தாத்தா , அப்பா , உறவுகள் என்று குடும்பமே தெருக்கூத்து கலைஞர்களாக இருக்க, தான் சிறிய வயதிலேயே பார்த்து, கற்று, அனுபவித்து வந்த தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை மையமாக வைத்து வெங்காயம் என்கிற படம் மூலம் திரைப்பத்துறைக்குள் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் சங்ககிரி ராஜ்குமார். அந்தப்படம், அவருக்குச் சிறப்பான அங்கீகாரத்தைக் கொடுத்த நிலையில், ஒன் என்கிற படத்தை இயக்கிக் கொண்டே, தெருக்கூத்திலும் கால் பதித்து வருகிறார்.
அவரது குழுவினர்கள் நடத்தும் பிரமாண்டமான தெருக்கூத்து நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி காலை 10 மணி , மதியம் 3.40 என்று இரண்டு காட்சிகளாகச் ,சென்னை தியாகராய அரங்கில் நடைபெறுகிறது.
டிக்கெட்டுக்கு 95664 57524
நந்திக்கலம்பகம் என்கிற தலைப்பில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியைக்காண பலரும் ஆவலுடன் டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறும் சங்க்கிரி ராஜ்குமார், “`கி.பி 856-ல் வாழ்ந்த இரண்டாம் நந்திவர்மனுடைய வரலாறுதான் 'நந்திக் கலம்பகம்'. அதைத் தெருக்கூத்து வடிவத்தில் கொடுக்கப்போகிறோம். தமிழ் மொழிக்காக எத்தனையோ பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இவர்தான் முதலாவது என்று சொன்னால் அது மிகையாகாது.
நந்திக்கலம்பகம், கம்போடியாவில் பத்து மாதங்களுக்கு முன்பே அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஏனென்றால், கம்போடியாதான் நந்திவர்மனின் பூர்வீகம். காஞ்சியை ஆட்சி செய்த பல்லவ மன்னர்கள், கடல் கடந்துபோய் மற்ற இடங்களீல் சிற்றரசர்களாக இருந்தார்கள். இந்த நந்திவர்மனுடைய பெரியப்பா தலைமுறையில வருகிற வாரிசுகளுக்கே முடிசூடி மன்னனாக்கி வந்தார்கள் ஒருகட்டத்தில், இரண்டாம் பரமேஸ்வர வர்மன், போரில் இறந்துவிட, அவருக்கு அடுத்து அவர் பையனை முடிசூட வைக்கலாம் என்று முடிவுசெய்கிறார்கள். அவனோ, சிறுவன். சரி, நமது வம்சாவளியில வேற யாராவது இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்து, கம்போடியாவில் இருக்கும் முதலாம் நந்திவர்மனை மன்னராக முடிசூட்டுகிறார்கள். அவருடைய பேரன் இரண்டாம் நந்திவர்மனைப் பற்றியது தான் நந்திக்கலம்பகம்..” என்கிறார்.
நாளுக்கு நாள் புதிய விஷயங்களைப் புகுத்திக் கொண்டே இருக்காவிட்டால், எந்தக்கலைகளையும் காப்பாற்ற முடியாது என்று கூறும் ராஜ்குமார், குறள்கூத்து என்று ஒரு புதிய வடிவைத் தெருக்கூத்தில் புகுத்தியிருக்கிறார்.
"இராமயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மக்கள் மத்தியில் சுலபமாகப் பதிந்து நிலைத்து நிற்பதற்குத் தெருக்கூத்து முக்கியக்காரணம். கூத்து வடிவில் சொன்னால், எதுவும் எளிதாக மக்களைச் சென்றடைந்துவிடும் . ஆகவே, தமிழனின் சிறப்புகளில் ஒன்றான உலகப்பொதுமறையாம் திருக்குறளைத் தெருக்கூத்து வடிவில் தரும் முயற்சியே குறள் கூத்து..” என்கிறார் ராஜ்குமார்.
குறள்கூத்தைக் காண sankagiri Rajkumar dir என்ற YouTube சேனலை Subscribe செய்யுங்கள்