திருநெல்வேலி சங்கர் பாலிடெக்னிக்கில் படித்த 50 நண்பர்கள் சேர்ந்து தங்களது நண்பர் செல்வக்கண்ணனை இயக்குநர் ஆக்கி அழகு பார்க்கத் தயாரித்திருக்கும் படம், நெடுநல்வாடை.
இளங்கோ, அஞ்சலி நாயர் நாயக - நாயகியாக நடிக்க, பூராம், ஐந்துகோவிலன், மைம்கோபி, செந்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுத இசையமைத்திருக்கிறார் ஜோஸ் பிராங்க்ளின். விஜய் தென்னரசு, கலை இயக்கத்தைக் கையாள வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பாடல்களையும் படத்தையும் குறிபிட்டு காணொலி மூலம் பேசிய வைரமுத்து, " நெடுநல்வாடை என்கிற தலைப்பைக் கேட்டவுடனேயே பிடித்துப் போயிற்று. தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்று சட்டம் இயற்றும் அளவிற்கு தமிழ்ப்படங்களின் தலைப்புகள் தமிழை விட்டு விலகிச் சென்ற நிலையில், தமிழர்களின் சங்க இலக்கியங்களில் ஒன்றான நெடுநல்வாடை யைத் தலைப்பாக்கியிருக்கிறார்கள்.
நெல்லைத் தமிழில், பிறமொழிக்கலப்பின்றி படத்தின் அங்கமாகப் பாடல்களை எழுதியிருக்கிறேன்.
மகள் வழிப்பேரனைச் சுமக்கும் தாத்தா அவர்களைச் சுற்றி நிக்ழும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. நமது உறவுகளைத் தூக்கிப் பிடித்திருக்கிறது, நெடுநல்வாடை.. " என்றார். எனது முதல் படத்திலேயே அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருப்பதில் மகிழ்ச்சி என்றார் ஜோஸ் பிராங்க்ளின்.
மார்ச் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கும் நெடுநல்வாடை படத்தின் டிரையலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
பொதுவாக தயாரிப்பு நிர்வாகிகளை மேடைக்கு அழைக்காத நிலையில், எங்களை அழைத்திருக்கிறார்கள். இந்தி பட ரைட்ஸ் மட்டும் தான் இன்று வணிகமாக இருக்கிறது. ஆனால் அவன் வேட்டி கட்டி படம் எடுத்தால் வாங்கமாட்டான். அப்படியென்றால் நமது கலாச்சாரங்களையும் பாரம்பரியங்களையும் மையமாக வைத்து எப்படிப் படங்கள் எடுக்க முடியும்..? இயக்குநர் தான் பார்த்து அனுபவித்த உண்மையான நிகழ்வுகளை உயிரோட்டமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் செல்வக்கண்ணன்..." என்றார் தயாரிப்பு நிர்வாகி மாரியப்பன். சக தயாரிப்பு நிர்வாகி திருநாவுக்கரசும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
50 தயாரிப்பாளர்களில் ஒருவரான மோகனராஜ் பேசும் போது, " செல்வக்கண்ணன் மிகவும்.நேர்மையானவர். நாங்கள் அனைவரும் 20 வருட நண்பர்கள். நாங்கள் செல்வக்கண்ணன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்ற 200% உழைத்து படத்தை அருமையாகக் கொடுத்திருக்கிறார்.. " என்றார். ஒரு முன்னாள் மாணவர் சந்திப்பில் தான் இந்தப் படத்திற்கான விதையே போடப்பட்டது என்று கூறிய தயாரிப்பாளர்களில் ஒருவரான சுந்தர் , படத்தயாரிப்பில் சந்திதத சிரமங்களைப் பகிர்ந்துகொண்டது, கலகலப்பாக அமைந்தது.
B star productions நெடுநல்வாடை படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் படத்தைப் பற்றிக் கூறியபோது," காதலுக்காக உறவுகளைத் தியாகம் செய்கிறோமா..? உறவுகளுக்காகக் காதலைத் தியாகம் செய்கிறோமா..? என்பது தான் படத்தின் மையக்கரு. படம் உங்களை கிராமத்திற்கே அழைத்துச் செல்லும் என்றார்.
" சினிமாவில் வரும் அனைத்துக் கதைகளிலுமே உண்மை இருக்கும். சதவிகிதத்தில் தான் கூடுதல் குறைவு இருக்கும். இந்தப் படத்தில் 90% க்கு மேல் உண்மை இருக்கும்.. இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர்களாக இருப்பீர்கள் அல்லது இப்படி ஒரு வாழ்கை நமக்கு இல்லாமல் போய்விட்டதே என்று ஏங்குபவர்களாக இருப்பீர்கள்.." என்றார் இயக்குநர் செல்வக்கண்ணன்.