருந்திருக்கவேண்டும் என்றால் மிகையாகாது. அவன் இந்த உலகிற்கு அளித்த ஒப்பற்ற விஷயங்களைச் சொல்லும் விதத்தில் ஒரு சர்வதேச முக்கியத்துவம் பெறும் படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 7 ஆம் அறிவு வெளிவந்து மேற்கண்ட ரகங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு புது ரகமாக விளங்கப்போகிறது. உலகில் எந்த ஒரு இனத்திற்கும் மூத்த இனமான தமிழினத்தின் பெருமைகளைப் பறைசாற்றும் படமாக 7 ஆம் அறிவு இருக்கப்போகிறது.
இன்று உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரின் வாழ்க்கை முறைகளையே மாற்றிய – மேம்படுத்திய, 5 ஆம் நூற்றாண்டில் அன்றைய பல்லவ
நாடு என்று அறியப்படும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மன் என்னும் தமிழனின் வாழ்க்கையை நினைவு படுத்தி உலக வரலாற்றில் மறைக்கப்பட்டத் தமிழனின் மாண்பை இன்றைய தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தவர்க்கும் உரக்கச் சொல்லும் படமாக 7 ஆம் அறிவு இருக்கப்போகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து கால் நடையாகவே 3 ஆண்டுகள் பயணித்து சீனதேசத்தை அடைந்து அங்கு வசித்த மக்களுக்கு மருத்துவம், நோக்கு வர்மம் எனப்படும் மெஸ்மெரிசம் மற்றும் கராத்தே முதலானக் கலைகளைக் கற்றுக் கொடுத்து அவர்களது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ஒரு மா மனிதன் போதிதர்மனைப் பற்றிய கதைதான் 7 ஆம் அறிவு. சீனா முழுவதும் போதி தர்மனுக்குச் சிலை இருக்கிறது. அவரை ஒரு கடவுளாக அங்குள்ள மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இங்கே தமிழகத்தில் அவன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கூட அழிக்கப்பட்டு இருக்கிறது.
7 ஆம் அறிவு படம் மூலம் போதிதர்மன் ஒவ்வொரு தமிழன் மனதிலும் குடிபுகப்போகிறார். தமிழன் மட்டுமல்லாது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளப் போகிறான். அத்தகைய சர்வதேசப்புகழ் பெற்ற போதிதர்மன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்கு தாம் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகச்சரியே எனும் அளவிற்கு மிகக்கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டு போதி தர்மனாகவே வாழ்ந்திருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் இன்னொரு கதா நாயகன் என்கிற அளவிற்கு இளம் விஞ்ஞானி சுபா சீனிவாசன் (ஸ்ருதிஹசனின் அக்கா சுபாஷினி-சாருஹாசனின் இளையமகள் – தாத்தா பெயர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது) என்கிற முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருக்கிறார்.
3 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஹாரிஸ் ஜெயராஜின் மனதைமயக்கும் பாடல்கள் ஏற்கனவே பெரிய அளவில் வெற்றி பெற்று சோனி வெளியிட்ட குறுந்தகடுகள் முழுவதுமாக விற்றுத்தீர்ந்திருக்கின்றன.
சர்வதேச வில்லன் நடிகர் ஜானி முதன் முறையாகத் தமிழ்ப்படத்தில் வில்லனாக நடித்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்கும். அபினயா, இளவரசு போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளரான ரவி.K.சந்திரன் 7 ஆம் அறிவில் பணிபுரிந்திருக்கிறார்.
பெரும் பொருட்செலவு செய்யும் ஒரு தயாரிப்பாளர் என்கிற அளவு கோலையும் தாண்டி சிறந்த சினிமாவைக் கொடுக்கவேண்டும் என்கிற தேடுதல் உள்ளவரால் மட்டுமே 7 ஆம் அறிவு போன்ற படங்களைத் தயாரிக்க முடியும். அந்த வகையில் தமிழன் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளத்தக்க படமாக 7 ஆம் அறிவினைத் தயாரித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
-Vijay Anandh.K
Read audio launch news /gallery/video at this link http://www.mysixer.com/index.php?s=7+aum+arivu