தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா ஆகியோர் கலந்துகொண்ட பிரமாண்ட விழாவாக நடந்தது. பாடலாசிரியர் விவேகா எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
திருப்பூர் சுப்ரமணியம் பேசியபோது,”2002 ஆம் ஆண்டில் டைரக்டர் ஹரியின் முதல் படம் ‘தமிழ்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், இயக்குநர் பாலசந்தர், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி ஆகியோரிடம் அடுத்த படத்தை இயக்குவதற்கு இயக்குநர் ஹரிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நான் கூற, அவர்களும் சாமி படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார்கல். தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்ற நற்பெயரைச் சம்பாதித்திருக்கும் இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், பி வாசு, கே எஸ் ரவிக்குமார் ஆகியோரின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. அதனை இன்று வரை காப்பாற்றி வருகிறார்.’ என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், “எங்கள் நிறுவனத்திற்காகவும் மூன்று வெற்றிப்படங்களை இயக்கியிருக்கிறார், ஹரி. எல்லோராலும் விரும்பப்படும் மாஸ் படங்களின் வரிசையில் சாமிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. சாமீ ஸ்கொயரும் பெரிய வெற்றிபெறும்.. ‘சேது ’படத்திலிருந்தே விக்ரமுடன் இயக்குநர் பாலா மூலமாக தொடர்பு உண்டு. அந்தப்படத்தில் எனது பங்களிப்பும் இருக்கிறது…” என்றார்.
இயக்குநர் ஹரி பேசுகையில், “ பெருமாள் பிச்சை குடும்பத்திற்கும் ஆறுச்சாமி குடும்பத்திற்கும் நடக்கும் யுத்தமே சாமி ஸ்கொயர். சாமி படத்தில் ஒரு விநியோகஸ்தராக இருந்த ஷிபு, இன்று சாமி ஸ்கொயர் படத்தைத் தயாரித்திருக்கிறார். தரமான படத்திற்காகத் தேவைப்படும் அனைத்து செலவுகளையும் செய்திருக்கிறார். இந்த படத்தில் ஐந்து மாநிலங்கள், ஆறு விமான நிலையங்கள்,இருபதிற்கும் மேற்பட்ட சுமோக்கள், இருபதிற்கும் மேற்பட்ட கார்களை வாங்கி அடித்து உடைத்திருக்கிறோம். சுமோக்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது… இதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவையல்ல. கதை கேட்டதால் செலவு செய்திருக்கிறோம்...
ஜஸ்ட் லைக் தேட் ஆக, சாமியின் தொடர்ச்சி இருந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்… மாஸான கதையும் வேண்டும். சிறந்த நடிகரான விக்ரமுக்குத் தீனி போடுவதாகவும் இருக்கவேண்டும் என்று விரும்பினோம். அதற்காக யோசித்து வைத்திருந்த சில பாகங்கள், இதற்கு முன் எடுத்த போலீஸ் படங்களில் என்னையுமறியாமல் நுழைந்துவிட்டது…. அதன் பிறகுதான், ஒரு நல்ல கதைக்களம் மாட்டியது… அதனால் தான், சாமிக்கும் , சாமி ஸ்கொயருக்கும் இத்தனை ஆண்டு இடைவெளி..” என்றார்.
“விக்ரம் தான் என் ரோல் மாடல்…. அவருடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்கிற கனவு கந்தசாமி மூலம் நிறைவேறியது. இந்தப்படத்தில் அவரைப் பாடவும் வைத்துவிட்டேன்..”என்றார் தேவி ஸ்ரீ பிரசாத். தயாரிப்பாளர் ஷிபுவின் வேண்டுகோளுக்கிணங்க, விக்ரமுடன் இணைந்து ஒரு பாடல் பாடி, சாமி ஸ்கொயர் மூலம் இசை உலகிற்குள்ளும் அடியெடுத்து வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.