முடிப்பது முக்கியமல்ல
முதலில் முடிக்கவேண்டும்
அடிப்பது முக்கியமல்ல
அத்தனையையும் அடிக்க வேண்டும்
நிறம் பார்த்து
நீள அகலம் அளந்து
அடுத்தவர்க்குறியது எது
தனக்குறியது எது
என பகுத்தறிந்து விளையாடும் போதுதான்
ஜெயிக்க முடிகிறது...
கேரம் மட்டுமல்ல
நம் வாழ்க்கையும் அப்படித்தான்..
பிரபல செய்தி வாசிப்பாளர் ஜெயந்தி சுப்ரமணியன், விளையாட வா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தைப் பற்றிக் கொடுத்த முன்னுரை. கேரம் விளையாட்டிற்கும் விளையாட வா படத்திற்கும் என்ன சம்பந்தம்..?
விளையாட வா படம் முழுக்க முழுக்க கேரம் விளையாட்டினை மையப்படுத்தி சென்னையின் நிஜ கேரம் சேம்பியன் சீனிவாசபுரம் தேவன் என்பவரின் வாழ்க்கையில் நடக்கும் சுவையான சம்பவங்களைக் கோர்த்து இளம் கதாநாயகன் விஸ்வநாத் பாலாஜி கேரம் சாம்பியனாக நடிக்கும் படம். சீனிவாசபுரம் தேவனாக பொன்வண்ணனும் அவரது மனைவியாக லட்சுமி ராமகிருஷ்ணனும் நடித்திருக்கிறார்கள். விஸ்வநாத் பாலாஜிக்கு ஜோடியாக திவ்யா பத்மினி நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஸ்ரீ முரளி, தமிழ்த் திரையுலகில் தனது இசை மூலம் விளையாட வந்திருக்கிறார்.
இந்தப்படத்தின் கதையினை எழுதியிருப்பவர் தமிழ்சினிமா உலகின் முன்னணி மற்றும் நீண்ட அனுபவிக்க கதாசிரியரான கமலேஷ் குமார். இவர் கே.எஸ்.ரவிக்குமாரின் பலபடங்களின் கதை விவாதங்களில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட வா மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் விஜய நந்தா ஏற்கனவே தெலுங்குப் படங்கள் மற்றும் பல விளம்பரப் படங்களை இயக்கியவர்.
தென்னிந்திய மொழிகளில் முதன்முறையாக கேரம் விளையாட்டினை மையப்படுத்தி விளையாட வா திரைப்படம் உருவாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இளவழகி மற்றும் கேரம் சாம்பியன் சீனிவாசன் ஆகியோரது ஆலோசனைகளுடன் படத்தில் வரும் கேரம் சம்பந்தமான காட்சிகள் நேர்த்தியாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்த்திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழா வரலாற்றில் போட்டா போட்டிக்கு அடுத்து ஒரு விளையாட்டு வீரரை வரவழைத்து பாடல்களை வெளிடுவது இந்த நிகழ்ச்சியில் தான். தேசிய கேரம் விளையாட்டுச் சாம்பியன் இளவழகி கலந்து கொண்டு விளையாட வா வின் பாடல்களை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் தமிழ்த்திரைப்பட உல்கின் முன்னணி பிரமுகர்கள் சத்யோதி தியாகராஜன், தேனப்பன், டி.சிவா, முரளி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் விளையாட வா படக்குழுவினர் விஸ்வ நாத் பாலாஜி, பொன் வண்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் ஸ்ரீ முரளி, இயக்குனர் விஜய நந்தா, தயாரிப்பாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மூத்த மக்கள் தொடர்பாளர் மெளனம் ரவி படக்குழுவினரால் கெளரவிக்கப்பட்டார்.
-விஜய் ஆனந்த்.K