அர்ஜுன், விஜய் ஆண்டனி – ஆஷிமா நர்வே நடித்திருக்கும் படம் கொலைகாரன். இந்தப்படத்தை, லீலை என்கிற காதல் படததை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார். தியா மூவீஸ் பி பிரதீப் தயாரிக்க பொஃப்டா மீடியா வொர்க்ஸ் இந்தியா பி லிமிடெட் சார்பாக தன்ஞ்செயன் வெளியிடுகிறார்.
இந்தப்படத்தின் டிரையலரை, இயக்குநர் சசி, வசந்தபாலன், காயத்ரி-புஷ்கர் மற்றும் ராதா மோகன் இணைந்துவெளியிட்டனர்.
விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, “ சென்ற வருடத்தில் இனி அவ்வளவுதான் என்கிற நிலையில் இருந்தேன். ஆனால் ஆபத்பாந்தவனாக வந்து கைகொடுத்தார் பி பிரதீப். என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அதாவது கைகொடுத்து தூக்கிவிட்டுக் கொலைகாரனாக்கியிருக்கிறார். எனது சொந்தப்படங்கள் இல்லாமல் வெளிப்படங்களில் நடிக்கும் போது பெரிய நடிகர்கள், மிகச்சிறந்த தொழில் நுட்பக்கலைஞர்கள் என்று பிரமாண்டமான படங்களில் நடிப்பது போல் உணர்கிறேன்.
அர்ஜுன் அவர்களுடன் நடித்த போது நிறையக்கற்றுக்கொண்டேன் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால், மற்றவர்களைப் போல நானும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தேன், அவரை.
பட்த்தைப் பிரமாண்டமாகத் தயாரித்துவிட்டோம், இனி யார் அதனைக் கொண்டு சேர்ப்பார்கள் என்கிற கேள்வி வந்தபோது, தன்ஞ்செயன் வந்தார். அப்பாடா என்று நிம்மதியடைந்தேன். படங்களை ரசிகர்கள் விநியோகஸ்தர்கள் என்று அனைவரிடம் கொண்டு சேர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள் வியக்கவைக்கின்றன. எனது படங்களை அவர் மூலம் வி நியோகம் செய்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.
என் ஆயுளுக்கும் அந்த ஒரு படம் போதும் என்கிற அள்விற்கு பிச்சைக்காரன் படத்தைக் கொடுத்தவர் சசி. அந்தப்படம் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் எனது படம் ஒன்று புதிதாக வெளியாகியிருக்கிறது என்கிற உணர்வு வரும்.." என்றார்.
சைமன் கே கிங் இசையமைத்திருக்கும் கொலைகாரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் முகேஷ்.
கொலைகாரன் டிரையலர் வெளியீட்டு நிகழ்ச்சியில், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஃபெஃப்சி சிவா, தயாரிப்பாளர் இயக்குநர் செந்தில் ஆகியோரும் கலந்துகொண்டனர். விஜய் ஆண்டனி, கொலைகாரன் பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் விக்ரம் வேதா இயக்குநர் தம்பதி காயத்ரி-புஷ்கர் ஆகிய நால்வரும் லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனியை வைத்து தமிழரசன் படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் ஃபெஃப்சி சிவா பேசும் போது, “ விஜய் ஆண்டனிக்கு ஒரு பெரிய கனவு இருக்கின்றது, அது நிச்சயம் அவருக்கு நனவாகும் என்று ஆசீர்வத்தார்.
என்ன கனவு, விஜய் ஆண்டனி..? முதலமைச்சர் அல்லது பிரதமர்..? ஏனென்றால், கோடம்பாக்கத்திற்கு உள்ளே இருந்துதான் அதிகம் பேர் அப்படிக்கனவு காண்கிறார்கள், அதில் தவறும் இல்லைதான். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும், மெய்ப்படட்டும்!