கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தேவராட்டம். குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா ஐந்தாவதாக இயக்கியிருக்கும் படமிது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியே படமெடுத்துக் கொண்டிருக்கிறாரே என்கிற குற்றச்சாட்டு, அவர் தேவராட்டம் என்கிற தலைப்பில் படம் எடுக்க ஆரம்பித்ததிலிருந்து இன்னும் அழுத்தமாகிப்போனது.
அதற்கு விளக்கம் கொடுக்கிறார் முத்தையா, “ நேட்டிவிட்டி எனப்படும் மண்சார்ந்த படங்கள் எடுக்கும் போது, அது இயல்பாகவே ஏதேனும் ஒரு சமூகப்பின்னணிக்குள் அமைந்துவிடுகிறது. கோபமும் வீரமும் எந்தசாதிக்கும் சொந்தமானது அல்ல, அது ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்குச் சொந்தமானது...
அந்த வகையில் நான் பார்த்து வளர்ந்த, எனக்குத் தெரிந்த சமூகப்பின்னணியில் தான் படமெடுக்கமுடியும். அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டியபொழுது , எனக்கு எந்த சமூகம் ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களோ, அந்தச் சமூத்தினரே போன் செய்து தங்களது அதிருப்தியைத் தெரிவித்தார்கள். அப்படியிருக்கும் போது எனக்குத் தெரியாத சமூகங்களைப் பின்னணியாக வைத்து படமெடுத்தால், நிச்சயம் நான் பலமுனைத்தாக்குதல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
நான் உறவுகள் சூழ்ந்து வளர்ந்தவன், எங்கள் வீட்டில் 7 ஆண்கள் 2 பெண்கள். அப்பா மிகவும் கண்டிப்பானவர். எங்கே சுத்தினாலும் 7 மணிக்கு வீட்டில் வந்து படுத்து தூங்கிவிடவேண்டும். பள்ளிக்கூட்த்தில் சேர்க்கும் போதே, ஐயா இவனை அடிச்சுப்படிக்க வையுங்க என்றுதான் நம்மளைச் சேர்ப்பார்கள். ஆனால், இன்று என் பையனை எப்படி அடிக்கலாம் என்று ஆசிரியர்களுடன் சண்டைபோட்ட்டு கண்டிக்கும் உரிமையை அவர்களிடமிருந்து பறித்துவிட்டோம்.
ஆசிரியரிடம் அடிவாங்காதவன், போலீசில் அடிவாங்குவான் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு இளம் குற்றவாளிகள், குறிப்பாக பாலியல் குற்றவாளிகள் பெருகிவிட்டார்கள். நான் என் பொண்டாட்டியைத் தவிர மற்றவர்களைத் தவறாகப் பார்க்க்கூட மாட்டேன்.
கூடப்பிறந்த பெண்களையே குறிப்பிட்ட வயதிற்கு மேல் தொட்டுப் பேசக்கூடாது என்று சொல்லும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டு, எவனோ ஒருத்தன் தட்டிபார்க்கவிடலாமா..?
அப்படிப்பட்ட கோபக்கார இளைஞன் தான் என் படததின் நாயகன் , வெற்றி. மண்ணைத் தொட்டவனைக் கூட மன்னிச்சுடலாம், பெண்ணைத் தொட்டவனை விடக்கூடாது என்று பொங்கி எழும் கோபக்காரன்.
கவுதம் கார்த்திக், சிறப்பாக நடித்திருக்கிறார். கொம்பன் பட்த்திற்கே நான் அவரைத்தான் கேட்டேன்.
மஞ்சிமா தான் வேண்டும் என்று காத்திருந்து நடிக்க வைத்தோம்.
வினோதினி வைத்யநாதன், அகல்யா போன்றோர் சகோதரிகளாகவும், போஸ்வெங்கட், சூரி, ஆறுபாலா, முனிஷ்ராஜ் போன்றோர் தாய்மாமன்களாகவும் நடிக்க, தம்பியாக இருந்தாலும் அவர்களின் செல்லப் பிள்ளையாக கவுதம் கார்த்திக் நடித்திருக்கிறார்.
ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அவரை, குடும்பமாக எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதே தேவராட்டம், கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்களின் வீடுகளில் அன்றாடம் நடப்பதுதான், அதனை சினிமா மொழியில் சொல்லியிருக்கிறேன்..” என்றவர், “ நான் எப்பொழுதுமே சாதிப்படம் எடுக்கமாட்டேன், எனக்கு சாதி தெரியாது. நான் எடுக்கும் படங்கள் ஒட்டுமொத்த சமூகங்களுக்குமானதே..” என்றும் தெளிவுபடுத்தினார்.
நமது சாதி அமைப்புகளில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளுமில்லை. குறிப்பாகத் தமிழர்களின் சாதிப்பெயர்கள் கூட அவர்களது தொழில் அல்லது வாழும் இடங்களின் அடிப்படையில் வைக்கப்பட்டக் காரணப்பெயர்களே.
சாதியை ஒழிக்கிறேன் என்று கிளம்பிய கூட்டம், நமது வாழ்வியல் முறைகளைச் சரிவர ஆராயாமல், குழப்பிவிட்டு ஆதாயம் தேடிவிட்டார்கள் என்ப்தே நிதர்சனம்.