ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டவர் நடிகர் ஷாஜி. இவர் நடிப்பு என்பதையும் தாண்டி, ஒரு நல்ல திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். திரைப்படங்கள் பற்றியும், இசை பற்றியும் இவர் எழுதிய கட்டுரைகள் முன்னணி நாளிதழ் மற்றும் பத்திரிக்கைகளில் தொடராக வெளிவந்திருக்கின்றன. அவை மட்டுமல்லாமல், சில சாதனையாளர்களைப் பற்றிய கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களைத் தவற விட்டாலும், இவர் படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்கிற ஒரு காத்திருப்புக்குப் பின் சீனுராமசாமி இயக்கத்தில் கண்னே கலைமானே படத்தில் நடித்திருக்கும் ஷாஜி “ கண்ணே கலைமானே படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் என்றாலும், மிகவும் விரும்பி நடித்தேன். நடுத்தர மக்களுக்கான சினிமா எடுக்கும் வெகுசிலரில் சீனுராமசாமியும் ஒருவர்.
நான் எல்லா மொழிப்படங்களையும் விரும்பிப்பார்ப்பேன்… மிகவும் யதார்த்தமான படங்களைக் கொடுக்கும் குருதத் போன்ற இயக்குநர்களுக்கு நிகராகப் படங்களை இயக்குபவர் சீனுராமசாமி. அவர் பார்த்த, பழகிய, வாழ்ந்த, தெரிந்த விஷயங்களை மட்டுமே திரையில் சொல்கிறார். கற்பனையால் எதையும் உண்மைக்கு மாறாக உருவாக்குவதில்லை அவர்..” என்றார்.