கனா படத்தைத் தொடர்ந்து. கதைநாயகர்களாக முற்றிலும் புதியவர்கள் நடிக்கும் படமொன்றை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.
முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, " இந்த நிலையில், சிவகார்த்திகேயன் -க்கு நன்றி தெரிவிப்பதைத் தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களது பணியைச் சிறப்பாகச் செய்ய உந்துதலாக அமைந்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம், அதே சமயத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு, வசனம்சேர்ப்பு பணிகளும் நடந்துவருகிறது" என்றார்.
படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை பற்றி அவர் கூறும்போது, "நடிகர்களைப் பொறுத்தவரை, தங்கள் திறமையால் மிகவும் புகழ் பெற்றவர்கள். ரியோ ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் நபராக மாறிவிட்டார். நான் அவருடன் பணிபுரிந்த வரை, அவரின் அர்ப்பணிப்பும், சிறப்பானதை வழங்குவதில் அவரின் உறுதியையும் உணர்ந்தேன். அதே போலவே ஷிரினும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ராதாரவி, எங்கள் படத்தில் நடிக்க வந்தது எங்கள் அதிர்ஷ்டம். நாஞ்சில் சம்பத், எங்கள் படத்துக்கு ஒரு வைரக்கல், அவரின் எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். இவர்களுடன் ஆர்.ஜே. விக்னேஷ்காந்தும் அவர் பங்குக்கு நகைச்சுவை விருந்துபடைத்திருக்கிறார்.." என்றார்.
ஷபிர் இசையமைக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப்குமார் சண்டைப்பயிற்சி அளிக்க, ஃபென்னி ஆலிவர் எட்டிங் செய்யும் இந்தப்படத்தின் கலை இயக்கத்தை கமல நாதன் கவனிக்கிறார்.
விரைவில், படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை வெளியாகும்.